[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …]

வில்லிதாசன் நிமிர்ந்து பார்த்து சிரித்தான். “வேறு வேலை இல்லை போங்கள் ஓரம்…” என்று கடுகடுத்தான். அவர்கள் விதிர்த்துப் போனார்கள். எந்த வழிக்கும் வராத வில்லிதாசனை அப்புறப்படுத்த ஆயத்தமானார்கள். அதற்கு ராமானுஜரை குறை சொன்னார்கள்.

“என்ன இருந்தாலும் வில்லிதாசன் தாழ்ந்த குலமல்லவா? அவன் கையைப் பிடித்துக்கொண்டு, பிராமண குலத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜர் கையை பிடித்துக்கொண்டு பவனி வரலாமா? துறவியாக இருந்தாலும், ஜாதி இல்லை என்று ஆகி விட்டதா? அப்போது பிராமணர்களுடைய மதிப்பு குறைந்து விடுமல்லவா? வில்லிதாசனுடைய குலம் உயர்ந்து விடும் அல்லவா? வில்லிதாசனை, ராமானுஜரே கைபிடித்துக் கொண்டு வருகிறார். உம்மைத் தொட்டால் என்ன? என்று நான்கு மல்லர்கள் வந்து என்னை கட்டிப்பிடித்தால் நான் என்ன ஆவேன்? இது கெடுதலுக்கு வழி  கேடு செய்யும் ஆரம்பம், எனவே ஸ்ரீராமானுஜர் உடனடியாக வில்லிதாசன் கைபிடித்து வருவதை நிறுத்த வேண்டும். அவனை அப்புறப்படுத்த வேண்டும். மடத்தின் வாசலிலேயே அவனை நிற்க வைக்க வேண்டும். அவன் மட்டுமல்ல. அவன் மனைவி தேவரடியார். தேவரடியாரை நாம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவளோடும் சம்பாஷித்துக் கொண்டு வருகிறார். இது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. துறவிகள் தேவரடியாரோடு பேசிக்கொண்டு வந்தால், மற்றவர்களெல்லாம் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் இருவரும் அரங்கனைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். எனவே வில்லிதாசனையும், பொன்னாச்சியையும் மடத்திலிருந்து விரைவாக அப்புறப்படுத்துவது மடத்துக்கு நல்லது, வைணவத்துக்கு நல்லது. ஸ்ரீராமானுஜருக்கு நல்லது என்று உரத்த குரலில் பேசத் துவங்கினார்கள்.

ராமானுஜர் காதுகளிலும் இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது. ஆனால் குரு சகலமும் அறிந்தவர். நடக்கப்போவது என்ன என்று தெளிவாக தெரிந்தவர். யார் எவ்விதம் இயங்குவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்தவர். அப்படி இயங்கினால் பதிலுக்கு எப்படி இயங்க வேண்டும் என்று தெளிவாக அறிந்தவர். குருவினுடைய ஆற்றலை தெரியாதவர்கள், குரு என்பதில் ஆழம் தெரியாதவர்கள். குரு தன்னோடு சல்லாபிப்பதாலேயே சௌக்கியமா என்று கேட்பதையே தனக்கு அருகே வந்து உட்கார்ந்து சாப்பிடுவதையே தான் சமைத்துக் கொண்டு வந்ததை விரும்பி உண்பதாலேயே தனக்கு சமம் என்று நினைத்து விடுகிறார்கள். குருவைப் பற்றி எல்லாம் தெரியும் என்று அகந்தை கொள்கிறார்கள். குருவினுடைய வேரோட்டம் மிகப் பெரியது என்று அவர்களுக்கு தெரியவில்லை. குரு ஒரு பெரிய நதி என்பதை அவர்கள் மறந்து போகிறார்கள். ஒரு சின்ன சுழலில் குரு அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு போய் தள்ளி விடுவார் என்பதை அறியாது இருக்கிறார்கள். குரு கருணையால் வெறும் காலை மட்டும் நனைத்து விட்டுப் போகிறார். குரு கருணையால் லேசாக குளுமையாக்கி விட்டுப் போகிறார் என்பது புரியாமல் வாழ்கிறார்கள்.

