[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …]

நல்ல உச்சிவேளை. கோயில் கதவுகள் சாத்தப் பட்டிருந்தன. மற்றவர்களை இரண்டாம் பிராகாரத்திலேயே நிற்கச் சொன்னார் உடையவர். வெள்ளைத்திரை போட்டிருந்தது. அவரும், அவனும் நுழைந்தார்கள். கர்ப்பக்கிரகத்தின் கதவுக்கருகே அவர் நின்றார். கைகளை லேசாக அசைத்தார், கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. அவர் உள்ளே நுழைந்தார். அவன் கர்ப்பக்கிரகத்தின் விளிம்பில் நின்றான். அரங்கனைப் பார்த்துக் கைகூப்பினான். ‘அரங்கா, அரங்கா’ என்று அன்போடு விளித்தான். அவர் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே போனார். திரும்பி அவனைப் பார்த்து சிரித்தார்.

“உள்ளே வா” என்றார்.

‘உள்ளே வருவதா? நானா? நான் வைணவன்கூட இல்லையே? பிறப்பால் சைவனாயிற்றே? வெறும் மல்யுத்த வீரனாயிற்றே? தாழ்ந்த குலத்தோனாயிற்றே? நான் கர்ப்பக்கிரகத்தினுள் எப்படி வருவது? ஸ்ரீவைஷ்ணவர்களில், சங்கும் சக்கரமும் தோளில் தரித்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். அர்ச்சகர்கள் மட்டுமே இந்த இடத்தைக் கடக்க முடியும். மடத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இங்கே வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வைஷ்ணவ சம்பிரதாயத்தை அனுசரிக்கிற பல பேர் இதைத் தாண்டி வருவதற்கு உரிமை இல்லாதவர்கள். அப்படி இருக்க இராமானுஜர் என்னை எதற்கு உள்ளே அழைக்கிறார்?” ஆச்சரியப்பட்டான். தயங்கினான்.

“உள்ளே வா.” மறுபடியும் அவர் அழைத்தார்.

அவன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் போல உள்ளே நடந்தான். படிகளைக் கவனமாகத் தாண்டினான். அவர் அர்ச்சா ரூபத்தைச் சுற்றிக் கொண்டு அரங்கனுடைய பாதத்தருகே நின்றார். அவனும் அர்ச்சா ரூபத்தை நமஸ்கரித்தபடியே, சுற்றினான். அரங்கனுடைய பாதத்திற்கு அருகே போய் நின்றான். கைகூப்பினான். அவர் அவன் முகத்தைத் தள்ளித் தொட்டு பாதங்களுக்கு அருகே தள்ளினார். நேரே இரண்டு பாதங்களுக்கு நடுவே அவனை நிற்க வைத்தார். அரங்கனின் ஒரு பாதம் நேராக இருந்தது. இன்னொரு பாதம் சற்று சாய்வாக படுத்துக் கொண்டிருப்பவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தது. அரங்கனுடைய பாதத்தில் தங்கக் கொலுசுகள் போடப் பட்டிருந்தன. அரங்கனை அந்த இடத்தில் நின்று பார்க்கிற போது, நீண்ட நெடியோனாய்க் காட்சி அளித்தான்.

“வில்லிதாசனே, வில்லிதாசனே!” அவர் மதுரமான குரலில் அழைத்தார். “உலகில் ஒரு பெண் மீது இத்தனை உண்மையான பிரியம் வைக்க முடிந்தவன், இறைவன் மீதும் பிரியம் வைக்க முடியும். இறைவன் மீது உண்மையான பிரியம் வைத்தவன், மிக உயர்ந்த நிலைக்குப் போகமுடியும். வில்லிதாசனே, நீ கண்ட பொன்னாச்சியின் கண்களைவிட, மிக அழகான கண்களை இதோ உனக்குக் காட்டுகிறேன். அங்கிருந்தபடியே அரங்கனுடைய கண்களைப் பார். அரங்கனைப் பார்… அரங்கனைப் பார்… அரங்கனுடைய தரிசனம் உனக்குக் கிடைக்கட்டும். அரங்கா… என் அரங்கா… இதோ நம் வில்லிதாசன் வந்திருக்கிறான்… நம் வில்லிதாசன் வந்திருக்கிறான்… அரங்கா… உன்னை அவனுக்கு உணர்த்து” என்று இரண்டு கைகளையும் உயர்த்தி உரக்கக் கூவினார்.

