விரலால் மலர் தொட்டார். சின்ன அதிர்வு தெரிந்தது. அட மலர் அதிர்கிறதே எதனால்? ஒலியதிர்வு. குழல் வாசித்திருப்பானோ! ஒரு முருங்கை மரத்துக் கிளையை தொட்டார். உதிர்ந்தது. குழல்தான். குரல் அல்ல. குழல், தாவரங்கள் ஒலியை உறிஞ்சியிருக்கின்றன. இனிய ஒலியால் சற்று விரிவடைந்திருக்கின்றன. முருங்கை முழுக்க புதுக் கொழுந்துகள். மரம் இசையால் விரிவடைந்திருக்க வேண்டும். கொழுந்துகள் வளர்திருக்க வேண்டும்.

எதுவும் தப்பாது. என் கண்களிலிருந்து எதுவும் தப்பாது. என் கண்கள் சூட்சமமானவை. சூரியனை நிகர்த்தவை. என் புத்தியின் விரிவு மொத்தமும் என் கண்களில் நிற்கின்றன.

” உங்கள் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை அந்தணரே. உங்களுக்கு என்ன வேண்டும்? ” நேற்று கோவில் அதிகாரி விழுந்து வணங்கி தலைகுனிந்து கேட்டான்.

” ஒரு வேளை உணவு. நாலு கவளம் அன்னம்! ”

” தருகிறேன் அந்தணரே!” கை, கால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

மண்டபத்தில் இலை போடப்பட்டது. தண்ணீர் குவளையோடு பலர் காத்திருந்தார்கள். குளத்தில் இறங்கி குனிந்து ஜபதபம் முடியும் வரை அமைதியாய் இருந்தார்கள்.

சகலமும் முடிந்து வந்து அமர்ந்ததும் கைக்கு ஜலம் விட்டார்கள். பரிசாரகன் பரிமாற தள்ளிப்போய் தள்ளிப்போய் கைகட்டி காத்திருந்தார்கள்.

பசுந்தயிர்விட்டு, நாலு கவளம் அன்னம். வழுதுண்டைக்காய் பிரட்டல்.

” போதுமா இன்னும் போடவா? ” கேட்டார்களா.

” நெடுந்தொலைவு நடந்தக் களைப்பு உடம்பில் தெரிகிறதே. இன்னும் சிறிது சாப்பிடலாமே! ” உபசரித்தார்கள்.

” ஒரு மனிதன் உயிர் வாழ இவ்வளவு உணவு போதும். ”

” உயிர் வாழ போதும்; உடல் வலுவோடு இருக்க வேண்டாமா? ”

” வலுவு, புத்தியில் உண்டு பரிசாரகனே ”

” நான் அதற்கு செல்லவில்லை. காட்டு வழியில் போகிறீர்கள். ”

“அதனால் என்ன? ”

” துஷ்ட மிருகங்கள் என்னை என்ன செய்ய முடியும்? ”

” மிருகங்களுக்கு தெரியுமா நீங்கள் அந்தணர் என்று? கள்வர்கள் அறிவார்களா நீங்கள் வேத வித்தகர் என்று? இது நல்ல ஊர். நல்லவர்களை உபசரிக்கும் ஊர். இன்னும் நாலு கவளம் சாப்பிடுங்கள். ”

” போதும் ”

” ஏன்? ”

” நல்லவர் பரிமாற நாலு கவளம். இதுவே அதிகம். ”

” ஐயா ஒரு புலி துரத்தியது. ஓட வேண்டாமா? ஒட வலிவு வேண்டாமா? ” பரிசாரகன் குரல் உயர்த்தினான்.

உடனே அவனுக்கு பாடம் கற்பிக்க மனசு தீர்மானித்தது.

” புலி துரத்தினால் ஓடமாட்டேன். ”

” அது நாலு கவளம் சாப்பிட இடது கையோ, வலது காலையோ தந்துவிடுவீர்களா?”

சகலரும் சிரித்தார்கள்.

மொத்த பேருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

” நின்று பேசுவேன். ”

” என்ன? ”

” நின்று புலியோடு பேசுவேன். துரத்துவேன். ”

” வேதம் சொல்லி புலி துரத்த முடியுமா? ”

” எதுவும் செல்லாது துரத்த முடியும். ”

” எப்படி? ”

” நீ ஒரு புலி… வேண்டாம் அத்தனை கவுரவம் உனக்கு தகுதியல்ல. நீ காட்டெருமை.. புலியைவிட காட்டெருமை மூர்க்கமானது அல்லவா? நீ காட்டெருமை. என்னை உன் தலையால் முட்டு. ”

பரிசாரகன் சிரித்தான். அனைவரும் சிரித்தார்கள்.

” முட்டு. மண்டை பெரிதாக இருக்கிறதே… முட்டு என்னை. ”

பரிசாரகன் முட்ட… உடம்பு வளைத்து குனிந்தான். எருமை போல் நின்றான்.

” முட்டும் முன் என்னைப் பார் ”

பார்த்தான்.

அவர் உற்று நோக்கினார். உள்ளே பார்வை செலுத்தினார். மனசு மொத்தமும் குவிந்து கண்ணில் தீச்சுடர் ஏற்றி அவன் நெஞ்சுக் காலையில் கவனத்தை வைத்து திருகினார். அவன் தள்ளாடினான். ஒரு அடி முன்னேறினான். ‘ ஹூம் ‘ மூச்சு புறப்பட்டது. பரிசாரகன் ‘பொத்’ தென்று மோதி விழுந்தான்.

-தொடரும்