ஸ்ரீராமானுஜர் இந்தப் பேச்சுகளை உள்வாங்கிக் கொண்டார். வில்லிதாசனை அழைத்தார். “நமது மடத்தின் வேட்டிகள் துவைத்து உலர்த்தப்பட்டிருக்கின்றன”

“ஆமாம், ஐயா. அவை உங்களுடைய சீடருடையவை”

“வில்லிதாசா, பகற்பொழுது, எல்லோரும் உண்டுவிட்டு அயர்ந்து தூங்குகிற நேரம். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த வேட்டியில் ஒவ்வொரு ஜாண் கிழித்துவிடு. நீள, நீளமாய் வேட்டியைக் கிழித்து விட்டால், இடுப்பிலிருந்து கணுக்கால் வரைக்கும் தொங்கும் வேட்டி கணுக்காலுக்கு மேலாக முழங்காலுக்கு கீழே தொங்கும். பார்ப்பதற்கு மிக கம்பீரமாக இருக்கும். இந்த ஆடைகளை கிழித்து விட்டு, அந்தத் துணிகளை சுருட்டி எடுத்துக்கொண்டு போய்விடு.”

எதற்கு என்று வில்லிதாசன் கேட்கவில்லை. சரி என்று தலையசைத்தான். மிகச்சரியாக ஒரு ஜாண் அளவெடுத்தான். எல்லா துணிகளையும் நீளவாக்கில் கிழித்தான். கிழித்த துண்டுகளை சுருட்டி எடுத்துக் கொண்டான். தன் வீடு நோக்கி போனான்.

சீடர்கள் எழுந்தார்கள். மாலை நேரம் உலர்ந்த துணியை மடித்து வைத்து, மறுநாள் மடியாக கட்டிக்கொள்ள, ஆயத்தமானார்கள். துணியை எடுத்து மடிக்கும்போது, வேட்டி ஒரு ஜாண் கிழிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். “எவன் என் வேட்டியை கிழிச்சது?” ஒருவர் உரக்க கத்த ஆரம்பித்தார்.

“எந்த படுபாவியோ என் வேட்டியையும் கிழித்திருக்கிறானே?” இன்னொருவர் கூவ ஆரம்பித்தார்.

“சண்டாளன், சண்டாளன்… என் வேட்டியையும் கிழிஞ்சிருக்குய்யா, யாருடைய வேலை இது? என்ன நினைச்சுட்டு இருக்கிறானுவ?” தலைக்குத் தலை உரக்கக் கத்தினார்கள். அடாத வார்த்தை பேசினார்கள். ஒரு துறவிக்கு சீடர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டார்கள். கிழிந்து போகின்ற ஒரு வேட்டிக்காக இல்லாத கெட்ட வார்த்தை எல்லாம் இறைத்தார்கள். வாசலில் நின்று கத்தினார்கள். ‘யார்? யார்?’ என்று தேடினார்கள். கையில் பிரம்பெடுத்து தெருவில் அலைந்தார்கள். ‘தொலைத்து கட்டி விடுகிறேன், பார்’ என்று உறுமினார்கள். அவர்களால் முடியாது எதுவுமே இல்லை. மிகப்பெரிய போர் வீரர்கள் போல் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

சாது என்கிற தன்மையை அறவே இழந்து ஒரு ஜாண் கிழிசலுக்காக ஊரை நாறடித்தார்கள். தெரு மிரண்டது. மடத்தில் உள்ளவர்கள் ஏன் இத்தனை கோபமாக இருக்கிறார்கள் என்று புரியாமல் பார்த்தது. அவர்கள் கோபத்திற்கு பயந்து உள்ளே பதுங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் பதுங்குவதை பார்த்து இவர்கள் இன்னும் தாறுமாறாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கடைசிவரை கிழித்தது யாரென்று தெரியவே இல்லை.

[தொடரும் ….]