[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]

“இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள்.

“ஏங்க”

“ஒரே பொறாமை புடிச்ச பசங்க”

“யாரு”

“எல்லாருந்தான்”

“என்ன ஆச்சு”

“சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”

“இப்பதான க்யூல போயிட்டு வந்திங்க பார்த்தேன்”

“க்யூல தாங்க போனேன். ஆந்திர கோவில்ல ஜரகண்டி ஜரகண்டின்றானே அந்த மாதிரி இந்த கோவில்ல போங்க போங்கன்னு புடிச்சு தள்ளுறான்”

“இன்னிக்கு கொஞ்சம் கூட்டம் அதிகம்”

“அதனால அவ்வளவு தொலைவில் இருந்து சாமி பார்க்க வரேன். ஒரு நிமிஷம் நின்னு சாமி பார்க்க வேண்டாமா. நேரே நின்னு கண்மூட வேண்டாமா.”

“கடவுளே, உங்களுக்கு கிடைப்பதே அரை நிமிஷம். அதுல நீங்க ஒரு நிமிஷம் நின்னு கண்ண மூடனும்னா எப்படி முடியும். கூட்டம் பிதுங்கி வழியும். அவங்க என்ன செய்வாங்க அத்தனை பேரும் பார்க்க வேண்டாமா”

“இல்லீங்க, இனிமே இந்த கோயிலுக்கு வர போறது இல்ல.”

திருக்கோவில் ஊழியர்கள் மீதும் அர்ச்சகர்கள் மீதும் கோபம் கொண்டு அந்த அம்மாள் ஒரு ஆட்டம் ஆடினாள். ஆனால் அதை யாரும் லட்சியம் செய்யவில்லை.

தட்பவெட்ப நிலையை பார்த்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே போவது போல, ஒரு கோவிலின் தட்பவெட்ப நிலையை மனிதர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் காலையில் 10லிருந்து 12 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் பிதுங்கித்தான் வழியும். ஜரகண்டி என்று சொல்லத்தான் செய்வார்கள். இருந்து சன்னதியை பார்க்கின்ற நேரங்கள் அதிகம் இருக்கின்றன.

விடியலில் எழுந்து வேகமாக உள்ளே போய், நின்று நிதானமாக முதல் ஆரத்தி பார்த்துவிட்டு வரலாம். ஆனால் பலருக்கு இது ஒவ்வாத விஷயம். கும்பல் கூடும் நேரத்தில் தான் உள்ளே நுழைய முடியும். ஆனால் இந்த அம்மாவைப் போல் பல பேர் கும்பலான நேரத்தில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனித்து இருக்கிறேன்.

வந்தவுடன் மல்லிப்பூ வாங்கி விட வேண்டும். சுவாமிக்கு அல்ல. தலைக்கு. மேலும் நின்று கண்ணாடியில் முகம் பார்த்து கொள்ள வேண்டும். பூ வைத்த பிறகு முகம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு கட்டைகளுக்கு நடுவே நகரும் போது எந்த ஊரு நீங்க என்று முன்னும் பின்னும் இருப்பவர்களை விசாரிக்க வேண்டும். ‘எங்க சொந்தக்காரங்க அந்த ஊர்ல தான் இருக்காங்க. எங்க சித்தி புள்ளைக்கு சம்மந்தி அங்க தான் பொண்ணு எடுத்திருக்காரு’.

தேவையில்லாத விஷயங்களை அந்த அம்மாள் பேசத் துவங்கினாள். ஒன்றிரண்டு ஆள் தள்ளியிருக்கின்ற ஒரு கைக்குழந்தையை கொஞ்ச துவங்குவாள். வரிசை நகர்ந்து கொண்டிருக்கும். “குளிர் நாளு, இருந்தாலும் கசகசங்குது. ஒரு ஃபேன் போட மாட்டேங்கிறாங்க”. கூட இரண்டு வசவு வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு கோவில் நிர்வாகத்தை இடித்துரைப்பாள்.

“குழந்தைக்கு ஒரு வயசு ஆகுதா. மொட்டை போட போறீங்களா. இங்க மொட்டை போடுங்க. அது நல்லது நானும் என் பிள்ளைக்காக தான் வந்திருக்கிறேன். 26 வயசு ஆச்சு இன்னும் கல்யாணம் ஆகல. உங்க ஊர்ல ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க. நாங்க …” தன் ஜாதியை சொல்வாள். அந்த வரிசையில் இருப்பவர்களுக்கு அந்தக் குரலும் தொண தொணப்பும் மிகப்பெரிய வேதனையாக இருக்கும். அது வேதனையாக இருக்கிறது என்பது அந்த அம்மாளுக்கு சிறிதளவும் தெரியாது.

