உ
யோகிராம் சுரத்குமார்
வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 2
எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன் உபாசிக்கிறானோ, எவன் கடுமையை கொண்டாடுகிறானோ அவனை மூடன் என்று கூறுகிறார்கள்.
இரண்டு வகை அதர்ம புருஷர்கள் உலகத்தில் உண்டு. தன் கடமையைச் செய்யாத குடும்பஸ்தன், உலகத்திலுள்ள கர்மங்களை செய்கின்ற சன்னியாசி. குடும்பம் என்பது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்காத மனிதனை உலகம் மதிப்பதேயில்லை. துறவு என்பது எதன் மீதும் பற்றற்று இருத்தல். இடையறாது தன்னுள் ஓடுங்கிக் கிடத்தல். உள்ளுக்குள் ஒடுங்காது உலகத்தின் போகங்களில் புரள்கிறவனை எப்படி சன்னியாசி என்று அழைப்பது. இவர்கள் இரண்டு பேருமே கேலிக்குறியவர்களாக மாறிப் போகிறார்கள். பெரும் பாவம் இவர்களைச் சூழ்கிறது.
எவன் செல்வனாக இருந்தும் தானம் அளிக்கவில்லையோ, எவன் தரித்தரனாக இருந்தும் கஷ்டத்தை சகிக்கவில்லையோ அவன் வாழும்போதே நரகத்தில் உழல்கிறான். சுக போகம் துறந்த சன்னியாசியும், போரில் பகைவர் எதிரே வீரமாக நின்று இறந்து போன போர் வீரனும் சூரிய மண்டலத்தை தாண்டியும் நிற்கிறார்கள்.
சிறிய அறிவுடையவன், துதி செய்பவன், அவசரப்படுபவன் ஆகியோரோடு ரகசிய ஆலோசனை செய்யக் கூடாது, மன்னர்கள் இவர்களை விலக்கி வைக்க வேண்டும். அறிவாளிகள் இத்தகைய மக்களை புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு செல்வந்தர் தன்னுடைய வீட்டில் நான்கு வகையான முக்கிய மனிதர்களை எப்பொழுதும் இருக்கச் செய்ய வேண்டும். குடும்பத்தில் முதியவர், காப்பாற்றப்பட்ட உயர் குல மனிதன், செல்வமற்ற நண்பன், குழந்தையற்ற சகோதரி இவர்கள் நால்வரும் செல்வந்தருக்கு எப்போதும் உதவுவார்கள்.
எந்த யோக்கியதையும் இல்லாத ஐஸ்வர்யத்தை விரும்பும் மனிதன், உறங்கும் மனிதன், தூக்க கலக்கம், கோபம், பயம், சோம்பல், தாமதம் என்ற ஆறு குணங்களும் நீக்கப்பட வேண்டும். உபதேசம் அளிக்காத ஆச்சாரியன், மந்திரத்தை உச்சரிக்காத சீடன், ஜனங்களை ரட்சிப்பதில் திறமையற்ற மன்னன், கடுமையான சொற்களை பேசுகின்ற பெண், காடுகளுக்குப் போகாது கிராமத்திலேயே இருக்க விரும்புகின்ற இடையன், காட்டிற்கு போகும் நாவிதன் என்று அறுவரையும் சமூகம் புறக்கணித்து விடும்.
ஒரு மனிதன் ஒரு பொழுதும் சத்தியம், தானம், தன் கடமையைச் செய்தல், அசூயை இன்மை, பொறுமை, தைரியம் என்ற ஆறு குணங்களையும் விடவே கூடாது.
நியாயமான முறையில் செல்வத்தை அடைதல், எப்பொழுதும் ஆரோக்கியமாக இருத்தல், அனுகூலமான மனைவியை அடைதல், தன் உறவுகளிடம் பிரியமாகப் பேசுதல், கட்டளைக்கு அடங்கியிருக்கின்ற மகன், செல்வத்தை உண்டாக்கும் வித்தை என்று ஆறு விஷயங்களும் மனிதனுக்கு சுகம் அளிப்பன. இவை ஏதும் இல்லாது ஒரு மனிதன் சிறந்து விட முடியாது. ஏதேனும் ஒன்று குறைந்தாலும் அவன் வாழ்க்கை குறையுள்ளதாகத்தான் இருக்கும்.
