உ
யோகிராம் சுரத்குமார்
பெண்
[சக்தி புத்தகத்திலிருந்து …]
“பெண்தான் தலைமை. பெண்தான் பாதுகாப்பு. பெண்தான் உணவு தேடிக் கொண்டு வருகின்ற விஷயம். பெண்தான் ஒரு கூட்டத்தின் தீர்மானம். அவள் தான் தலைவி”
“இது எப்போது நடந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்” பண்டிதர் வினவ வைத்தீஸ்வரர் மெல்லச் சிரித்தார்.
வெகுநாளைக்கு முன்பு மொழி, நாகரிகம் வருவதற்கு முன்பு, உணவு நாகரிகம் வருவதற்கு முன்பு, உடைகளின்றி மனிதர் திரிந்த பொழுது, வெட்கமின்றி விலங்குகளாக அலைந்த பொழுது பெண்தான் ஆளுமை செய்து இருக்கிறாள்”
“அதாவது சிங்கத்தோடு சிங்கமாக, புலியோடு புலியாக வாழ்கிற பொழுது அப்படி இருந்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?”
“ஆமாம். குழந்தைகளை பாதுகாப்பதும், உணவுக்காகப் போவதும் பெண்ணுடைய வேலையாகவே இருந்திருக்கிறது.”
“அப்பொழுது ஆணுடைய வேலை என்ன?”
“பாதுகாப்புக்கு வருவதும், அழைத்தபோது வந்து கூடி விட்டுப் போவதும்தான் ஆணினுடைய வேலை. பிற நேரங்களில் ஆண் வெறும் சோம்பலாக கிடப்பான். புத்தியின்றி கிடப்பான். தாக்க வலுவிருந்தும் எப்படி தாக்குவது என்று தெரியாமல் உதை வாங்கிக் கொண்டு வருவான். ஒரு பெண்ணின் சூட்சுமம் கெட்டிக்காரத்தனம் ஆணிடம் அப்பொழுதும் இல்லை. இப்பொழுதும் இல்லை.”
“ஆஹா… கேட்கவே நன்றாக இருக்கிறது”
ஜகதாம்பா வாய்விட்டு சிரித்தாள்.
“ஏன் அவ்விதம் இருந்தது என்று சொல்கிறீர்கள்”
“எப்பொழுதெல்லாம் உயிர்வாழ்தல் கடினமாக இருக்கிறதோ, எப்பொழுதெல்லாம் உயிர் வாழ்தல் பற்றி மிகுந்த அக்கறை தேவைப்படுகிறதோ அப்பொழுது பெண்தான் முன் வந்து நிற்கிறாள். கடினமான விஷயங்களை அவளால்தான் தாங்க முடியும். வலி பொறுக்கவும் பதிலடி கொடுக்கவும் பெண்ணுக்கு இருக்கின்ற வேகம் ஆணுக்கு அப்போதும் இல்லை இப்போதும் இல்லை.”
“இது நம்பும்படியாக இல்லையே”
“நம்பக் கூடாது என்று மனம் பக்குவப்பட்டு விட்டால் நம்புவது கடினமாக இருக்கும்”
ஆண் பெண் பேதங்கள் இதுபற்றி யோசிக்கிறவர்களுக்கு இல்லாமல், இது ஒரு ஆராய்ச்சி என்று உட்கார்ந்து கொண்டால் உள்ளே சக்தி மிகுந்தவர் யார் என்பது நன்றாகப் புரிந்து போகும்.
பெரிய கூட்டம் அதில் ஈனுகின்ற தன்மையுடைய பெண் வயதாகி மூப்படைந்தாலும் தன்னுடைய புலன்கள் கூர்மையாக மற்றவர்களை ஏவி இதைச் செய், அதைச் செய் என்று கட்டளையிட்டு அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பை கவனித்து வந்தாள். தாக்குதல் எதிரியிடமிருந்து கடினமாக, அந்தக் கடினமான தாக்குதலை முறியடிக்க அவளே நேரில் வந்து முழு வேகத்தோடு மோதி தன் குலத்தின் பாதுகாப்பை மேற்கொண்டாள். அழிவிலிருந்து தடுத்து நிறுத்தினாள். அவள் பொங்கி கோபப்பட்டு என் குழந்தைகளையா வதம் செய்ய வருகிறாய் என்று ஆத்திரப்பட்டு மிகுந்த வேகத்தோடு எதிரியைத் தாக்கினால், அதை சமாளிப்பது கடினமாகத்தான் எதிரிகளுக்கு இருந்திருக்கிறது. எதிரிகள் வருவார்கள். எப்படி வருவார்கள் என்கிற சூட்சுமமும் அவளுக்கு இருந்தது.
