[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]

அன்னம் பிரம்மம் என்கிறது வேதம். எது படைத்து கொண்டிருப்பதோ அதுவே பிரம்மம். அன்னம் தான் படைப்பு. அன்னம் தான் வளர்ச்சி. அன்னம் தான் இயக்கம். அன்னம் இல்லாவிட்டால் அதாவது உணவு இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது. எந்த இயக்கமும் ஏற்படாது. வம்சவிருத்தி நடக்காது. இந்த உலகம் காலாகாலமாக தோன்றி வளர்ந்து மறைந்து, தோன்றி வளர்ந்து மறைந்து வாழ்வதற்கு அன்னமே காரணம்.

உணவு இல்லாது வாழுகின்ற எந்த உயிரினமும் உலகில் இல்லை. இது அதைத் தின்று, அது இதைத் தின்று என்று மாறி மாறி பூமியில் உள்ள உயிரினங்கள் தின்றும் தின்னப்படும் வாழ்கின்றன. இதனால் உலகம் இயங்குகிறது. அதுமட்டுமல்ல, வெறும் இயக்கம் மட்டுமல்ல, பூமியினுடைய நாகரீகத்திற்கு அன்னமே காரணம். யாத்ரீகர்கள் நகர்வதற்கு அன்னமே காரணம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஜனங்கள் தனித்தனியாகவும், கும்பல் கும்பலாகவும் போவதற்கு அன்னமே காரணம். ஒரு மாதம் பயணம் என்றால், ஒரு மாத உணவும் கட்டிக்கொண்டு போக முடியாது. வழியில் எங்கேயேனும் பார்த்துக்கொள்வோம். ஏதேனும் சாப்பிட கிடைக்கும் என்று ஜனங்கள் மிக நம்பிக்கையோடு ஒரு கானகத்தில் இருந்து நகரம் நோக்கியோ, கிராமம் நோக்கியோ போய் அங்கே தங்கி அங்கே கிடைக்கும் உணவுகளை உண்டு பிறகு அடுத்த கானகத்திற்கு தாவுகிறார்கள்.

தென்கோடி குமரி முனையிலிருந்து இமயமலை வரை ஜனங்கள் நடந்துபோய் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்ததற்குக் காரணம், பரதகண்டத்தில் எல்லா இடத்திலும் கிடைக்கின்ற உணவு. ஏதேனும் தின்னக் கிடைக்கிறது என்கிற ஒரு சாத்தியக் கூறுதான் பரத கண்டத்தின் நாகரீகத்தை செழிப்பாக வைத்தது. ஆனால் இதற்கு எதிர்ப்படையாகவும் பேச்சு நிகழ்ந்திருக்கிறது.

ராமரும் லக்ஷ்மணரும் சீதையை இழந்த பிறகு வனவாசத்தில் உணவு தேடினார்கள். ராமருக்கு கடும் பசி எடுத்தது. அப்பொழுது அவர் லக்ஷ்மணனிடம் சொன்னார்.

‘ஹே. இலட்சுமணா, இந்த பரதகண்டம் முழுவதும் தானியங்கள் கொட்டிக் கிடக்க நமக்கு மட்டும் தானியம் இல்லாமல் போயிற்றே ஏன்?’ என்று துக்கப்பட்டார். இதற்கு என்ன காரணம் இருக்கும் என்றும் யோசிக்கத் துவங்கினார்.

‘போன ஜென்மத்தில் நான் யாருக்கும் அன்னம் கொடுக்காமல் இருந்தேனோ, யாருக்கும் நீர் கொடுக்காமல் இருந்தேனோ, யாருடைய பசியையும் ஆற்றாமல் புறக்கணித்தேனோ’ என்று தொடர்ந்து வருந்துகின்றார்.

அன்னம் கொடுத்தால்தான் அன்னம் கிடைக்கும் என்பது சனாதன தர்மத்தின் அதாவது இந்து மதத்தின் அடிப்படை நாகரீகமாக இருக்கிறது. நீ அழகாக, வாலிபனாக, வலுவுள்ளவனாக, செல்வம் நிறைந்தவனாக, அதிகாரம் மற்றும் படைபலம் உள்ளவனாக, அழகிய பெண்களின் சினேகம் உடையவனாக இருக்கலாம். ஆனால் நீ அன்னதானம் செய்யாவிட்டால் இவை அத்தனையும் இருந்தும் நீ எதுவும் இல்லாதவன் என்று பொருள். நீ வறியவன் என்று பொருள். இது பிற்பாடு உனக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

எனவே அன்னம் பிரம்மம் என்றால் அன்னதானம்தான் பிரம்ம பூஜை. தெய்வ பூஜை. அன்னதானத்தை விட மிகச்சிறந்த பூஜை உலகத்தில் எதுவும் இல்லை. மற்ற உயிரினங்களுக்கு நீங்கள் பரிமாறும்போது அவை பசியாறும்போது தேவர்களும், யட்சர்களும், தெய்வங்களும் பரம திருப்தி அடைகின்றன. மனம் குளிர்கின்றன என்றும் வேதங்கள் சொல்லுகின்றன.