இப்பொழுது சொல்லப் போகிற ஆறு வகையான மனிதர்கள் ஆறு வகையான மக்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
வைத்தியன் பிணியாளனாலும், காமம் கொண்ட பெண்கள் காமிகளாலும், புரோகிதர்கள் எஜமானரிடமிருந்தும், மன்னன் போரிடுபவனிடமிருந்தும், வித்வான்கள் முட்டாள்கள் மூலமும் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
சரியான முகூர்த்த நேரம் பார்த்து பரிமாறததால் பசு, சேவை, பயிர், பெண், வித்தை, கலைகள் தெரிந்தவர்களின் சேர்க்கை என்ற ஆறு விஷயங்களும் நஷ்டமாகின்றன. பெண்ணை திருமணத்திற்கு பார்க்கப் போகிற போதும், பசுவை வாங்குகிற போதும், பயிரை விதைக்கிற போதும், அறுவடை செய்கிற போதும், உடையவர்களோடு சந்திப்பு ஏற்படுத்தும் போதும், நல்ல நேரம், நல்ல ஓரையில் தொடர்பு கொள்ள வேண்டும். நேரம் தவறாக இருந்தால் இந்த விஷயங்களெல்லாம் எதிர்மறையாகப் போகும்.
எவன் ஒருவன் தனக்கு சமமானவர்களோடு விவாகம், நட்பு, வியாபாரம் போன்ற விஷயங்களை பேசுகிறானோ அவனுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. எவன் சிறிதளவே போஜனம் செய்கிறானோ, எவன் அதிகம் வேலை செய்து விட்டு சிறிதளவே தூங்குகிறானோ, எவன் கேட்டவனுக்கு நண்பனாக இல்லாதபோதும் செல்வம் தருகிறானோ அவனை எந்த அனர்த்தமும் அண்டுவதில்லை.மாறாக எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவுகள் அவனுக்கு வந்து சேரும்.
அசட்டு உபாயங்களைப் பயன்படுத்தி கபடமான காரியங்கள் வெற்றி அடைந்தால் அது நிச்சயம் கவலையைக் கொண்டு வந்து சேர்க்கும். சரியானபடியான காரியங்கள் அமைதியான முறையில் நடந்தால் அவை வெற்றியடையா விட்டாலும் விமர்சிக்கப்படாது. ஒரு செயல் செய்யும்பொழுது அந்த செயலின் பிரயோஜனத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதனால் என்ன லாபம் என்று யோசிக்க வேண்டும். நன்கு ஆலோசிக்க வேண்டும். என்ன விளைவு என்று தெரியாமல் ஒருபொழுதும் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கக் கூடாது.
எந்த அரசன் லாபம், நஷ்டம், கஜானா , தேசம், தண்டனை ஆகியவற்றின் அளவை அறியமாட்டானோ அவன் ராஜ்ஜியத்தில் அதிக நேரம் நிலைபெற முடியாது. கஜானாவின் இருப்பே தெரியாதவனும், கடுமையான தண்டனை வழங்குபவனும், தேசத்தின் நீள அகலம் தெரியாதவனும், செய்கின்ற காரியத்தில் லாபமும், நஷ்டமும் புரியாதவனும் எப்படி மன்னனாக இருக்க முடியும். செல்வம் அதிகாரம் ஆகியவை கிடைத்து விட்டது என்பதற்காக மனம் போன போக்கில் நடந்து விடக் கூடாது. வீண் பிடிவாதம் செல்வத்தை, முதுமையை, அழகு உருவத்தை அழித்து விடுகிறது.
பூவை கசக்காமல் தேனீ தேனை உண்பது போல மக்களை இம்சை படுத்தாமல் ஒரு அரசாங்கம் வரியை வசூலிக்க வேண்டும். தோட்டக்காரன் தோட்டத்திலுள்ள பூக்களை பறிக்கிறான். செடிகளை பிடுங்கிப் போடுவதில்லை. வரி கொடுக்கின்ற மக்களை இம்சித்தால் நாளை எவர் வரி தருவார். பிரியமாக பார்க்கின்ற மன்னனை அவர் மெனனமாக இருந்தாலும் ஜனங்கள் விருப்பத்தோடு ஏற்கிறார்கள்.
Vaishnavi
Balakumaran ஐயா தங்கள் எழுத்து எங்களை உய்விக்கும் என்பதில் ஐயமில்லை.நமஸ்கரிக்கிறேன்…