உ
யோகிராம் சுரத்குமார்
தன்னை அறிதல்
[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …]
தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை.
மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது. வெளியே பார்க்கும் அளவுக்கு உள்ளே பார்க்க மனதிற்குத் தெரியவில்லை. மனம் உள்ளே தான் இயங்குவதைப் பார்க்க துவங்கியதும், வெளியே தெரியும் விஷயங்கள் பார்வையிலிருந்து மறைந்து போகின்றன.
கண் தானாக மூடிக் கொள்கிறது. பிறகு காதுகளும் உள்நோக்கி திரும்பி விடுகின்றன. பிறகு காது கேட்கும் தன்மையும் உள்நோக்கி திரும்பி விடுகின்றது. எல்லா புலன்களும் மெல்ல மெல்ல நடு மையத்தை பார்க்க துவங்கி விடுகின்றன. இதனால் நடு மையம் அதீத உணர்வும் கொள்ளத் துவங்குகிறது.
உறங்கிக் கிடந்த அந்த உணர்வு விழித்தெழ ஆரம்பிக்கிறது. தன்னை இனம் பார்க்க ஆரம்பிக்கிறது.
தான் தான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டிருந்த மனம், தான் வெறும் நினைவுகளின் தொகுப்பு என்பதை புரிந்துகொண்டு நினைவுகளை உதிர்த்து விட்டு தன்னை இயக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருகிறது.
எதனால் உடம்பு இயங்குகிறதோ, எதனால் புத்தி இயங்குகிறதோ, எந்த புத்தியால் மனம் என்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறதோ இவை எல்லாமே தனித்தனியாய் மனதிற்கு தெரியவருகின்றன.
தான் முக்கியம் அல்ல என்று தெரிந்ததும் மனம் தொழிலை நிறுத்தி விடுகின்றது. மனதில் இருந்து விடுபட்ட புத்தி ஒருவித அமைதிக்கு போகிறது. அந்த அமைதியால் நாடித் துடிப்பும், இருதயத் துடிப்பும் மிருதுவாகின்றன.
உள்ளே சுடர் விட்டுப் பிரகாசிக்கின்ற ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட முக்கியமானதாக போய்விடுகின்றது.
அந்த தரிசனம் மிகப்பெரிய சந்தோசத்தை, ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது. நூறு பெண்களை ஒரே நேரத்தில் கூடிய ஆனந்தம் அதை இனங்கண்டு கொண்டவுடன் வந்து விடுகின்றது.
முதலில் தரிசனம் தந்த விஷயம் விருட்டென்று பெரிதாகி ரசித்த மனதையே விழுங்கிவிடுகின்றன.
இனி அங்கு புத்தியோ, மனமோ இல்லை. கற்றலோ, கேட்டலோ இல்லை. உடம்பு, புத்தி, மனம், உயிர் எல்லாம் ஒன்றேயாக ஒரு பரவச நிலை ஏற்படுகின்றது. தக தகவென்று ஒரு பூரணமாய் ஜொலிக்கின்றது.
அப்போது பேச்சும் இல்லை, மூச்சும் இல்லை, சுவாசம் நின்று போய் உடம்பு விறைத்து கட்டை போலாகி, உயிர் வழியே உலக தரிசனம் ஏற்படுகின்றது.
கண் வழியே பார்ப்பதும், காது வலியை கேட்பதும், உடல் வழியே உணர்வதும் ஒரு சாதாரண நிலை. உயிர் வழியே பிரபஞ்சத்தை உணர்வது அசாதாரண நிலை.
கண் பார்க்கும். ஆனால் கண் பார்த்த பார்வைக்கும் அப்பால் ஒரு விஷயம் தெரியும். எதிரே ஒரு உயிரின் சூட்சமம் தெரிந்துவிடும். இந்த உயிரின் பேச்சை கேட்க முடியும்.
அந்த உயிரோடு தன் உயிரை கலக்க முடியும். பரம சுகம் என்பது இதுதான். உயிரை உயிர் உணர்வதுதான் ஆத்ம தரிசனம். தானே எல்லாமும் உன் என்கிற உணர்வுதான்.
எங்கிருந்து இதையெல்லாம் என்ற கேள்வி உடனே வரும். புலன்கள் ஆத்மாவை உணர்ந்தது போல, ஆத்மா விகசித்து தன்னை அறிந்தது போல, தன் மூலத்தை, தான் தோன்றிய புள்ளியை ஆத்மா தேட, திடீரென்று அதுவும் பிரசன்னமாகி விடுகிறது.
இதுதான் கடைசி உண்மை. இதுதான் முழு உண்மை. இதுதான் நிஜம். இதுதான் சத்திய சொரூபம். இதுதான் பரமாத்மா. இதுதான் எல்லாம். இதுவே எல்லாம். இதுவே விதம் விதமாய் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இதுவே தாய். இதுவே தகப்பன். இதுவே சகோதரன். இதுவே சிற்றன்னை. இதுவே தாவரம். இதுவே மிருகம். இதுவே பறவை. இதுவே பூச்சி. இதுவே கிருமி. இதுவே நீர். இதுவே நிலம். இதுவே நிலா. இதுவே சுடர். இதுவே எங்கனும் பரவியதாகி, இதுவே நான். நானே இவை எல்லாமுமாக நிற்கிறேன்.