[விஷாத யோகம் புத்தகத்தில் இருந்து. எழுத்துச் சித்தர் பாலகுமாரனுடன் நேர்காணல் சுவாமிநாதன்.]

கேள்வி: குரு மீது கணவன் வாஞ்சையாக இருக்க மனைவி கேலி செய்தாலோ, அல்லது மனைவியின் குருபக்தியை கணவன் எள்ளிநகையாடும் நிலையிருந்தாலோ, இத்தகைய நிலையில் என்ன செய்ய வேண்டும்? பல இடங்களில் இதைப் பார்க்கிறேன். அதனால் இதை நான் கேட்கிறேன் அய்யன்.


பதில்: ஒருவேளை இதைத் தங்கள் அனுபவமாகக் கேட்கிறீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. இருப்பினும் இதற்குப் பதில் சொல்கிறேன்.

ஒருமுறை நான் பகவானுக்கு அருகே உட்கார்ந்து கொண்டிருக்கும் போது. திடீரென ஒரு அம்மாள் கூக்குரலிட்டு புலம்பத் துவங்கினாள். புலம்பும்போதுதான் அந்த அம்மாவைக் கவனித்தேன். அவர் பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை.

ஒரு மாதமாக வருகின்ற பாலகுமாரனுக்கு உயர்நிலையைக் கொடுக்கிறீர்கள். பல வருடமாக வருகிறேன் என்னை ஏன் புறக்கணிக்கறீர்கள். என் கணவன் அடித்து மிதித்தாலும் நான் இங்கு ஓடி வருகிறேன். அவனுக்குத் தெரியாமல் வருகிறேன். ஆனாலும் எனக்கு எதுவும் தராமல் பாலகுமாரனுக்கு எல்லாம் தருகிறீர்களே என என் எதிரே உட்கார்ந்துகொண்டு உரத்தகுரலில் அழுகையும், குற்றச்சாட்டுமாக இருந்தார் அந்தப் பெண்மணி.

நான் என்ன பாபம் செய்தேன் என்று அந்த அம்மாள் கேட்க,”உன் வாயால் இதையெல்லாம் கேட்கிறேனே நான்தான் பாபி ” என்று பகவான் பதில் சொன்னார். நான் திரும்பிப் பேசட்டுமா என்பது போல் பகவானைப் பார்க்க, “சும்மாயிரு” என்பது போல் ஒரு செய்கையில் அடக்கிவிட்டார். நான் வாய்பொத்தி அமர்ந்து கொண்டேன். கிட்டத்தட்ட அரைமணி நேரம் அந்த அம்மாள் புலம்பித் தீர்த்தார்.

அந்த அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியாது. பிற்பாடு எவரோ சொல்லி, அந்த அம்மாளுக்கு அவரின் துன்பத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது என அறிந்தேன். எந்நேரமும் பகவானுடைய தரிசனமே முக்கியம் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார். அவர் என்ன விரும்பினாரோ அது அவருக்குக் கிடைத்தது என்றும் நான் கேள்விப்பட்டேன். எப்படிக்கிடைத்தது என்பதை நான் இங்கு பகிர விரும்பவில்லை.

ஒரு குடும்பத்தில் இப்படிப் பிளவு உண்டாயின் அது சம்பந்தப்பட்டவர்களின் துரதிர்ஷ்டம். ஆனால் ஒரு குடும்பத்துக்குள் இப்படித்தான் யோகி ராம்சுரத்குமார் ஊடுருவுகிறார்.

ஆரம்பத்தில் என்னையும் என் வீடு கேலி செய்தது. தாயார் கடுமையாக எதிர்த்தார். நமக்கெல்லாம் “மகா பெரியவா” தான் சகலமும் என்றார். கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதங்கள் நான் வறுத்தெடுக்கப்பட்டேன். பிறகு என் ஈடுபாடு கண்டு, அவரின் படம் வைத்துக்கொண்டு நான் கொண்டாடுவது கண்டு என் வீடும் மெல்ல மெல்ல யோகி ராம்சுரத்குமாரிடம் நுழைந்தது.

ஒரு வீடு பிளவுபட்டு எதிர்ப்பதும், பின்பு அவர்கள் கூடுவதும் யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்கள் செயல்களாகும். அந்தக் குடும்பத்தை யோகி ராம்சுரத்குமார் தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதே இதற்கு அர்த்தம்.

அந்தக் குடும்பத்தால் பல நூறு குடும்பங்கள் இந்த யோகி ராம்சுரத்குமார் நாமத்தையும் உருவத்தையும் கொண்டாடும். தன் வீட்டைத்தாண்டி ஒரு கணவனோ மனைவியோ வரும்போதுதான் மற்றவர்களை தன்பால் ஈர்க்கமுடியும்.

என் குடும்பம் என்னைக் கேலி செய்தபோதும் நான் பொறுமை இழக்காமலும் கோபப்படாமலும் அவர்களை எதிர்கொண்டேன். அதுவே அவர்களை வியக்க வைத்தது. இந்த அமைதிதான் எனக்கு என் குருநாதர் கொடுத்தது.