சிறிய ஓசை கூட, சிறிய அசைவு கூட அவளால் கவனிக்கப்பட்டு இருந்தது. எல்லா நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவள் பாதுகாப்பு பற்றிய ஒரு பதட்டத்தோடு தன் கூட்டத்தில் வலம் வந்தாள். அந்தக் கூட்டம் அவளை உள்ளங்கையில் தாங்கி மிக நன்றாக கவனித்துக் கொண்டது. அவளுக்கு ஏவல் படைகள் செய்து ஆண்களும் பெண்களும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நீங்கள் சொல்வது பூச்சிகளின் கூட்டம் போல இருக்கிறது. தேனீக்களும், எறும்பும், ஈயும் இப்படித்தானே வாழ்கின்றன”
“அவை மட்டுமல்ல, சிங்கமும், புலியும் கூட இவ்விதம்தான் வாழ்கின்றன. குட்டிகளை காக்கும் இந்த பெண் சிங்கத்திற்கு தான் பொறுப்பு அதிகம். ஆண்சிங்கம் அனேகமாய் சோம்பலாய் வெயிலில் படுத்திருக்கும் அல்லது நிழலில் இளைப்பாறும்”
“ஆனால் ஆண் சிங்கம் தானே தலைமை”
“வாஸ்தவம். இங்கே தலைமை மட்டும் மாறுதலாக இருந்தது. நீங்கள் சொல்லும் ஈக்களின் விசேஷத் தன்மை இங்கும் இருந்தது.”
“இது எப்படி மாறி இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்”
“உணவு சமைக்க தெரிந்தபிறகு பச்சை இரத்தம் இல்லாமல் நெருப்பில் வதக்கி உணவு உண்பது தெரிந்தபிறகு இந்த போர்க்குணம் பெண்ணுக்கு குறைந்திருக்கும் என நினைக்கிறேன்”
“சமையலை யார் கற்றுக் கொடுத்தார்கள்”
பண்டிதர் கேட்டார்.
“இது சொல்லித் தரப்படவில்லை. எதேச்சையாய் நிகழ்ந்தது.”
“எப்படி நிகழ்ந்திருக்கும்”
ஜெகதாம்பாள் வினவினாள்.
“காட்டு மூங்கில் உரசி நெருப்புப் பிடித்து வெப்பத்தில் சருகுகள் எல்லாம் ஏரிய, அந்த சருகு காற்றடித்து பறக்க பல இடங்களில் நெருப்பு போய் விழ காடு முழுவதும் தகதகத்து எரிய உள்ளுக்குள்ளே மாட்டிக்கொண்ட மான்களும், முயல்களும், உடும்புகளும், பறவைகளும், கிழங்குகளும், தானிய வகைகளும் பொசுங்க மழை பெய்து நீரடித்த பிறகு வேறொரு விதமாக வர அதை தேடி மனிதர்கள் போயிருப்பார்கள். எடுத்து எப்படி இருக்கிறது என்று உண்ண, பச்சை மாமிசத்தை விட வதக்கிய மாமிசம் பல்லுக்கும் வாய்க்கும் இதமாக இருப்பதை உணர்ந்து நெருப்பால் ஏற்பட்ட விளைவு இது என்று புரிந்து கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களே நெருப்பை எப்படி செய்வது என்பதை கண்டுபிடித்து கட்டையை கட்டையால் உரசி சருகு பற்றவைத்து விறகு எரிய வைத்து அந்த விறகுகளுக்கு நடுவே மாமிசத்தை எடுத்துப்போட்டு அது நன்கு பொசுங்கியதும் எடுத்து உண்டார்கள்.”
அந்த உணவு பழக்கமாக மனிதனுடைய வாழ்க்கையில் வேகம் குறைந்துவிட்டது. பச்சை மாமிசத்தில் இருந்து விலகி விட அவர்கள் போர் குணம் குறைந்துவிட்டது.
“இது எப்படி பெண்ணை தலைமையில் இருந்து விலக்கியிருக்கும்”
“பெண் உச்சகட்ட போராளி, மிதமான போராளி அல்ல. ஒன்று அவள் அடித்து சர்வநாசம் செய்வாள் அல்லது அமைதியாக இருப்பாள். இரண்டுக்கும் நடுவில் வெறும் அலட்டலாக இருப்பதை பெண் விரும்பியதில்லை. வெறும் நாடகமாக தாக்குவது போல் நடிப்பதை பெண் விரும்புவதில்லை. ஆண்கள் அதை விரும்புவது போன்ற நாடகமாக்கினார்கள். தாக்குவது போல வேகமாக ஓடி பிறகு திரும்பி வந்தார்கள். நெருப்பு கையில் இருப்பதால் அது மிகப்பெரிய ஆயுதமாக்கி மற்ற விலங்குகளை அண்ட ஒட்டாமல் செய்துவிட்டது.”
பெண் - பகுதி 2 | Writer Balakumaran - பாலகுமாரன்
[…] [பகுதி 1] […]