அவள் மீது தவறில்லை. ஒரு கோவிலுக்கு எப்படி போகவேண்டும் என்று அவளுக்குச் சொல்லித் தரப்படவில்லை. தந்தையோ, தாயோ, ஆசானோ, சிற்றப்பனோ, மாமனோ வேறு எவருமோ தெளிவாக இருந்து கோவிலுக்குள் கும்பிடும் வகை பற்றி விவரித்தது இல்லை. இந்த கோவிலுக்கு போ. அந்த அம்மனை பார். இந்தப் பெருமாள் மிகப் பிரசித்தம் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர, எவ்விதம் அந்தக் கோயில் சிறப்பானது என்று சொல்லியது இல்லை. இவளாக தானாய் அது குறித்து ஒரு அபிப்பிராயம் வளர்த்துக் கொண்டு அதை மற்றவரிடம் பேசியிருக்கிறாள்.

சில பேர் அவள் பேச்சை கேட்டு இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறார்கள். கருவறைக்கு அருகே வர வர நெரிசல் அதிகமாயிற்று. தள்ளுமுள்ளு அதிகமாயிற்று. அவள் பதட்டமானாள். எங்கு தடுத்து நிறுத்தி விடுவார்களோ என்று தேவையற்ற பயம் வந்து இரண்டு பேரை முன்னாள் தாண்ட முயற்சித்து பின்னால் இழுக்கப்பட்டாள்.

நடுவே கதவு திறந்து தள்ளாத கிழவன் கிழவியை திருக்கோவில் ஊழியர்கள் முன்னே அனுப்பினார்கள். இவள் ஆவேசம் வந்தது போல கத்தினாள். “இரண்டரை மணி நேரம் நிக்கிறேன் நீ மடிப்பு கலையாத உள்ள போகணும்னு பாக்கறயே”. எந்த சமாதானமும் அவளுக்கு எடுபடவில்லை.

அவளுக்கு அரை நிமிட தரிசனம் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மனம் நிலை நிறுத்தவில்லை. உள்ளுக்குள் பார்க்கவில்லை. அந்த அரை நிமிடத்தில் 30 வினாடியில் அந்த அழகிய அம்மன் சிலையை உள்வாங்கிக் கொண்டு இருக்கலாம். நிச்சயம் பேசியிருக்கலாம். உரத்த குரலில் அம்மா என்று அலறி இருக்கலாம். கையேந்தி இருக்கலாம். என்னுடைய குறை எல்லாம் தீர்த்து விடு என்று ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி இருக்கலாம். அத்தனையும் விட்டுவிட்டு யாரோ மேலே இடித்தார்கள் என்று அவரை அவள் பலவந்தமாக இடித்து அவர் மறுபடி தள்ள வேறு எவர் மீதோ விழுந்து ‘ச்சீ தூ’ என்ற பேச்சுக்கு ஆளாகி பிறகு சன்னதியை நெருங்கியவுடன் கண்ணை மூடிக்கொண்டாள். அது மிகப் பெரிய முட்டாள்தனம் என்று அவளுக்கு தெரியவில்லை.

இப்படித்தான் பல பேர் திருக்கோவில்களில் அல்லல்படுகிறார்கள். முன்னும் பின்னும் அலைக்கழிந்துவிட்டு அப்பாடா என்று நீரில் முக்கிய கோழி போல் வெளியே வருகிறார்கள். ச்சீ தூ எனத் தவறான வார்த்தைகள் சொல்லி அலுத்துக் கொள்கிறார்கள். தூணில் சாய்ந்து கொள்கிறார்கள். பிறகு மல்லாந்து படுத்து விடுகிறார்கள்.

கோவில் கால் நீட்டி படுக்கின்ற இடம் அல்ல. பல கோவில்களில் அமர வசதி உண்டு. சில கோவில்களில் இருக்காது. வீடு மொத்தமாய் உட்கார்ந்து, பெரிய அடுக்கில் கொண்டுவந்த எலுமிச்சை சாதத்தை சுற்றி உட்கார்ந்து சாப்பிடுகின்ற உணவுக் கூடமும் அல்ல. 15 பேர் குடும்பமாக வந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது அமைதியாக இருக்க வேண்டும். குழந்தைகளையும் அமைதியாக இருக்கும்படி சொல்ல வேண்டும்.

உள்ளே போய் சுவாமி பார்த்தாய் அல்லவா. அதை நினைவுபடுத்திக் கொண்டு உள்ளுக்குள் உட்கார். இப்பொழுது கண் வழியே பார்த்த சுவாமியை மனதால் பார்க்க முயற்சி செய் என்று வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் சொல்லித்தர வேண்டும். ‘கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா’ என்று மெல்லிய குரலில் தனக்கு மட்டும் கேட்கும் விதமாக பாட்டுப் பாடிக் கொண்டு அமர்ந்து இருக்கலாம் என்று பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்.

