Loading...

மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம்

மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம் என்ற அமைப்பு, பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை இந்த இயல்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த இயல்பின் அடிப்படைக் காரணத்தை ஆராயும் பொழுது, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் உறவோடும், நட்போடும் கைகோர்த்துக் கொள்கிறான் என்பது புரியும்.

ஒவ்வொருவரும் வாழ்வின் முடிவை தனியாகவே சந்திக்க வேண்டியிருப்பதால், அதைப்பற்றி சிந்திக்க விருப்பமின்றி, வாழ்நாள் முழுவதும் மிகவும் நம்பிக்கையான, உண்மையான, எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்கின்ற, என்றும் பிரியாத உறவுக்காகவும், நட்பிற்க்காகவும் மனிதன் ஏங்குகின்றான்.

ஆனால், நம்மை சுற்றி இருக்கும் உறவு சிக்கல்களையும், துரோகங்களையும்,துக்கங்களையும், பார்க்கும் பொழுது அப்படி ஒரு உறவு சாத்தியமா. அப்படி ஓர் நடப்பு எங்கேனும் உண்டா என்ற கேள்வி நம்முள் எழுகின்றன.

பணமும் பதவியும் அதிகாரமும் அறிவாற்றலும் வேறு எந்த மேன்மையும் மனிதனை இந்த வலியிலிருந்து விடுதலை செய்ய வலுவானதாக இல்லாதபொழுது மனித வாழ்க்கையில் நிரந்தர சந்தோசத்திற்கு இடமில்லையே, நிம்மதியே கிடைக்காதா என்ற புலம்பல் மிஞ்சுகிறது.

தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் இந்த ஏக்கத்தை ஓரளவு பூர்த்தி செய்யும் போதிலும், வாழ்நாள் முழுவதும் நம் மீது உண்மையான அக்கறையோடும் எல்லையில்லா கருணையோடும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்த ஒருவர் இல்லையா என்ற கேள்விக்கு இருக்கிறார் என்ற பதில் உண்டு. அவர் பெயர் ``குரு``.

தனிமையை முழுவதுமாய் அனுபவித்து உணர்ந்து அதைப் பற்றிய பயம் முற்றிலும் நீங்கி அதனால் எந்த உறவின் மீதும் நட்பின் மீதும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதவராய், இனிமையானவராய் எல்லா உயிர்களின் மீதும் அளவில்லாத கருணை உடையவராய் இருப்பவரே ``குரு``.

அப்படி ஒரு குரு ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவருக்கு வேறு ஏதேனும் வேண்டுமா. குருவின் துணையால் பயம் நீங்கிய மனிதனின் ஆற்றல் வெற்றிகளைக் குவிக்கும். அவனுடைய நிதானமும், அமைதியும், உறவு மற்றும் நட்பு வட்டத்தை விரிவாக்கும். வாழ்க்கையை மலரச் செய்யும்.

இடைவிடாது எல்லா உயிர்களுடனும் தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. நம்முடைய கர்வம், பேராசை, அகம்பாவம், பொறாமை போன்ற தடைகளே நம்மிடையே உறவு சிக்கல்களை உருவாக்குகின்றன.

மற்றவர்களின் குறைகளை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை நமக்குள் பார்க்க வைத்து, நம் குறைகளை உணர வைத்து அதன் மூலம் நம்மை சரி செய்து உயர் மனிதனாக்கும் குரு கிடைத்தால் நமக்கு சந்தோசத்திற்கு பஞ்சமேது. அப்படிப்பட்ட பேராற்றல் உடைய குரு தான் திருவண்ணாமலை மகான் கடவுளின் குழந்தை அடியாருக்கு நல்லான் யோகி ராம்சுரத்குமார்.

என்னை நேரில் வந்து தரிசனம் செய்ய தேவை இல்லை. ஹோமங்கள், ஆடம்பர பூஜைகள் தேவை இல்லை. விரதங்கள் தேவை இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து என் பெயரை மூன்று முறை சொல்லுங்கள் அது போதும். நான் ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவேன் என்று உறுதியளித்த தனிப்பெருங்கருணை யோகி ராம்சுரத்குமார்.

முக்காலமும் உணர்ந்த ஞானசூரியனாய் இருந்த போதும் சாதாரணனாய், பிச்சைக்காரனாய் உலா வந்த அருட்பெரும்ஜோதி யோகி ராம்சுரத்குமார்.

அவர் என்ன அவ்வளவு எளிமையானவரா, கருணை உள்ளவரா அழைத்தால் அவர் வருவாரா?

அழைத்துப் பாருங்கள் நிச்சயம் வருவார்.

