ஐயன் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும், கமலா அம்மா அவர்களுக்கும் திருமணமாகி 25 ஆண்டு நிறைவையொட்டி அப்போது வெளி வந்த லேடீஸ் நாவலில் ” இனிய இல்லறம்” என்ற தலைப்பில் ஐயன் எழுதியவை.

இல்லற வாழ்க்கையின் கால் நூற்றாண்டில் தடம் பதிக்கும் நம் எழுத்துச்சித்தரின் அன்பும், ஆசியும் நமக்கிருந்தாலும், இல்லறம் நல்லறமாக அவர் சொல்லும் இனிய வழிகள் இருபத்தைந்தை ஊன்றிப் படியுங்கள். வாழ்க்கையை அதன் ஓட்டத்தோடேயே உணர்ந்து கொள்ள இவை உதவி செய்யும்.

  1. திருமணமாவதற்கு முன்பு, திருமணம் செய்து கொள்ளவதற்கு ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசையில்லாமல் திருமணம் செய்து கொள்வது, அழிவைத் தரும். எனவே, திருமணத்திற்கு ஆசையோடு முயற்ச்சிக்க வேண்டும்.
  2. திருமணமாவதற்கு முன்பே, திருமணமான இளம் தம்பதியர், மத்திம வயதினர், வயதானவர்கள் எப்படி ஒற்றுமையாய் அல்லது கருத்து வேறுபாடாய் வாழ்கிறார்கள் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும். பிற தம்பதியரை கவனிப்பதன் மூலம் நம்முடைய குணாதிசயங்களை இனம் கண்டு கொள்ள முடியும்.
  3. உடல் ரீதியாக திருமணத்திற்கு ஒருவர் தயார் செய்து கொள்ள வேண்டும். வலுவுல்லவராய், வியாதிகளற்றவராய், நன்கு ஆழ்ந்து தூங்குபவராய், பிடித்து சாப்பிடுபவராய், திருமணத்திற்கு தயாராகும் ஆணும் பெண்ணும் இருக்க வேண்டும்.
    உடலுறவிற்கு தகுதியுள்ளவர்தானா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். சந்தேகம் வந்திடின், மருத்துவரிடம் போய்விட வேண்டும். இதென்ன… இப்படி இருக்கிறதே… என்று அவரிடம் ஆலோசனை பெற வேண்டும். லேசுபாசாய் உடலுறவு பற்றிய ஞானம், ஆண் பெண் இருவருக்கும் வேண்டும். எதுவுமே தெரியாமல் திருமணத்திற்குள் நுழைவது சுவரில் முட்டிக் கொள்வது போல, ஆபத்தை விளைவிக்கும்.
  4. பொருளாதாரம் மிக முக்கியம். ஒரு பெண்மணி, ஒரு குழந்தை, இவர்களைக் காப்பாற்றுகின்ற அளவிற்கு நமக்கு பொருளாதார வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில், மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார வசதி குறைவாக இருக்கும் போது, திருமணம் செய்து கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது.
  5. உங்களுக்கு இருக்கும் ஃபேமிலி செட்டப் என்பதை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரியமுள்ள தாய்மாமன், கனிவுள்ள தகப்பன், அக்கறையுள்ள தாய் என்கிற வட்டமிருப்பின், உங்கள் திருமணம் இன்னும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இவர்கள் இல்லாத திருமணம் சற்று பாலைவனம்தான்.
  6. ஊர் அறிய திருமணம் செய்து கொள்வதைப் போல அழகு எதுவுமில்லை. ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம். பிற்பாடு, நெஞ்சின் அடியில், ஊரறிய நடக்கும் திருமணங்களுக்கு போகிற பொழுது உள்ளே லேசாக வலித்தாலும் வலிக்கலாம். எனவே காதல் திருமணமாக இருந்தாலும், ஜாதி விட்டு ஜாதி திருமணமாக இருந்தாலும் பெரிய சபை முன்பு கம்பீரமாய் திருமணம் செய்து கொள்வதே உத்தமமானது. அதற்கான முயற்சிகளே உங்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் என்பது என் கருத்து.
  7. திருமணம் என்று ஆன பிறகு, உங்களுடைய எல்லா செயலிலும் எண்ணத்திலும் முதலிடம் மனைவிக்குத் தான். பிறகுதான், மற்றவர் எல்லோரும். அம்மாவைவிட மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிந்தவர்தான் சரியான கணவன் என்பது என் கருத்து. பிறந்த வீட்டை விட, புகுந்த வீடும் புருஷனும் தான் முக்கியமானவர்கள் என்று நினைக்கிற பெண்தான் கம்பீரமானவள் என்பது என் எண்ணம்.