தினம்தோறும் அன்னதானம் செய். உனக்கென்று உணவு எடுத்துக்கொண்ட பிறகு மற்றவருக்கு வழங்குவதற்கு தினமும் கொடுப்பதற்கு ஒரு வழி வகுத்துக் கொள் என்று மேலும் சொல்கிறது. அப்படி உனக்கென்று வைத்துக்கொள்ளாமல் வந்த அதிதிக்கு கொடுப்பதற்கு முயற்சி செய். வந்த அதிதி பசி தீர்ந்தால் உனக்கு நன்மை ஏற்படும். மேலும் உணவு கிடைக்கும் என்றும் பல கதைகள் சொல்கின்றன. ‘அதிதி தேவோ பவ’ அதிதி, அதாவது விருந்தாளி தெய்வத்திற்கு நிகரானவன். அவன் பசித்து இருக்கக்கூடாது. யார் வீட்டிற்கு வந்தாலும் கொடுப்பதற்கு முயற்சி செய் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.

அது பெரிய கானகம். அன்று கடும் மழை. காற்று வேகமாக வீச, குளிர் குருத்தெலும்பு குடைந்தது. ஒரு வேடன் மொத்தமும் நனைந்து உடம்பெல்லாம் நடுங்கியவாறு ஒரு ஆலமரத்தடியில் மழைக்கு ஒதுங்கிக் கொண்டான். மழையின் சீற்றம் மரத்தடியில் குறைவாக இருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்கு அருகே ஒரு பெண் புறா குளிரால் நடுங்கப் பெற்று தரையில் புரண்டு கிடந்தது. தன்னுடைய இயல்பினால் வேடன் அதை தாவி எடுத்துக்கொண்டு எதற்கும் இருக்கட்டும் என்று தன் கூண்டில் போட்டுக்கொண்டான். கூண்டுக்குள் புறா மழையிலிருந்து காப்பாற்றப்பட்டு அமைதியாக இருந்தது. வேடன் சிரமப்பட்டு அக்னியை வளர்த்தான். குளிர் காய்ந்தான். புறாவினுடைய ஈரமும், வேடனுடைய ஈரமும் குறைந்தன. மழை தொடர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது இரை தேடப் போயிருந்த ஆண் புறா வேகமாக வந்து ஆலமரத்தடியில் அமர்ந்தது. பேடையை தேடியது. ஆண்புறா வந்ததை அறிந்த பெண் புறா குரல் கொடுத்தது. ஆண் புறா கீழ் கிளைக்கு வந்தது.

“என் நாதனே நமஸ்காரம். இந்த பெரிய ஆலமரம் நம்முடைய வீடு என்றால், நம்முடைய வீடு தேடி ஒரு அதிதி வந்திருக்கிறார். அவர் குளிராலும் பசியாலும் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஏதேனும் உணவு கொண்டு வந்து இருக்கிறீர்களா” என்று பணிவாக கேட்டது.

புறாவிடம் என்ன உணவு இருக்கும். அவ்வப்போது கிடைக்கின்ற தானியங்களை தின்றுவிட்டு பேடையோடு பரிமாறிக்கொண்டு விட்டு தூங்கப் போவது தானே தினசரி வேலை. மறுநாள் உணவிற்கு மறுபடி கிளம்புவது தானே அதன் இயல்பு. ஆனால் புறாவிடம் உலர்ந்த பழங்கள் இருந்தன. அதைக் கொண்டு வந்து வேடன் கையில் போட்டது. அந்த உலர்ந்த பழங்கள் புறாவிற்கு ஒரு இரவு தீனியாகும். ஆனால் வேடனுடைய கடைவாய்க்கு கூட காணாது. வேடன் அதை சுவைத்தான். மீண்டும் அண்ணாந்து ஆண் புறாவை பார்த்தான். ஆண் புறா என்ன செய்வது என்று தெரியாமல் இடதும் வலதும் அலைந்தது. மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது. இருட்டும் வந்துவிட்டது.

[தொடரும் ….]