அனந்தகோடி நமஸ்காரங்கள். இந்த வலைப்பின்னலுக்கு வந்தவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். வருக வருக வருக. இணைய இயக்கம் பற்றி ஏதும் அறியாதவன் நான். கற்றுக்கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் என் உதவியாளர் பாக்கியலகூஷ்மியும், ராஜு கந்தசாமி என்கிற கோவை நண்பரும், கணேசன் என்கிற சென்னை நண்பரும் மிகுந்த ஆர்வத்தோடு முயற்சிகள் எடுத்து எனக்காக இதை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மற்ற நண்பர்களால் சொல்லப்படுகிறது. நான் அப்படியா என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் இந்த ஆயுதத்தினுடைய வலிவு எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாததும் முக்கியமும் இல்லை. இதை நண்பர்கள் எனக்கு அளித்தக் கொடை என்பதாகவே நான் நினைத்துக் கொண்டு இதில் பங்கு பெறுகிறேன். நான் எழுதிய புத்தகங்களின் வரிசையும், அதிலிருந்து சில தகவல்களும், நான் எழுதப்போகின்ற விஷயங்களுடைய சாராம்சமும், என் வீடியோ பதிவுகளும் இதில் இடம்பெறும். அதையும் தவிர, அவ்வப்போது எனக்குத் தோன்றுகின்ற சில விஷயங்களைப் பற்றி இதில் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

உதாரணத்திற்கு வத்தக்குழம்பு எனக்குப் பிடிக்கும். ஆனால் அதை சாப்பிடக் கூடாது. ஏன் என்று சொல்லப் போகிறேன். சிறு வயதில் உணவில் கருத்தாக இல்லாவிட்டால் முதிய வயதில் பல்வேறு தொந்தரவுகள் வருகின்றன என்று என் அனுபவங்களை வெளியிடவும் ஆசை.

இளம் வயது காதல் . அது காணாமல் போன விதம். மத்திமவயதில் யாரோ அருகே வந்து காதலிக்கிறேன் என்று சொன்னபோது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த தவிப்பு என்று உங்களுக்கு உபயோகமான என்னுடைய அனுபவங்கள் இங்கு பகிரப்படும்.

இதைத் தவிர இந்த வலைப்பின்னலில் வேறு என்ன செய்துவிட முடியும் எனக்குத் தெரியவில்லை. தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை என்ற ஜிட்டுக் கிருஷ்ணமூர்த்தியின் மகா வாக்கியத்தை உள்வாங்கி இந்த வலைப்பின்னல் தொடர்பு கொள்ளும் இன்னொரு சாதனம் என்கிற மரியாதையுடன் அணுகுகிறேன். வாழ்க. தொடர்ந்து சந்திப்போம்.