‘ அசதோமா சத் கமய ‘

‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக! பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.!’

‘ தமசோமா ஜோதிர் கமய ‘

‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப் போவாயாக ‘

‘ ம்ருத் யோமா அமிர்தம் கமய ‘

மரணத்திலிருந்து என்னை மரணமில்லா இடத்திற்கு அழைத்துப் போவாயாக. தன் புத்தியை போற்றி, புகழ்ந்து தன் புத்தியை வணங்கி பாடிக் கொண்டு போனவர் உச்சந்தலையில் ‘சொத்’தென்று ஈரம் விழுந்தது. எச்சம்… பறவை எச்சம். மீன் தின்ற நாறும் எச்சம். நண்டு குதறி, அழுகல் உண்டு களித்த எச்சம். நிமிர்ந்தார். ஒற்றை பெட்டை கொக்கு ‘ க்ராக் ‘ என்று சிரித்து போயிற்று. திமிர். பெட்டைத் திமிர். கன்னித் தன்மையான திமிர். புத்தி இருக்கும் இடத்தை எச்சம் செய்யும் திமிர். ‘க்ராக்’ மறுபடி கேலி செய்தது.

அவர் பார்வை கூராயிற்று. கொக்கின் நெஞ்சில் பதிந்தது. புத்தி வேகம் பார்வை வழியே கொக்கு இருதயம் துளைத்துக் கிழித்தது. ‘ க்ராக் ‘ கொக்கு நெஞ்சு பிளந்து, தரை நோக்கி வந்து தாக்கி செத்தது.

அவர் நடந்தார். கொக்கு கால் பரப்பி அகல விரித்து செத்துக் கிடந்த இடம் தாண்டினார். ‘எந்த அவமரியாதையும் புத்திசாலி பொறுக்கமாட்டான். புரிந்து கொள். அறிஞரை மதிக்க கற்றுக் கொள்.’ கடந்து போனார். கொக்கு உடம்பை நாய் கவ்வியது.

ஆறு, சோலை, வயல், பூந்தோட்டம் தாண்டி ஊர் தெருவில் நுழைந்தார். தெரு வெறிச்சென்று இருந்தது. நடுப்பகல் அவரவர் வேலை அவரவருக்கு.

வீடுகள் கடந்தார்.

ஒரு வீட்டில் பாத்திர சப்தம் கேட்டது. அறுசுவை உணவு வாசனை வீசியது.

வாசலில் நின்றார்.

‘ பவதி பிட்சாம் தேஹி ‘

உரக்கச் கூவினார்.

பாத்திர சப்தம் தொடர்ந்தது.

‘ பவதி பிட்சாம் தேஹி ‘

மறுபடி கூவினார்.

யாரோ பெண்மணி. சுமங்கலி. சுமந்து பல பெற்றவள். நடந்து வாசலுக்கு வந்தாள். கைகூப்பினாள்.

‘பவதி பிட்சாம் தேஹி ‘

” வரவேண்டும். உள்ளே வேலையாக இருக்கிறேன். அவசியம் உணவு தருகிறேன். அமருங்கள். ” திண்ணை காட்டினாள்.

” இருக்கட்டும்… பசி.”

” உடனே உணவு தரப்படும். அமருங்கள். ”

” பொறும். என் கடமைகளை முடித்துவிட்டே உம்மை கவனிக்க முடியும். ”

” நான் அந்தணன். வேத வித்து.”

” எவரானால் எனக்கு என்ன? ”

” என் பார்வை பொல்லாதது.”

” என்னை ஒன்றும் செய்யாது. ”

” நெஞ்சு வெடிக்கும்.”

” கொக்கா? நெஞ்சு விட்டு சாக? நான் பத்தினி. என் புருஷனுக்கு சிஷ்ருஷை செய்வதில் மும்முரமாய் இருக்கிறேன். கடவுளே வந்தாலும் கவனிக்கமாட்டேன்.”

” இது அகங்காரம் ”

” இல்லை இது கடமை. என் புருஷனே என் தெய்வம். வேறு தெய்வம் எனக்கில்லை. அவர் உறங்கப் போகிறார். அவர் உறங்கியதும்தான் உனக்கு உணவு. அதுவரை காத்திரு. ”

” ஹா…” கத்தினார்.

” ஹா… ” அலட்சியப்படுத்தினாள்.

உறுத்துப் பார்த்தார். அவர் பார்வை திருப்பி அவரை அடித்தது. மயக்கம் வந்தது. தடுமாறினார். தூண் பிடித்தார். இப்படி நடந்ததே இல்லையே? யார் இவள்? தேவதையா? யஷிணியா? இல்லை பரம்பொருளின் உடன் துணைவி பார்வதியா?