  8. மனைவி என்பவள் பறித்து நடப்பட்ட செடி போல, இருபத்து மூன்று வயது வரை வேறு எங்கேயோ வாழ்ந்துவிட்டு, நமது வீட்டிற்கு வருகிறார் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய ஒவ்வொரு அசைவும், கலவரமும் பயமுமாய் இருக்கும். அதை உடனடியாக நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கூடலுக்கு ஆளாய் பறக்காமல், பேசிப்புரிந்து கொள்ளுகின்ற, நிதானம் கம்பீரம் புருஷனுக்குத் தேவை. இந்த நிதானம், பெண்ணுக்கு மிகு‌ந்த நம்பிக்கையை கொடுக்கும். கருணையோடு நம்மை நடத்துகிறார் என்கிற சந்தோஷம் அவளை கனிய வைக்கும்.
  9. எவ்வளவு விரைவில் தனிக்குடித்தனம் போக முடியுமோ, அது நல்லது என்பது என் சொந்த அபிப்பிராயம். கூட்டுக்குடும்பமாக வாழ முயற்சி செய்யின், உங்களுக்கென்று ஒரு தனியான இடம் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். பெரிய கும்பலாய் வாழ்வதில், பல அந்தரங்கங்கள் அடிபட்டு விடுகின்றன. திருமணமாவதற்கு முன்பே கூட, தனிக்குடித்தனம் வைக்கின்ற தகுதிகளை ஒருவன் மேற்கொள்ளலாம்.
  10. நிறைய, கணவனும் மனைவியும் பேச வேண்டும். பேசினால், பொல்லாப்பு வந்து விடும் என்றோ, பேசினால் பழங்கதைகள் தெரிந்து விடும் என்று பயமோ, பேசினால் கம்பீரம் குறைந்து விடும் என்ற அலட்டலோ இருப்பின், இல்வாழ்க்கை சோபிக்காது. ‘நீ யார், உன் விருப்பம் என்ன ‘ என்று பரஸ்பரம் பேசிக் கொள்கின்ற தைரியம் இருந்தால்தான், திருமணத்தில் இறங்குவதே நல்லது. இல்லையெனில் சன்யாசம் உத்தமம்.
  11. சிறிய பரிசுகள். “இன்று நமக்கு திருமணமாகி நூறாவது நாள். வாழ்த்துகள்” “உங்கப்பாவுக்கு இன்னிக்கு வெட்டிங் டே இல்ல…வா, போய் பார்த்துட்டு வருவோம்” என்கிற அக்கறைகள் பரஸ்பரம் இருப்பின், திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும்.
  12. திருமணத்திற்கு பிறகு, மாமனார் வீட்டிலிருந்து பணமோ பொருளோ அதிகம் எதிர்பார்ப்பது அசிங்கம். அதை மறுக்கின்ற கம்பீரம் வேண்டும். அவர்களால் எளிதாக செய்ய முடிகிறதென்றால் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, எப்போது செய்வார்கள் என்று மனைவியின் தந்தையை நோகடிப்பது, மனைவியை நோகடிப்பதற்கு சமம். இது பெரும் கசப்பை உடனடியாக கொடுத்துவிடும். அதே போல, கணவரின் பெற்றோருக்கு உதவி செய்யவும், பரிசுகள் வழங்கவும், மனைவி முற்பட வேண்டும். மனைவியின் தாயை மனம் குளிரச் செய்தல், நல்ல சந்ததிக்கு வழிவகுக்கும்.
  13. திருமணம் செய்து உடனே ஊருக்கு ஓடுவது, பிழைப்பிற்கு வெளிநாட்டிற்கு போவது என்பது மிகப் பெரிய கொடுமை. இவ்விதம் இல்லாது, காலையில் வேலைக்கு போய், மாலையில் திரும்புகின்ற உத்யோகம் இருப்பின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வேறு வழியில்லை எனில், நீண்ட நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.
  14. மனைவி கையால் உணவு உண்பதும், அந்த உணவை மனமார பாராட்டுவதும், முன் பின்னாக இருந்தாலும் சிலாகித்துச் சொல்வதும் நல்லது. மிகவும் ருசியாக ஹோட்டல் சட்னி போல இல்லை. கல்யாண சாப்பாடு போல இல்லை என்று சோறு பற்றி அதிகம் புலம்புபவன் பிற்பாடு வேதனைப்படுவான். அதேபோல், மனைவியும் அதிகமாய் சமைத்துப் போட்டு ஜெயித்து விடலாம் என்று நினைப்பதிலும் ஒரு முட்டாள்தனம் இருக்கிறது. உணவு ருசி மட்டுமல்ல, அது ஆரோக்கியமான விஷயம். ருசி மற்றும் உப்பும் உறைப்பும் குறைவாக இருந்து சாப்பிடவும் ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும். மிகவும் நுணுக்கமான ருசியோடு சாப்பிடுவது, நோய் கொடுக்கும். மனைவி நோயற்ற குடும்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டுமே தவிர, வெறும் புளிப்பும் உப்பும், காரமும் கசப்புமாய் கலந்து அவியலை அள்ளி விட்டுவிடக்கூடாது. ஆரோக்கியமான உணவு சமைப்பவளே நல்ல மனைவி.
