விதுரர் இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார். இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார். தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம் இந்த வாய்ப்பை விடக்கூடாது நாமாக வந்து பேசுவதை விட அழைக்கும்போது நாம் பேசினால் ஆழ்ந்து கவனிக்க அழைத்தவருக்கு அக்கறை இருக்கும் என்று நினைத்துப் பேசினார்.

“திருதராஷ்டிர மன்னனே, பலவானை பகைத்துக் கொண்ட பலவீனன், காமுகன், திருடன், நோயாளி இவர்களுக்குத்தான் இரவில் தூக்கம் இருக்காது. இந்த நான்கில் நீங்கள் எந்த இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்து எனக்குச் சொல்லுங்கள்.

பாண்டவர்களுக்கு நீங்கள் தரவேண்டிய ராஜ்ஜியத்தை தராமல் போனது பிசகு. அவர்களை சூதாட அழைத்ததும், அந்த சபையில் அவர் மனைவியை உங்கள் பிள்ளைகள் அவமானப்படுத்தியதும், அதை நீங்கள் தட்டிக் கேட்காமல் இருந்ததும் மிகப் பெரிய தவறு. உண்மையில் அந்த விஷயங்கள்தான் இப்போது உங்களை வாட்டுகின்றன.

யாரிடம் எந்த பொறுப்பை விடவேண்டுமோ அவர்களிடம் ஒரு மன்னன் பொறுப்பை விட வேண்டும். துரியோதன்,  சகுனி, கர்ணன்,  துச்சாதனன் போன்ற தகுதியற்ற மனிதர்களிடம் ராஜ்ய பரிபாலனத்தை விட்டு விட்டு நீங்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். அடுத்த வேளை, அடுத்த பொழுதில் இவர்கள் என்ன கூத்து செய்வார்களோ என்ற பயத்தோடுதானே இருப்பீர்கள். எப்படி தூங்க முடியும்.

தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களுக்கு உணவு தராமல், உடை தராமல், தானே நல்ல போஜனமும், நல்ல உடையும் அணிகிறவன் மிகப் பெரிய கொடுமைக்காரன்.

அதிகாரம் உள்ள மனிதன் தனியாக பாவம் செய்கிறான். அதை பலபேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பயன்படுத்தியவர்கள் குற்றத்திலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் அதைச் செய்தவன் அந்த குற்றத்திற்கு முழு பொறுப்பாகிறான்.

ஒரு மூடனால் வெளியிடப்பட்ட குருட்டு அறிவு ஒரு ராஜ்ஜியத்தை அழித்து விடும். மது குடிப்பதால் குடிப்பவன் மட்டுமே இறந்து போகிறான். ஆயுதம் ஒருவனைத்தான் அழிக்கிறது. ஆனால் தவறான ஆலோசனைகளால் அந்த அரசு மக்களோடு, மன்னனோடு அழிந்து போகிறது.

எவன் உண்மையிலேயே தனக்கு என்னத் தெரியும் என்கிற ஞானம், முயற்சி, துயரத்தை சகிக்கும் சக்தி, தர்மத்தில் உறுதி போன்ற குணங்கள் இருப்பின் அவன் பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான். பண்டிதனால் தான் உலகுக்கு நன்மைகள் செய்ய முடியும். உலக காரியங்களை உண்மையாய் செய்கிறவனும், தீய காரியங்களிலிருந்து விலகுபவனும், ஆஸ்தீகனும், எல்லா காரியத்தையும் சிரத்தையோடு செய்வதும் பண்டிதனுக்குறிய லட்சணங்கள்.

அதர்மம், வெட்கம், பிடிவாதம், அதீத சந்தோஷம், தன்னையே பூஜைக்குறியவனாக கருதுதல், போன்ற பாவங்கள் ஒரு மனிதருடைய கம்பீரத்தை குலைக்கின்றன. அவன் மனிதர்களால் கேலிக்கான பொருளாக மாறுகிறான். மற்றவர் தன்னை கேலியாக பார்க்கிறார்களோ என்று துயரப்படும் மனிதனுக்கு தூக்கம் வருவதில்லை.

தர்மத்தோடு இருக்கிறோம் என்ற தெளிவுடையவன் மற்றவர்களுடைய விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவன் பொழுதுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

வெட்கம், பயம், செல்வம், ஏழ்மை இவை யாருடைய காரியத்தில் தலையிடுவதில்லையோ அவனே பண்டிதன் என்று அழைக்கப்டுகிறான். எவன் போகத்தை விட்டு கம்பீரத்தை கடைபிடிக்கிறானோ அவனே பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான்.