வில்லிதாசன் உடம்பு நடுங்கிற்று. சில்லென்று வயிற்றுக்குள் ஏதோ நகர்ந்தது. பின் இடுப்பில் ஒரு சக்கரம் சுழன்றது. விடுபட்டது. சக்கரத்திலிருந்து மிகப் பெரிய சக்தி நகர்ந்து, பாம்பு போல் முதுகுத்தண்டில் ஏறியது, நெஞ்சை நச்சென்று அந்த பாம்பு முட்டியது. முட்டிய பிறகு நெஞ்சுக்கூடு உடைந்து வேறொரு சக்தி கிளம்பியது. அந்த சக்தி மார்பு முழுவதும் பரவி தோள் முழுவதும் பரவி, கண்டத்தில் ஏறி, சுழன்று, முறுக்கி நின்றது. மறுபடியும் உயரே ஏறி, நெற்றிக்குள் கரகரவென்று ஏறி, குறுகுறுப்பாய், பம்பரமாய்த் தைத்தது. நெற்றியிலிருந்து விடுபட்டு மேலேறி வெடித்துச் சிதறியது. அவன் அலறினான். வாய்விட்டு அலறினான். இரண்டு கைகளையும் உயர நிறுத்தி அலறினான். நெஞ்சுக்குக் கீழே இருதயத்தைத் தாங்குவது போல இடக்கையை வைத்துக் கொண்டு வலக்கையின் விரல்களைப் பிரித்தபடி மேலே பார்த்து அலறினான். அவன் சக்தி முழுவதும் அவன் தலைக்கு மேல் ஒரு கை உயரத்தில் நின்றுகொண்டிருந்தது. ஒரு கை உயரத்தில் இறைவனுடைய ஆட்சி நடப்பதை அவன் உணர்ந்து கொண்டான். தனக்குள் இருக்கும் சக்தியும் இறைவனுடைய ஆட்சிக்குள் இருக்கும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்ந்தான். இரண்டும் அருகருகே நின்று ஒன்றையொன்று வியந்து பார்ப்பதை உணர்ந்தான். உடம்பிலிருக்கின்ற சக்தி, தலைக்கு மேலே இருக்கின்ற சக்தியிடம் போய் நின்று, விம்மி, விம்மி அழுவதை வியந்தான். அந்த அழுகையைத் தானும் உணர்ந்தான். தனக்குள் இருக்கிற சக்தி தவிக்கிறது. அவனும் தவித்தான். கருவறை முழுவதும் ஒரு நீல நிற சக்தி பரவிக் கிடந்தது. வெளிச்சம் இல்லாத ஒரு வெளிச்சம் அங்கு நிரவிக் கிடந்தது.

அந்த நீல ஒளியில் இரண்டு கண்கள் மெல்லத் தோன்றி அவனைப் பார்த்து சிரித்தன. ‘வா’ என்று அழைத்தன. முகமில்லை. வெறும் கண்கள் மிகப் பெரிய கண்கள். பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கின்ற கண்கள் அவன் முன்பு தோன்றின. அவன் திகைத்தான். அந்தக் கண்களால் முற்றிலுமாக ஈர்க்கப்பட்டான். அந்தக் கண்களை நோக்கிக் கரம் குவித்தான்.

‘அரங்கா! அரங்கா’ என்று அலறினான். அரங்கன் என்பது சுதை உருவமல்ல. அவை கண்கள் எங்கும் நீக்கமற நிறைந்த ஒரு சக்தி ‘ஒளியில்லாத ஒரு ஒளி’ மிகப் பெரிய ஒரு இயக்கம் என்பதை அந்தக் கணம் உணர்ந்து கொண்டான்.

தனக்குள்ளும் தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்குள்ளும் அந்த சக்திதான் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்தான். உள்ளும் புறமும் பரவிக் கிடந்ததை உணர்ந்து கொண்டான். எல்லா இடத்திலும் அந்த சக்தியின் ததும்பலை அறிந்து கொண்டான்.

உடம்பு என்பது அந்த சக்தியின் வேறொரு வடிவம். தாவரம் என்பது அந்த சக்தியின் இன்னொரு ரூபம். தூண் என்பது அந்த சக்தியின் இன்னொரு அம்சம். பூமி என்பது அந்த சக்தியின் இன்னொரு நிலை. காற்று என்பது அந்த சக்தியின் வேறொரு அசைவு. நெருப்பு என்பது அந்த சக்தியின் இன்னொரு தவம். அந்த சக்தியே எல்லாம். அந்த சக்தியே பிரபஞ்சம் முழுவதும். அந்த சக்தியே இறை. அந்த சக்தியே அரங்கன். அரங்கன் சந்நிதிக்குள் அந்த சக்தி பெரிய திகழ் சக்கரமாய், வட்ட வடிவமாய், மிக அற்புதமாய் நிறைந்து கிடந்தது. அடர்த்தியாய் அந்த அறை முழுவதும் பரவிக் கிடந்தது.