என்ன அழகு எவ்வளவு பிரம்மாண்டம். எத்தனை பொலிவு. எவ்வளவு தீட்சண்யமான பார்வை தாயே. மிகப்பெரிய குடும்பச் சுமையை நான் சுமந்து கொண்டு நிற்கிறேன். நல்ல மனைவி, அழகான குழந்தைகள், வயதான தாய் தந்தையர் திறமையான மைத்துனன், திடமான தம்பி என்று உறவுச் சூழலில் நிற்கிறேன். இவர்கள் அத்தனைபேரையும் காப்பாற்றி மேலுக்கு கொண்டுவந்து என்னையும் ஒரு சிறந்த கனவானாக மாற்று என்று வேண்டிக் கொள்ளலாம். அப்படி மனதிற்குள் வேண்டிக் கொள்ள, அமர்ந்திருக்க வேண்டிய இடம் தான் கோவில்.

ஆக, கோவில் என்பது உள்ளுக்குள் கருவறைக்குள் இருக்கின்ற பிரதிமையை பார்க்கின்ற விஷயமல்ல. பார்த்த பிரதிமையை 30 வினாடிக்குள் கண்ணுக்குள் தெரிந்த அந்தப் பிரதிமையை மனதிற்குள் மறுபடி கொண்டு வந்து அவளோடு பேசுகின்ற இடம் கோவில். ஒரு வேளை சில கோவிலில் இதற்கு கூட இடமில்லாது இருக்கலாம். விழா நாட்களில் கூட்டம் இருக்கலாம்.

குடும்பத்தோடு அப்படியே வெளியே வந்து எங்கு உட்கார முடியுமோ அங்கு உட்கார்ந்து கொள்ளலாம்.

ஒரு கோவிலின் அதிர்வலைகள் அதன் சுற்றுப்புறத்தில் நிச்சயமாக இருக்கும். வீட்டில் போய் உட்காருவதை விட, கோவிலின் மூன்றாம் சுற்று மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பிரதிமையை மறுபடி மனதிற்குள் கொண்டுவந்து அந்த கடவுளோடு பேசலாம். கெஞ்சலாம். பாட்டு பாடலாம்.

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வெளியேயும் உள்ளுக்கும் கை கூப்பலாம். ‘இடரினும் தளரினும் எனதுரு நோய் தொடரினும் உன் கழல் தொழுதிடுவேன்’ என்று கெஞ்சலாம். கண்ணில் நீர் பனிக்க அமர்ந்திருக்கலாம்.

கோவில் பிரதிமையோடு பேசுகின்ற இடம். அந்தப் பிரதிமை கர்ப்பக்கிருகத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அங்கிருந்து மனதால் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து உள்ளுக்குள் ஏற்றிக்கொள்ளுங்கள். கோவில் உங்களோடு நீங்கள் பேசுகின்ற இடம். உங்கள் மனதோடு நீங்கள் அரற்றுகின்ற இடம். மனதிற்குள் உங்கள் பிரச்சினையை பேசப்பேச ஆழ்ந்து கொண்டுவர, அந்தப் பிரச்சனையின் நுனிகள் உங்களுக்கு தெரியவரும். எந்த சுருக்கை எங்கே இழுத்தால் அவிழும் என்ற தந்திரம் புலப்பட்டுவிடும். இதுவே சுவாமி தரிசனம்.

இப்படி தரிசனம் செய்வதற்கு, கோவிலில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளே நுழைய வேண்டியிருக்கிறது. முடிந்த வரை அமைதி காக்க வேண்டியிருக்கிறது. முட்டி மோதாமல் நகர வேண்டியிருக்கிறது. அதிகம் கூட்டம் இல்லாத நாட்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

அதிகம் கூட்டம் இல்லாத நேரத்தில் குடும்பத்தை அழைத்து போக வேண்டியிருக்கிறது. சரியாக திட்டமிட்டு சரியாக நகர்ந்தால் கோவிலுக்குள் இருக்கின்ற கடவுள் நிச்சயம் உங்களோடு பேசும்.

சாதாரணமாக ஒரு அதிகாரியை பார்க்கும்பொழுது எவ்வளவு பண்போடும், மரியாதையோடும் போவீர்களா அதைவிட பல மடங்கு அமைதியாகவும், கவனமாகவும் நீங்கள் போக வேண்டிய இடம் கோவில். உங்களை சரிசெய்து கொள்ளாமல், உங்கள் முயற்சிகளை செம்மைப்படுத்தாமல், உங்கள் நடவடிக்கைகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவராமல் மற்றவர்களை குற்றம் சொல்லாதீர்கள்.

தரிசனம் என்பது உள்ளே இருக்கிறது. கடவுளோடு பேசுவது என்பது உங்களுக்குள்ளே நிகழ வேண்டிய செயல். எனவே ஜரகண்டி ஜரகண்டி என்று சொல்கிறார்களே என்று எவரையும் குறை சொல்ல வேண்டாம். நிறைவாக பார்த்து வெளியே வந்த பிறகு கடவுள் உங்களுக்குள் வந்து அமர்ந்து கொள்கிறார். அப்பொழுது எவராலும் நகர்ந்து போ நகர்ந்து போ என்று சொல்ல முடியாது. நகராது அவள் உங்களுக்குள் உட்கார்ந்து விடுவாள்.