தன்னுடைய சக்தி என்ன என்று புரிந்து கொண்டு அதற்கேற்ப பணி செய்கிறவனையே உலகம் மதிக்கிறது. நல்ல புத்தி தெரிந்தவன் மற்றவர்களை துச்சமாக மதிப்பதில்லை. ஒரு பண்டிதன் விஷயத்தை வெகு நேரம் கேட்கிறான். ஆனால் முற்றிலும் சீக்கிரம் புரிந்து கொண்டு விடுகிறான். தன்னுடைய கடமை என்ன என்று புரிந்து கொண்டு கம்பீரமாய் தன் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் விருப்பம் என்பது அங்கு குறுக்கிடுவதில்லை.எந்த ஒரு விஷயத்தையும் வீணாகப் பேசுவதில்லை. இந்த மூன்று செயல்களும் பண்டிதனுடைய முக்கியமான இயல்புகளாகும்.

அமைதியான அறிவுள்ள மனிதன் கிடைத்தற்கு அரிய பொருளை விரும்புவதில்லை. உயர்ந்த பொருளின் விஷயத்தில் ஆசைப்பட்டு துயரப்பட விரும்புவதில்லை. யோசனை செய்து ஒரு விஷயத்தில் இறங்குகிறவன், மனதை தன் வசத்தில் வைத்திருப்பவன் பண்டிதன் என்று கருதப்படுகிறான்.

தர்மங்களில் மனிதனுக்கு ஒரு ருசி ஏற்பட வேண்டும். உன்னதமான காரியம் செய்வதற்கு ஒரு விழைவு ஏற்பட வேண்டும். அப்படி செய்பவர்களிடம் ஏதேனும் குறை இருப்பினும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

நல்லவர்கள் மேற்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி கொஞ்சம் காது கொடுத்து கேட்பீராக.

இருவகையான மனிதர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். ஏன் சொர்கத்தை விட உயரமான இடத்தை அடைகிறார்கள். பலசாலியாக இருந்தும் பொறுமையாக இருப்பவன், ஏழையாக இருந்தும் தானம் அளிப்பவன் இரண்டு பேரும் உன்னத இடத்தை இறந்த பிறகு அடைகிறார்கள்.

எவன் செல்வத்தைக் கண்டால் சந்தோஷத்தால் மலர்ந்து விடுவதில்லையோ, எவன் அவமதிப்பால் கவலைப்படுவதில்லையோ, எவருடைய உள்ளத்திற்கு எது பொருட்டும் துயரம் உண்டாவதில்லையோ அவன் பண்டிதன் என்று அழைக்கப்டுகிறான். இப்படிப்பட்டவனுடைய வாக்கு தடைபடுவதில்லை. அவன் உளறுவதில்லை. அவன் மிக தீர்க்கமாகப் பேசுகிறான். அழகாக விவாதம் செய்கிறான். சிறந்த நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் காட்டுகிறான். அவனை உலகம் பண்டிதன் என்று அழைக்கிறது.

ஒருவனுடைய அறிவு அவன் கற்றிருக்கும் வித்தையை பின்பற்ற வேண்டும். எவனுடைய வித்தை அவன் அறிவைச் சார்ந்து இருக்கிறதோ அவன் பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான்.

படிக்காமலேயே பெரிய படிப்பாளி போல நடந்து கொள்கிறவன், ஏழையாக இருந்தும் தகுதிக்கு அப்பாற்பட்ட பதவி உடையவன், வேலை செய்யாமலேயே செல்வம் செய்ய விரும்புகின்றவன் ஆகியோரை பண்டிதர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறார்கள். எவன் தன் கடமையை விட்டு விட்டு மற்றவருடைய கடமையை கடைபிடிக்கிறானோ, நண்பர்களோடு பொய்யாக நடந்து கொள்கிறானோ அவனை முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். சேர்க்கத் தகாதவர்களை எவன் விரும்புகிறானோ அவனும் முட்டாள்தான். யாரிடமும், எது பற்றியும் ஐயம் கொள்கிறவன், விரைவில் நடக்க வேண்டிய காரியத்தை தாமதமாகச் செய்பவன் மூடன் என்று கருதப்படுகிறான். எவன் பித்ருக்களின் சிரார்த்தத்தையும், தேவர்களின் பூஜையையும் செய்யவில்லையோ, எவனுக்கு நல்ல எண்ணமுடைய நண்பர்கள் கிடைப்பதில்லையோ அவனையும் மூடன் என்றே சொல்லலாம்.

அத்தகைய மூடன் அம்மாதிரியான அதமன் யாரும் அழைக்காமலேயே உள்ளே வந்து விடுகிறான். பிறர் கேட்காமலேயே அதிகம் பேசுகிறான். அவன் நம்பத்தகாத மனிதரை அதிகம் நம்புகிறான். இம்மாதிரி மனிதர்களால் உலகில் குழப்பங்கள்தான் ஏற்படும்.