ஸ்ரீராமானுஜர் நெஞ்சுக்குள்ளும் ஒரு சக்கரம் அடர்த்தியாய் சுழன்று கொண்டிருந்தது. கருவறை முழுவதும் பரவியிருந்த அந்த சக்தி ஸ்ரீராமானுஜருடைய திகழ் சக்கரத்துக்குக் கட்டுப்பட்டது. அரங்கா என்று அவர் அழைத்தபோதெல்லாம், அந்த சக்தி அழகாய்த் துடித்தது. அவருக்கு அருகே குவிந்தது. அவர் சொன்னதைச் செய்ய சித்தமாய் இருப்பது போல் வில்லிதாசனுக்குத் தோன்றியது. வில்லிதாசன் மறுபடி அலறினான். அந்த சக்தியின் வேகம் தனக்குள் பரவுவதைத் தாங்க முடியாமல் தவித்தான். திகழ் சக்கரத்தாரின் கால்களில் ஓடிப்போய் விழுந்தான். பற்றிக் கொண்டு நெற்றியைத் தேய்த்தான். அவன் உள்ளுக்குள் ஜீவதாரகையாய், அமுதமாய் ஒரு உணர்வு பரவி அவனைக் குளுமையாக்கியது. இதுவல்ல வாழ்க்கை. இந்த உடலல்ல முடிவு. இது எல்லாம் தாண்டியது. உள்ளுக்குள் இருக்கிற சக்தி எல்லாம் தெரிந்தது. அந்த சக்தியை ஒரு முறை உணர்ந்துவிட, அந்த சக்தியை ஒரு முறை பார்த்துவிட, உடம்பினால் செய்யப்படுகின்ற செயல்கள் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகின்றன. அந்த செயல்கள் ஒரு நெறிமுறைக்கு உட்பட்டால் அவைகளுக்கு அர்த்தம் இருக்கிறது. இல்லையெனில், அபத்தம்தான் தலை தூக்குகிறது. எனவே, உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, உள்ளுக்குள் இருக்கிற சக்தி எப்படி இயக்குகிறதோ அப்படி இயங்க இங்கே இந்த கணத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். அதைக் கற்றுக் கொடுத்த இந்த திகழ் சக்கரத்தார் பாதங்களை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவன் மறுபடியும் தலை உயர்த்தி அவர் கருணை முகத்தைப் பார்த்துவிட்டு, அவர் கால்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

அவர் மெல்லக் குனிந்து அவன் உச்சந்தலையைத் தடவினார். உள்ளுக்குள்ளே கொதித்த அந்த சக்தி மெல்ல அடங்கியது. சுருண்டது, சிறிய புள்ளியாகியது. இருதயத்திற்குக் கீழே உள்ள வெற்றிடத்தில் நிலைகொண்டது. அவன் எழுந்தான். அரங்கனைக் கண்குளிரப் பார்த்தான். கால்களில் தன் நெற்றியைத் தடவிக் கொண்டான். வயிறைத் தடவித் தன் முகத்தில் தேய்த்துக் கொண்டான். மார்புற அரங்கனைத் தழுவிக் கொண்டான்.

கன்னத்தோடு கன்னம் வைத்தான். மூக்கைத் தொட்டான். இதழை வருடினான். நெற்றியில் முத்தமிட்டான். காதுமடல்களைத் தடவினான். புஜங்களைப் பிடித்தான். விரல்களையெல்லாம் நீவினான். அவரைச் சுற்றி வந்தான். ஆதிசேஷனைத் தடவியபடியே நின்றான். உற்சவரை அள்ளி மார்புறத் தழுவிக் கொண்டான். ஸ்ரீதேவி, பூதேவியைத் தொட்டு வணங்கினான். சாளக்கிராமங்களை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டான்.

அரங்கனுடைய கௌஸ்துப மாலையைக் கழட்டி தன் நெஞ்சில் சிறிதுநேரம் வைத்துக்கொண்டான். அரங்கனுடைய பூணூலை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். செங்கோலை எடுத்துத் தோளில் சாய்த்து தலையில் வைத்துக் கொண்டான். மறுபடியும் பழைய இடத்தில் வைத்தான். வெளியே வந்தான். ஒட்டுமொத்தமாய் அந்த அறைக்கு நமஸ்காரம் செய்தான். அவரையும், அந்த அரங்கனையும் ஒன்றாகக் கண்டான்.