” இல்லை. நான் மனுஷி. பத்தினி. ” அவர் மனசு புரிந்து அவள் பதில் சொன்னாள். ” என் பர்த்தாவின் சுகமே என் கடமை. கடமையைச் செய்பவளை கடவுளும் அசைக்க முடியாது. இது தெரியாதா? இது படிப்பேயில்லை. இத்தனை முட்டாளா நீ? அட மண்டூகமே. ”

அவள் வார்த்தை நெருப்பாய் அவரைத் தாக்கியது.

தடாலென்று காலில் விழுந்தார்.

” எனக்கு ஞானம் தா தாயே.”

” ஞானமா? அதெல்லாம் தெரியாது. என்னைவிட உயரந்தவன் உண்டு. அவனிடம் இருக்கலாம். ஞானம். அங்கே போ.”

” யாரது?”

அவள் பெயர் சொன்னாள்.

மறுபடி வணங்கி தன்னிலும் வலியானை தேடி ஓடினார்.

தன்னால் அசைக்க முடியாத சுமங்கலிக்கு தெரிந்த வலியவன், அவளையும் விடப் பெரியவன். பெயர் சொல்லி விசாரித்தார்.

ஊர்கோடி குடிசை காட்டினார்கள்.

நிணநாற்றம் மூக்குத் துளைத்தது.

அவன் ஆடு அறுத்து கூறு போட்டான். மிஞ்சியவைகளை காக்கைகளுக்கும், நாய்களுக்கும் போட்டான். நிணம் மூக்குத் துளைத்தது.

மாமிசம் விற்று அரிசி வாங்கினான். மாமிசம் விற்று காய்கறிகள் வாங்கினான். பெரும் துண்டு விற்று விசிறி வாங்கினான்.

அரிசி, காய்கள் மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொன்னான். இடம் சுத்தம் செய்தான். சமைத்த பொருட்கள் வாசலுக்கு வந்தன. வயதான தாய்க்கும், தந்தைக்கும் பிசைந்து ஊட்டினான். தட்டில் குழந்தைகளுக்கு பரிவோடு பகிர்ந்து தந்தான். அவர்களுக்கு கதைகள் சொன்னான். தனக்கு இடப்பட்ட சோற்றை இரண்டாய் பிரித்து தான் உண்டு மற்றது மனைவிக்குக் கொடுத்தான். தாயும், தந்தையும் தூங்க, வெப்பம் தீர அவர்களுக்கு விசிறினான். மனைவி உண்ட பின் விசிறி வாங்கி விசிற அப்பாவின் கால் பிடித்து தூங்கச் செய்தான்.

” ஐயா”

” வாரும் ” கால் பிடிப்பதை நிறுத்தவில்லை.

” உலகில் உயர்வானது எது? ”

” குடும்பம். கூடி வாழ்தல்”

அவர் அந்தணர், கசாப்பு கடைக்காரனிடம் கை கூப்பினார்.

“இங்கே என் பிறப்புக்குக் காரணமான தாய், தந்தையரை வணங்கி உபசரித்தல், என் மலர்ச்சிக்குக் காரணமான மனைவியை பிரியத்துடன் நடத்துதல், என் அமைதியை, அன்பை என் குழந்தைகளில் நட்டு வளர்த்து வருதல், உறவும், சுற்றமும் மகிழ வாழுதல் ”

” ஐயா , தெய்வம்? ”

” தாய், தந்தையே தெய்வம் ”

” ஐயா, ஞானம்? ”

” மனைவியுடன் பிரியமாய் இல்லறம் நடத்துதலே ஞானம் ”

” ஐயா, வேதபாடம்?”

” என் இளைய தலைமுறைக்கு என் அறிவை, என் அன்பை தருதலே வேதபாடம் ”

” ஐயா, தொழில்? ”

” இவைகளைக் காரணமாக கொண்டதே சகல தொழிலும். தொழிலில் சிறுமை, பெருமை இல்லை ”

” ஐயா, எது வாழ்க்கை? ”

” கூடி வாழ்வது கோடி நன்மை”

” ஐயா, இது போதுமா?”

” இது இல்லாதது வெறும் கர்வம். வெறும் காலிக் குடம். அன்பு நிறையாத அறிவு எதற்கு உபயோகம்? அறிவு குடமெனில் அன்பு அமிர்தம். அமிர்தக் குடமாய் இரும். ”
அவர் வணங்கினார். விம்மினார். விம்மி விம்மி அழுதார்.

அழுதபடியே கண்கள் மூடிக் கொண்டார். அதற்கப் பிறகு அவர் யாரையும் எதன் பொருட்டும் பார்க்கவேயில்லை. அவர் பார்வை அவருக்குள் திரும்பிவிட்டது. அவரை ‘ யார்? ‘ என்று கேட்க வைத்தது. அந்தவிதப் பார்வைக்கு ‘ அந்தகரணம் ‘ என்று பெயர்.

-முற்றும்

[அந்தகரணம் – பாகம் 3]

[அந்தகரணம் – பாகம் 2]

[அந்தகரணம் – பாகம் 1]