[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …]

உலக விஷயங்களை பேசுவதை விட நாம் அறிந்த ஒரு மகானின், ஒரு குருவின் கதையை பேசுவது பரமானந்தமானது.

அதுவும் வாழும் காலத்திலேயே வாழ்ந்த ஒரு குருவைப் பற்றி, விதம்விதமான சம்பவங்களைப் பற்றி, அவரால் நன்மைகள் அடைந்ததைப் பற்றி, அவர்களால் தெளிவு பெற்றவர்கள் பற்றி , அவரால் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகப் பெற்றவர் பற்றிப் பேசுவது மிகுந்த சந்துஷ்டியை அளிக்கும். நம்பிக்கையை அளிக்கும்.

வாழ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்க்கு கருணை அதிகம் சுரக்கிறது. வாழ்வின் மீது நம்பிக்கை அற்றவர்கள் தான் கோபமானவர்களாகவும், கொடுஞ் சொல்லர்களாகவும், குறுகிய மனப்பான்மையுடையவர்களாகவும் ஆகிறார்கள்.

மகானுடைய அண்மை என்பது ஒரு சத்சங்கம். மகானுடைய அண்மையைப் பெற்றவர்கள் இன்னொரு சத்சங்கம்.

ஞானியை தெய்வத்தின் சொரூபம் என்று வியந்து கைகூப்பி மனம் கரைய தொழுது நிற்கலாம். ஆனால் ஞானியை வியந்தவர்கள் இன்னும் சௌலப்யமானவர்கள். இன்னும் இனிமையானவர்கள். அவர்கள் தங்கள் கர்வம் அழிந்து தங்கள் கசடுகள் நீங்கி தான் மறுமலர்ச்சி பெற்றதை விவரித்துச் சொல்ல சம்பவங்களாய் விவரிக்க பூர்வத்தைப் பேச அந்த அனுபவம் கத்தியைப்போல நெஞ்சில் தைக்கிறது. ஞானியினுடைய மேன்மை இன்னும் தெளிவாக நெஞ்சில் இறங்குகிறது. ஞானியை பற்றி இரண்டு பக்தர்கள் பேசுவது தனிருசி. உலகத்தில் பேசித்தீர்க்க ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்க வெகு சிலருக்கே ஒரு மகானைப்பற்றி மாற்றி மாற்றிப் பேச முடியும்.

உத்தரவிட வேண்டிய அரசனாக, அதிகாரம் பெற்றவனாக அந்த நவாப் இருந்தாலும், ஸ்ரீராகவேந்திரர் பற்றி அறியும் விருப்பத்தில் குழந்தை போல் இருந்தான். இன்னும் சொல்லுங்கள், இன்னும் சொல்லுங்கள் என்று ஆவலுடன் கேட்டான்.

சத்தியத்தைப் பற்றி கேட்பதற்கு எல்லோருக்கும் கிடைக்காது. எப்போதும் கிடைக்காது. அது எப்போதேனும் ஒருமுறை சிலருக்குத் தான் கிடைக்கும். உடனே பிடித்துக் கொண்டால் போயிற்று. விட்டால் அடுத்த ஜென்மம்தான், வேறொரு பிறவியில் தான் அதைக் கேட்க முடியும்.