[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]

ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம்.

அது பஞ்ச காலம். அந்த கிராமம் முழுவதும் பல வருடங்கள் மழையின்றி பூமி வறண்டு கிடந்தது கிராமத்து மக்கள் வேறு இடத்திற்கு குடி புகுந்தார்கள். ஆனால் ஒரு அந்தண குடும்பம் மட்டும் அந்த கிராமத்தை விட்டு போகாமல் அங்கேயே நல்ல நாள் வரும் என்று காத்திருந்தார்கள். ஆனால் வெயிலின் உக்கிரம் மட்டும் அதிகமானதே தவிர மழை வரும் வழியே தென்படவில்லை. பசியால் அந்த குடும்பம் மெலிந்திருந்தது. அந்த அந்தணரின் மனைவி எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் குறைவாக சாப்பிட்டு எலும்புக்கூடு போல் இருந்தாள். அவனுடைய மகன் பலகீனமாக இருந்தான். சுமக்க கூட முடியாதபடி தள்ளாடினான். அவனுடைய மனைவி சிறு பெண் தன்னால் முடிந்தவரை புருஷனுக்கும் மாமியாருக்கும் மாமனாருக்கும் உதவி செய்து வந்தாள். ஒரு வாரமாக வெறும் நீரை அருந்தி வந்தார்கள். இன்னும் சோர்வாக காணப்பட்டார்கள். மேகமூட்டமாக இருந்ததால் அந்த அந்தணர் வெளியே கிளம்பி தானியங்கள் பொறுக்க சென்றார். அரிசி, கோதுமை, கடலைப்பருப்பு, காராமணி என்று பல்வேறு தானியங்களை பொறுக்கி வந்தார். ஒரு இடத்தில் நெல் கிடைத்தது. இன்னொரு இடத்தில் வெந்தயம் கிடைத்தது. இன்னும் தேடி அலைந்தபோது வேறு சில பருப்புகள் கிடைத்தன. இரண்டு உள்ளங்கை அளவு தானியம் கொண்டுவந்து மகிழ்ச்சியோடு மனைவியிடம் கொடுக்க அவர் மனைவி மெல்ல நகர்ந்து அடுப்பு மூட்டி அவைகளை வறுத்து மருமகளிடம் கொடுக்க, மருமகள் அதை இடித்து பொடியாக்கி சலித்து சிறிது வெல்லம் கலந்து உருண்டைகள் ஆக்கினாள் வீடு சந்தோஷப்பட்டது.

அந்த நான்கு சத்துமாவு உருண்டைகளையும் இறைவன் முன்பு வைத்து தண்ணீர் தெளித்து இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட தயாரானது. குடும்பத்தலைவர் தன்னுடைய இலையில் சத்துமாவு வைத்து உட்கார்ந்ததும் வாசலில் சத்தம் கேட்டது. அங்கே ஒரு அந்தணர் நின்று கொண்டிருந்தார்.

“ஐயா மிகவும் பசிக்கிறது சாப்பிட ஏதாவது இருக்குமா” என்று கேட்டார்.

“பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரல் கொடுத்தார். வீடு பரபரப்பானது. அதிதியை வரவேற்றது. வாசலில் உட்கார்ந்து கால் கழுவியது. மலர்களால் அலங்கரித்து குடிக்க நீர் கொடுத்தது. முகம் துடைக்க ஈரத் துண்டு கொடுத்தது. பிறகு உள்ளே அழைத்து மனையில் அமர்த்தி அந்த சத்து மாவை சாப்பிடும்படி வேண்டியது.

அவர் மிக ஆவலாக வேகமாக அந்த சத்து மாவு உருண்டையை சாப்பிட்டார். நிமிர்ந்து குடும்பத் தலைவரை பார்த்து “இன்னொரு உருண்டை கிடைக்குமா” என்று கேட்டார்.

அந்தணரின் மனைவி தன்னுடைய சத்து மாவு உருண்டையை அவருக்கு தானம் செய்தாள். அதையும் அவர் வேகமாக உண்டார். மறுபடியும் தலையை நிமிர்த்தி வீட்டு அந்தணரை நோக்கி “இன்னும் ஒரு உருண்டை இருக்குமா” என்று வெட்கமில்லாமல் கேட்டார். மகன் தன்னுடைய பங்கை எடுத்து அவருடைய இலையில் வைத்தான். அதை நிதானமாக சாப்பிட்டார். ருசித்து சாப்பிட்டார்.

“மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு அற்புதமான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. எப்படி செய்தீர்கள்?” விசாரித்தார், விழுங்கினார். பிறகு வெட்கத்தோடு தலைநிமிர்ந்து “இன்னும் ஒரு உருண்டை இருந்தால் கொடுங்கள் எனக்கு பசி முற்றிலும் நீங்கிவிடும் நான் வெகுதூரம் களைப்பின்றி நடப்பேன்” என்று சொன்னார். மருமகள் சிறிதுகூட முகச்சுளிப்பு இன்றி தன்னுடைய சத்து மாவு உருண்டையை அவர் இலையில் வைத்து சாப்பிட வேண்டினாள். அதையும் அவர் விரைவாக சாப்பிட்டார். பெரிய ஏப்பம் விட்டார். நீர் குடித்தார். கையை அலம்பிக் கொண்டார். மேல் துண்டில் துடைத்துக் கொண்டார்.

“என்னுடைய ஆசீர்வாதங்கள்” என்று சொல்லி வெளியேறினார்.

அந்தக் குடும்பம் துவண்டு திண்ணையில் சரிந்தது. இனி என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் திகைத்தது.

“கடவுளே ஒரு வழிகாட்டு” என்று வீட்டு அந்தணர் வேண்ட அந்த வீட்டு வாசலில் ஒரு வானூர்தி தோன்றியது. அந்த அந்தணர் பிரம்மதேவர் ஆக மாறினார்.

“வாருங்கள் அதிதிக்கு உணவளித்த உங்களுக்கு பிரம்ம லோகத்தில் மிகச் சிறந்த இடம் நான் தருகிறேன். இந்த பரத கண்டத்தில் அன்னதானம் ஓயவே ஓயாது. எத்தனை பஞ்சம் வந்தாலும் பிறருக்குக் கொடுக்காமல் பரத கண்ட மக்கள் சாப்பிட மாட்டார்கள் என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டேன்.

வாருங்கள் பசியில்லாத நீர் வேண்டியிராத தூக்கமில்லாத வலியில்லாத பிரம்மலோகம் போவோம்” என்று அவர்களை வானூர்தியில் அமர வைத்தார்.

அவர்கள் தேஜஸ்விகளாக மாறினார்கள். ஒளிரும் உடம்பைப் பெற்றார்கள். அந்த வானூர்தி அங்கிருந்து பறந்து பிரம்மலோகம் போயிற்று கதை இத்தோடு முடியவில்லை.

[தொடரும் ….]

பகுதி 1

பகுதி 2