  15. திருமணமாவதற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உடை விஷயங்களில், திருமணத்திற்கு பிறகு ஒரு கம்பீரம் வந்து விட வேண்டும். அரை டிராயரோடு அதற்குப் பிறகும் அலையக் கூடாது. திருமணம் என்பது மனிதனை முழுமையாக்குகிறது. வெள்ளை வேட்டி சட்டை, மெல்லிய நிறமுடைய உடைகள் போன்ற கம்பீரமான விஷயங்கள் இருவரையும் சந்தோஷப்படுத்தும். இங்கே கவர்ச்சியை விட, கம்பீரமான உடைகள்தான் திருமணமானவருக்கு பொருந்தும்.
  16. திருமணமான பிறகு, ஒருநாள் இரண்டு நாள் பயணங்கள், ஒரு வாரம் சுற்றுலா என்று போவதற்கு முயற்சி செய்ய வேண்டும். வேறு எங்கேனும் ஊரில் போய், எந்த வேலையும் இல்லாமல் எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். பழைய கதைகளையெல்லாம் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும். அந்த தைரியம் இரண்டு பேருக்கும் வரவேண்டும்.
  17. திருமணமான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளேயே, ஒரு மெல்லிய சிக்கனத்தை கை கொள்ள வேண்டும். நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும், நம்முடைய குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். என்னவிதமான படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசி, அதற்கான சேமிப்பை உடனடியாக துவக்க வேண்டும்.
  18. இது மனைவியின் வேலை, இது கணவனின் வேலை என்று பிரித்துக் கொள்ளாமல், எல்லா வேலையையும், எல்லாரும் செய்ய வேண்டும். உதாரணமாக, புடவை துவைக்க வேண்டிய அவசியம் என்று கணவனுக்கு வந்துவிட்டால், கூசாமல் செய்ய வேண்டும். செய்து விட்டு ஆஹா… நான் எப்படிச் செய்கிறேன் என்று அலட்டவும் கூடாது. மிகச் சாதாரணமாக, இது நம்முடைய வேலை, அதை நீ செய்தால் என்ன நான் செய்தால் என்ன என்று பகிர்ந்து கொள்வதில் நல்ல நட்பு ஏற்பட்டு விடும்.வெளியே உங்களுக்கு ஏதேனும் பெயர் இருக்கலாம். ஆனால், ரகசியமாக ஒருவருக்கொருவர் பெயர்கள் சூட்டிக் கொள்ள வேண்டும். அந்தப் பெயரில்தான் கடிதம் எழுத வேண்டும். இது நீ எனக்கு மட்டும் என்கிற ஒரு உணர்வை, குதூகலத்தை நிச்சயம் கொடுக்கும்.
  19. சந்தோஷம் என்கிற விஷயத்தில் கலந்து கொள்வதில் கூட, தாமதம் ஏற்படுத்தலாம். ஆனால் ஆபத்து அவசரம் என்கிறபோது, அது என்னவாக இருந்தாலும் மனைவிக்கு அருகே போய் நின்று, நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே என்று உடனடியாக உறுதி வழங்க வேண்டும். கணவன் சிக்கலில் இருக்கிற பொழுது, நான் எப்படியாவது உங்களை மீட்கிறேன் என்று மனைவி ஆறுதல் சொல்ல வேண்டும். இம்மாதிரி காலத்தால் செய்யப்பட்ட உதவிகள் பின்னால் நல்ல அஸ்திவாரமாக மாறும்.
  20. ஒரு வேளை மனஸ்தாபம் ஏற்பட்டால், சண்டை போடாதீர்கள். மவுனமாக இருந்து விடுங்கள். இரண்டு நாட்கள் பேசாது இருந்து விடுங்கள். மெல்ல மெல்ல மனஸ்தாபத்திற்கான காரணம் புரியும். அப்போது, நிலைமையை தெளிவாக்கிக் கொள்ளலாம்.