அரங்கரே திகழ் சக்கரத்தார் என்கிற ஸ்ரீராமானுஜரே அரங்கன். அது வேறு ஒரு வடிவம் கொண்டு இங்கே உலா வந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீரங்கம் செய்த பாக்கியம் – ஒரு கடவுள் தம்மைக் குருவாக மூங்கில் சார்த்தி, காவியுடுத்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறை இங்கே இறங்கி வந்து மனித ரூபம் கொண்டு மெல்லச் சிரித்துக் கொண்டிருக்கிறது. கேலி செய்து கொண்டிருக்கிறது. விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் அன்போடு பரிதவித்து அணைத்துக் கொண்டிருக்கிறது. இது வெறும் மனித ரூபம் அல்ல. இது கடவுள் தன்மை. எங்கும் நிறைந்த இறைசக்தி. இது பிரபஞ்சத்தின் மிகப் பெரிய ஒளி தரையிறங்கி வந்து இறைவன் புகழைப் பாட தன் புகழைத் தானே பாட தீர்மானித்திருக்கிறது. தீர்மானம் செய்து மிகப் பெரிய ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது. சந்திரர், சூரியர் உள்ளளவும் இங்கே நிகழக் கூடிய ஒரு ஒழுக்கத்திற்கு வித்து வைத்திருக்கிறது, புள்ளியிட்டிருக்கிறது.

இது சாதாரணமல்ல. இது பரதகண்டம் முழுவதையும் வளைத்துப் போடுவதற்கு மிகப் பெரிய திட்டங்கள் தீட்டியிருக்கிறது. இது வெறும் துறவியல்ல. அரசாளும் வல்லமையுடையது. சக்கரவர்த்தி மிகப் பெரிய இராஜதந்திரி. இது தன்னுடைய தந்திரங்களாலும், அன்பினாலும், மக்களைக் கட்டிப்போட்டு, அவர்களை மனம்மாறச் செய்து, ஒரு பெரிய இயக்கத்தை வேரூன்றச் செய்யப் போகிறது. வெளியிலிருந்து வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த தன்னை உறுதியாக்கிக் கொள்ளப் போகிறது. இது காரணமில்லாமல் இங்கு தோன்றவில்லை. இந்து மதத்தின் ஆணிவேர் இன்னும் பூமியின் அடி வரை இறங்கப் போகிறது. எவராலும் அறுக்க முடியாதபடி, கிளைத்து எழுவதற்காக இங்கே இது இன்னும் உறுதியாய் பரவியிருக்கிறது. பரவ இவர் முயற்சி செய்கிறார்.

இது இறை. இது குரு. இது திகழ் சக்கரம். இவர் ஸ்ரீராமானுஜர். இவை எல்லாம் ஒன்றே. அவன் மறுபடியும் விழுந்து நமஸ்கரித்தான். விம்மி, விம்மி அவரைப் பார்த்து அழுதான்.

“ஐயனே, ஐயனே, ஐயனே” என்று அவரை நோக்கிக் கைவிரித்துக் கதறினான். அவர் கருவறையில் இருந்தபடியே கை உயர்த்தி அவனை ஆசீர்வதித்தார்.

அரங்கன் கருணையுள்ளவன். அவர் நினைத்ததை விட மிகத் தெளிவாகத் தன்னை வில்லிதாசனுக்குக் காட்டியிருக்கிறான். வில்லிதாசனுடைய உண்மை, வில்லிதாசனுடைய வெகுளித்தனம் அவனுக்கு எதைப் பார்க்க வேண்டுமோ, அதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இது வீரிய வித்து. இது மிகப் பெரிய சொத்து. இது சுத்தமான பொருள். இது நிர்மலமான விஷயம். அதனால்தான் இறைதரிசனம் மிக எளிதாக இவனுக்குள் ஏற்பட்டு விட்டது. பெண்ணைக் கொண்டாடுகிறவன் இல்லை இவன். தாசியின் பின்னால் போகிறவன் இல்லை இவன். பெண்ணின் அழகுக்காக மாய்ந்து, மாய்ந்து குடை பிடித்து, நடைபாவாடை விரிக்கின்ற சாதாரண காமுகன் இல்லை இவன். இவன் உயர்ந்த ஜாதி. உள்ளுக்குள்ளே என்ன இருக்கிறதோ, அதையே வெளியே செய்கிற தைரியமுள்ள புருஷன். பௌருஷம் நிரம்பியவன். உள்ளே என்ன நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதுவே வெளியே தன் வாழ்க்கையாகவும் வைத்துக் கொண்டிருக்கிறான். உலகில் எல்லா ஆண்களும், உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்க, நல்லதும் தீயதுமாகக் கலந்திருக்க, இவன் வெகுளியாய், ஒற்றையாய் நிற்கிறான். அதனால்தான் இறைதரிசனம் இவனுக்கு எளிதில் ஏற்பட்டுவிட்டது. இவனை நாம் தேர்ந்தெடுத்தது சரியான விஷயம். இவன் வைணவத்தின் ஒரு தூண். இவன் நமக்கு உகந்தவன். இவன் நம்மில் ஒருவன்.

அவர் வெளியே வந்தார். கைநீட்டி அவன் தோளை பற்றிக் கொண்டார். “நட” என்றார்