அப்படி அழைக்கின்ற கூட்டம் தான் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம். அப்படி அழைத்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற குழுதான் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம். தங்கள் குருவின் கருணையால் குருவிடமிருந்து பெற்ற அனுபவத்தை மெல்ல மெல்ல மற்றவரிடம் பகிர்ந்து ஆன்மீக ஒளியை பரப்பிக் கொண்டிருக்கின்ற சுடர்களின் ஒருங்கிணைப்பு தான் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம்.

மாதம் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மணி நேரம் மனமாரப்பாடி நாமம் சொல்லி சத்விஷயங்கள் பேசி சிறிய விருந்துண்டு மகிழும் போது பெரும் பலம் இதன் அங்கத்தினர்களுக்கு ஏற்படுகிறது.

துன்புறுத்தி துவளச் செய்யும் பல பிரச்சனைகளுக்கு இம்மாதிரி சத்சங்கத்தில் சூட்சமமாகத் தெளிவு கிடைக்கிறது. எதிர்கொள்ளும் பலம் அதிகரிக்கிறது. பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும் கோபமும், படபடப்பும், ஆத்திரமும், அறவே நகர்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளே ஆழ்ந்து கிடக்கின்ற தன்மையும் அவர்களே அறியாமல் அவர்களுக்கு அதிகமாகின்றன. உறவுகளையும் நட்புகளையும் புரிந்து கையாளுதல் எளிதாகின்றன.

நமது கோவில்கள் ஆரவாரம் மிகுந்தவை. இன்றைய காலகட்டத்தில் நல்ல அதிர்வுகள் உள்ள கோவில்கள் ஆரவாரத்தில் நசுங்குகின்றன. ஹோமங்கள் புரிவதில்லை. புரியாது போனாலும் பங்கு கொள்வது உயர்வு என்பது பேதைமை. உபன்யாசங்கள் ஒரு தலைப்பட்சமானவை. அங்கே கேட்பவருக்குப் பங்கில்லை. மடங்கள் அசிரமங்கள் வரவு செலவு கணக்குகளில் சிக்கித்தவிப்பதால் அங்கு எல்லோருக்கும் சீரான மரியாதையை இல்லை. கொடுப்பார் பெரியோர் என்ற கொள்கைகள் உடையனவாக இருக்கின்றன. அரசியல் நெடியும் தற்போது அங்கே அதிகம். இவையெல்லாம் கடவுள் தேடலுக்கு புறம்பானவை.

ஆனால், கடவுள் தேடலுக்கு சத்சங்கம் தான் சரியான வழி என்று ஜகதகுரு ஆதிசங்கரர் சொல்லிருக்கின்றார். மற்ற குழுக்களுக்கும் சத்சங்கத்திற்கும் என்ன வித்தியாசம் எந்த வகையில் சத்சங்கம் உயர்வு

பேசிப் பிரிந்து விடுவதுதான் சத்சங்கத்தின் பலம். வேறு வகையில் சொன்னால் சுதந்திரமாகவும் கட்டப்பட்டும் இருப்பது. அடிமைப்படுத்துதலும் அடிமையாதலும் ஆன்மீகத்திற்கு எதிரானது.

கறவைகள் வேகமாக தாவரத்தை உண்டு தனியாக ஒதுங்கி அசை போடுவதைப்போல சத்சங்கத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளும், அதிர்வுகளும் அந்த தனி நபரை மீதி நாட்கள் மேம்படுத்தும்.

குருவோடு தினசரி சந்திப்பில் ஒருவரின் செயல்திறன் மங்கி மனம் மரத்து போகும். உணர்ச்சி இது இல்லாமல் கடவுள் தேடல் நடைபெற முடியாது. குருவின் அண்மையில் இருப்பதால் தனியே ஒரு மமதை ஏற்பட்டு தன்னை அவதானிக்கும் தன்மை குறைந்து போகும். ஆலமரத்தின் கீழ் ஒரு புல்லும் முளைக்காது. குரு தனக்கு நெருக்கமான சீடரை விலக்கி அனுப்புவது இதன் பொருட்டே. புலிக் குட்டி புலியாக வேண்டுமெனில் தனியே உலவி வருவது முக்கியம்.

துறவறத்தை திணிக்காமல், இல்லறத்திலேயே முழுவதும் உலவ விடாமல், இல்லறத்தாருக்கு இல்லறத்தில் இருந்தபடியே துறவுத்தன்மையை அதிகரிப்பதே சத்சங்கத்தின் நோக்கம். ஏனெனில் அகந்தையை துறப்பதே துறவு, மற்றதெல்லாம் வெளிவேடங்கள்.