  21. மனைவி கர்ப்பமானால் அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கின்ற கருணையை , உடனே கைகொள்ள வேண்டும். அது மிகப் பெரிய வரம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியை வெட்கமின்றி சீராட்ட வேண்டும். மனைவியும் விட்டால் போதுமென்று , பிறந்த வீட்டிற்கு ஓடாமல் , அந்த நேரத்தில் கணவனோடு அருகேயிருந்து, அவனுடைய அன்பையும் , ஆறுதலையும் பெறவேண்டும்.’ எனக்கு இப்ப அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு’ என்று புருஷனை விட்டு பிள்ளைப் பேற்றுக்குப் போகின்ற பெண்கள் எங்கோ தவறு செய்கிறார்கள் என்பது என் எண்ணம்.
  22. குழந்தைப் பேறின் போது மனைவிக்கு அருகே இருப்பது நல்லது. வலி எடுத்த போது , மனைவியை கூட்டிக் கொண்டு போய் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பது , உத்தமம் என்பது என் எண்ணம். குழந்தை பிறந்ததும் மனைவியின் தலையைத் தடவி, நன்றி சொல்லவும் ஒரு புருஷன் தெரிந்து கொள்ள வேண்டும். கணவனுடைய இந்த ஆதரவைப் பார்த்து, மனைவி அவன் கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும். காதல் அல்லது திருமணம் முழுமையடைவது குழந்தைப் பேற்றுக்குப் பிறகுதான். வாழ்க்கை மொத்தமும் திசைமாறியிருப்பதை, இப்போது கெட்டிக்காரர்கள் புரிந்து கொள்வார்கள். பிரம்மச்சர்ய வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் தள்ளி வந்து விட்டோம் என்பதை ஒரு கணவன் புரிந்து கொள்ள வேண்டும்.
  23. குழந்தை பிறந்த பிறகுதான் நீங்கள் சம்பாதிக்கும் லட்சணம் உங்களுக்கே தெரியவரும். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கும். குழந்தைக்கு முழுநேர கவனம் தாயார் தரவேண்டி இருப்பதால், அந்தப் பெண்மணி உங்களுக்கு மனைவியாக இருப்பதற்கு முடியாமல் போகலாம். எனவே அவருக்கு வேலைக்காரனாக, உதவியாளனாக, நீங்கள் இருந்து, குழந்தை போஷாக்கை கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தை பேசத்துவங்கும், பாடத்துவங்கும். ஆடத்துவங்கும். இல்வாழ்க்கையின் மிகமிக முக்கியமான நேரம் இதுதான். இப்போதுதான், உங்களுடைய வாழ்க்கை வண்டி ஒரு நெடும்பயணத்திற்கு தயாராகி விட வேண்டும். உங்கள் படகில், நீங்கள்தான் இன்ஜின். மனைவிதான் சுக்கான். குழந்தைதான் பரபரக்கின்ற வெற்றிக்கொடி. ஓட்டம் அத்தனையும் அழகாக இருக்கும். அடுத்த குழந்தை பிறப்பதை தள்ளிப் போட்டு , இந்தக் குழந்தை மீது முழு அக்கறையும் செலுத்த, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை திருவிழாவாகத்தான் இருக்கும்.
  24. மனைவியிடம் எல்லாவற்றையும் மனம் திறந்து பேசுகின்ற ஒரு சுமுகமிருப்பின் , இதைவிட சந்தோஷம், வாழ்க்கையில் வேறு எதுவும் இருக்க முடியாது. மனிதர்கள் குறைநிறைகள் உள்ளவர்கள். பரஸ்பரம் இருவருமே அவரவர் குறை நிறைகளைப் புரிந்து கொள்ளுதல், நல்ல இல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
  25. ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையோடு எழுந்து நானும் என் குடும்பமும் நலமாக இருக்க அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். வீட்டில் குழந்தை பிறந்தவுடனேயே , கூட்டுப் பிரார்த்தனை வந்து விட வேண்டும். குழந்தையை நடுவில் வைத்து , கணவனும் மனைவியும் பிரார்த்தனை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுத்தர வேண்டும். இறை பணிவு இல்லாத, இறையருள் இல்லாத வாழ்க்கை வீண். இறை மீது நம்பிக்கை வைத்து , தொடர்ந்து நடக்க, பணிவும் அன்பும் அதனால் விளையும் நல்ல பலன்களும் , இல்வாழ்க்கையை சுகமாக கொண்டு வந்து விடும்.

எனக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொன்னேன். இல்வாழ்க்கை என்பது , ஒரு சிறிய வட்டத்தில் அடைத்துவிட முடியாத விஷயம். அது சமுத்திரம்தான். கடப்பதற்கு அரிய ஒரு விஷயம்தான்.ஆனாலும், கடந்துதான் ஆகவேண்டும்.

– ஐயன் பாலகுமாரன்.