சில இந்துக் குடும்பங்களில் வழிபாடு என்பது மாலை போட்டுக் கொள்ளுதலும், கருப்பு உடை தரித்தலும், அல்லது காவி வேட்டி அணிதலும், விரதமிருக்கிறேன் என்று வெளியே காட்டிக் கொள்ள சிகை வளர்த்தலும், பெரிதாய் சந்தனம் பூசிக் கொள்ளுதலும் என்பதாய் சற்று அலட்டலாய் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

வழிபாடு என்பதை விளம்பரமாகச் செய்வதுதான் எங்களுடைய வழக்கம் என்பது போலவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள். மலைக்குப் போறேன் மலைக்குப் போறேன் என்று பீற்றிக் கொள்ளுகிறார்கள். ஒருவரையொருவர் சாமி என்று போலிப் பணிவோடு கும்பிடுகிறார்கள். உண்மையில் இந்த வழிபாடு மிகப் பெரிய அகங்காரத்தைத் தோற்றுவிக்கிறது. நான் பலபேர் முகத்திலும், பேச்சிலும், செய்கையிலும் கண்டிருக்கிறேன். இதைத் தொடாதே, அதைத் தொடாதே, இங்கே வைக்காதே, அங்கே வைக்காதே என்று பல்வேறு விதமாக தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட நீதிகளை வீட்டாரின் மீது தீவிரமாக செலுத்துவதையே மிக முக்கியமான சடங்காகவும் சிலர் வைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் கூட மேலே பட்டுவிடக் கூடாது என்று மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். மடி, ஆசாரம் என்பதெல்லாம் பிரமாதமான விஷயம்தான். அவைகளுக்கு நல்ல குறிக்கோள்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். அவைகளால் மனம் பக்குவப்படுகிறது என்பது சரிதான். ஆனால் இதற்கு அடிப்படையான எல்லா வழிபாட்டிற்கும் அடிப்படையாய இருக்கிற அன்பு என்கிற விஷயம் இல்லாது போனால் இவை அத்தனையும் அர்த்தமற்றதாகவே மாறிவிடுகிறது.

இந்த அன்பு என்ற விஷயம் பல சமயங்களில் இந்த மாதிரி ஆடம்பரமான சடங்குகளில் தகர்ந்து போய்விடுகிறது.

இத்தோட பதினெட்டாவது தடவை நான் மலைக்குப் போயிட்டு வரேன் என்று குருசாமி ஆக்கிக் கொள்ளும் தீவிரம்தான் ஏற்படுகிறது. தான் என்ற விஷயத்தை அழித்துக் கொள்கின்ற முனைப்பு. தன் அகங்காரத்தைச் சிதைத்துக் கொள்கின்ற முனைப்பு. தன் அகங்காரத்தைச் சிதைக்கக் கூடிய விஷயம் இதில் ஏற்படவேயில்லை. எதிர்மறையாகத்தான் இந்த பூஜைகள் சிலரால் செய்யப்படுகின்றன.

விரதம் மேற்கொண்ட அத்தனை பேரும் எங்கேனும் போய் பொங்கல் சாப்பிடுவதற்குப் பரபரக்காமல் வீட்டு பூஜையிலும் கலந்து கொண்டு கோஷம் இடுவதற்கு முற்படாமல் தனியே சில மணி நேரங்கள் ஆழ்ந்து அமைதியாய் உட்காருவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐயப்பன் நாமமோ, ராம நாமமோ, சிவ நாமமோ எங்கேனும் தனித்து உட்கார்ந்து இடையறாது ஜபித்தால் மிகப் பெரிய சந்துஷ்டியைத் தரும்.