[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]

வீட்டில் ஆள் அரவம் இல்லாததால் அந்த அந்தணர் வீட்டிற்குள் ஒரு கீரி புகுந்தது. முகர்ந்து பார்த்தது. சத்துமாவு சிறிது சிதறி இருப்பதை பார்த்து அங்கே போய் அதை நக்கியது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டிருந்த, வேகமாக சாப்பிட்டு இருந்த சத்துமாவு சிதறி இருந்தது. அதிலெல்லாம் அந்தக் கீரி விழுந்து புரண்டது. அதன் மேனியின் ஒரு பகுதி பொன் நிறமாக மாறிற்று. இன்னொரு பகுதி சாதாரணமாக இருந்தது.

தருமர் மிகப்பெரிய ராஜசூய யாகம் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தது. அங்கு உள்ளோர் சாப்பிட்ட பருக்கையின் மீது புரண்டு எழுந்தது. ஆனால் அந்த உடம்பு தங்கமாக மாறவில்லை. தர்மரிடம் போய்,

“ஒரு ஏழை பிராமணர், அன்னதானம் செய்த சத்து மாவின் மீது புரண்டேன். என் உடம்பின் ஒரு பகுதி தங்கமாக மாறிற்று. ஆனால் நீங்களும் தானம் செய்கிறீர்கள் லட்சக்கணக்கான பேருக்கு சோறு போடுகிறீர்கள். ஆனால் என்னுடைய உடம்பு பொன்னிறமாக மாறவில்லை. உங்களுடைய ராஜசூய யாகத்தைவிட அந்த அந்தணர் கொடுத்த நாலு சத்துமாவு உருண்டை மிக உன்னதமானது. அதற்கு ஈடாக எதுவுமே இல்லை” என்று உரக்க சொல்லிற்று.

தருமர் வேறுவழியின்றி “ஆமாம்” என்று தலையசைத்தார்.

தன்னுடைய பசியை பாராது மற்றவருக்கு அன்னமிடுதல் உத்தமமானது என்பதை இந்த வேதக் கதை சொல்கிறது. கொடு கொடு இருக்கின்ற வரை கொடு. தினமும் கொடு. பலபேருக்கு கொடு என்று வற்புறுத்துகிறது. அன்னதானம் செய்யாமல் தான் மட்டுமே தின்பவன் மிகக் கொடூரமான நிலையை அடைவான் என்பதற்கும் ஒரு கதை இருக்கிறது.

வஸ்திரம் தருவதைவிட, பொன் பொருள் தருவதைவிட, உடல் உழைப்பு தருவதைவிட, மருந்துகள் தருவதைவிட அன்னதானமே மிகவும் சிறப்பானது.

[முற்றும்]

பகுதி 1

பகுதி 2

பகுதி 3