குருவின் நாமத்தை உள்ளுக்குள் ஏற்றுக் கொள்ள உரத்துச்சொல்லிப் பழக வேண்டும். உரத்துச்சொல்லிப் பழக தேவையற்ற வெட்கம் தடுக்கும். அந்த வெட்கம் நீங்க சத்சங்கம் உதவும். பிறகு தானே சொல்லவும், தனியே சொல்லவும், வீட்டாரோடு அமர்ந்து தினம் தினம் சொல்லவும் எளிதில் பழக்கமாகும்.

குருவின் நாமமும் கடவுளின் நாமமும் மனமுருகி சொல்வதுதான் ஆன்மீகப் பாதையில் நீங்கள் வைக்கும் முதல் அடி. தொடர்ந்து அந்த குருவின் நாமமே சரியான இலக்கு நோக்கி அழைத்துக்கொண்டு போகும். நன்கு கனிய வைக்கும்.

இந்தக் கனிதலும் கடவுளை சரணடைதலும் ஒன்றே. கடவுளை குருவின் ரூபமாக உணர்கின்ற போது மனநெருக்கம் அதிகமாகி குதூகலம் பொங்குகிறது. குருவினுடைய பேச்சும் செயலும் விளக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு மனம் திடப்படுகிறது. இது வேதம் அறிந்து தெளிதல் போல அடர்த்தியான அனுபவம்.

ஒரு சத்சங்கத்தில் பெரியவர் சிறியவர் இல்லை, முதல்வர் கடையர் என்பதில்லை எத்தனை ஆயிரம் பேர் கொண்டதாக இருப்பினும் ஒரு குருவும் சீடனும் எந்த இடையூறுமின்றி துல்லியமாக கலந்துரையாட முடியும். இந்தக் கலந்துரையாடல் தான் உபநிடதம். வழிகாட்டும் விஷயம்.

ஒரு காலகட்டத்தில் அந்த சீடன் பக்குவம் பெற பலர் அவரை சூழ்ந்து கைகூப்பி விளக்கம் பெறுவார். தெளிவும் திடமும் பெறுவார். பிறகு குரு ஆவார்.

இந்த பரதகண்டத்தின் சனாதன தர்மம் இவ்விதம் தான் வளர்ந்து வந்திருக்கிறது. அந்நிய சக்திகள் எத்தனை மோதியும் அசைக்க முடியாத ஆலமரமாய் விழுதுகளோடு வளர்ந்திருக்கிறது .

காலப்போக்கில் இந்த சத்சங்கம் குறைந்து, தான் தோன்றித்தனமாக குழுமங்களாய் பிரிய சனாதன தர்மத்தில் நாடகத்தன்மை மலிந்துவிட்டது. சத்தியம் தேடல் குறைந்து விட்டது.

ஆட்டமும் பாட்டமும் பூஜையும் புனஸ்கரங்களும் ஆடம்பரத்திற்காக செய்ய கடவுள் தேடல் வெற்று சடங்காகி விட்டது. எல்லா ஆச்சார வகைகளும் அகந்தையைக் கொண்டு அகந்தையை வளர்ப்பவை.

சத்சங்கம் அகந்தைக்கு எதிரானது.அகந்தையை அறுப்பது.சத்சங்கம் என்பது தனிநபர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் அல்ல. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த குழுமம். சமூகவியலின்படி திருமணம் என்கிற பந்தம்தான் குடும்பங்களின் கூட்டு அமைய உதவி செய்கிறது.எந்த பந்தமுமில்லாமல் குடும்பங்களின் குழுமத்தை ஏற்படுத்துவது சத்சங்கம். இதுதான் கட்டுபாடுஇல்லாமல், சுதந்திரமாகவும் இல்லாமல் இருக்கின்ற தனித்தன்மை. இந்த தன்மையுடையவர் தான் கடவுளுக்கு அருகே செல்ல முடியும். கடவுள் தேடல் வெகு சிலருக்கே என்பது அபத்தம். எல்லா உயிர்களும் கடவுளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

“ஒருமையுடன் நின் திருவடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

என்கின்ற வள்ளலாரின் கதறல் சத்சங்கம் வேண்டும் என்ற தாபத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன.

“சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிச்சலத்வே ஜீவன்முக்தி“

என்கின்ற ஆதிசங்கரின் கோஷம் மிக சத்தியமானது. இது ஒன்றே வழி என்று உறக்கக் கூறுவது.

கடவுள் தேடல் மனிதனின் இயல்பு. இயல்பாய் இருக்க சொல்லித் தருவது சத்சங்கம். சேர வாரீர் ஜகத்தீரே.