உ
யோகி ராம்சுரத்குமார்
தங்கக்கை – பகுதி 1
[தங்கக்கை புத்தகத்திலிருந்து …]
அங்கே வமூர் அக்ரஹாரத்தில் ஜோதிமயமான ஒரு குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை பிறந்த காலம். இந்திய நாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. அதுவரை இருந்த சமூக அமைப்புகள் திசை திரும்பின.
பிரிட்டிஷ் அரசாங்கம் முழுபலத்தோடு இந்தியாவை சுற்றி வளைத்துக் கொண்டது. இந்தியாவின் மக்களுக்கு ஆங்கிலேயர்களே வாதாடும் வண்ணம் இந்தியா பாழ்பட்டு இருளில் கிடந்தது.
நாகரீகத்தாலும் கலாசாரத்தாலும் பொருளாதாரத்தாலும் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் மக்களை திசைதிருப்புமாறு சேஷாத்திரி பிறந்தார்.
அவருடையது ஹஸ்த நட்சத்திரம். ஜனவரி மாதம் இருபத்தி இரண்டாம் தேதி. ஆயிரத்து எண்ணூற்று எழுபதாவது வருடம்.
அவர் பிறந்த சிறிது நாட்களுக்கெல்லாம், காமகோடி சாஸ்திரிகள் வரதராஜனுடன், வரதராஜனுடைய மனைவி தராஜனா மரகதத்துடன், பேரன் சேஷாத்திரியுடன் காஞ்சிபுரத்திற்கு குடிபுகுந்தார்.
உறியாகக் கட்டி அந்தக் கூடை முழுவதும் வெண்கல கிருஷ்ணர் பொம்மைகள் வந்திருந்தான். விற்பதற்கு எடுத்து வந்திருந்தான்.
இரண்டங்குல உயரத்திற்கு தவழும் கிருஷ்ணர் பொம்மைகள் ஆயிரத்து நாற்பது இருந்தன. ஒரு உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்த பொம்மை பார்க்க மிக மிக லட்சணமாக இருந்தது, காஞ்சிபுரத்தில் எதுவும் விலைபோகும் என்பதால் அவன் விடியலில் கிளம்பி இந்த ஆயிரம் பொம்மைகளையும் சுமக்க மாட்டாமல் சுமந்து உற்சவத்திற்கு வந்திருந்தான்.
உறியைக் கீழே இறக்கிவிட்டு காஞ்சிபுரம் மண்ணை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான்.
எத்தனையோ மகான்கள் நடமாடிய அற்புதமான பூமி இது. அத்தனை மகான்களுக்கும் நமஸ்காரம் என்று கை கூப்பினான். கூடையைப் பிரிக்காமல் அப்படியே உட்கார்ந்து இளைப்பாறினான்.
வியாபாரம் நடக்க வேண்டுமென்று யாரை வேண்டுவது, எந்த தெய்வத்தை வேண்டினால் வியாபாரம் நன்றாக இருக்கும். காஞ்சிபுரத்தில் பலவிதமான கோவில்கள் இருக்கின்றன. எந்தக் கோவிலுக்கு வேண்டிக் கொண்டால் வியாபாரம் நன்கு நடக்கும்.
வரதராஜப் பெருமாளா, ஏகாம்பரேஸ்வரரா, காமாட்சி அம்மனா…. உள்ளே நுழையும்போது பார்த்த உலகளந்த பெருமாளா…. முருகரா…. அனுமாரா… யாரைக் கொண்டாடுவது.
லேசாய் குழம்பினான்…..
கூடையின் ஓட்டையிலிருந்து ஒரு வெண்கலக் கை எட்டி பார்த்தது.
அவன் சிரித்துக் கொண்டான், தூசி மாமண்டூரிலிருந்து உறிகட்டிக் கொண்டு வந்துவிட்டு இங்கு வேறு கடவுள்களைத் தேடுவதன் அவசியம் என்ன…
கிருஷ்ணா, முகுந்தா, முராரி…. உன்னை நல்லபடியாய் உன் அருளைத் தேடுகிறேன்.
பக்தவத்சலா. யார் கையேந்தினாலும் முகம் சுளிக்காமல் தருகிறவனே, கண்ணபெருமானே, என் வியாபாரம் செழித்தோங்க வேண்டுமென்று உன்னைப் பிரார்த்தனை செய்கிறேன் .
அந்த வியாபாரி கூடைமேல் போட்டிருந்த துணியை விலக்கி, நாலைந்து தவழும் கிருஷ்ணர்களை எடுத்தான். அந்த நீலத்துணி மீது வைத்தான்.
ஒரு கிருஷ்ணரை எடுத்து மேல்துணியால் தூசு துடைத்தான். கிருஷ்ணா, கிருஷ்ணா என்று தேய்க்க ஆரம்பித்தான். மெருகேற்றினான். உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான்.
கிருஷ்ணர் பொம்மை சூரிய ஒளியில் தகதகவென்று மின்னியது.
“ஐ…. கிருஷ்ணர்!” இன்னொரு கிருஷ்ணர் குரல் அருகே கேட்டது.
நிமிர்ந்து பார்த்தான்.
தங்க விக்கிரகம் போல ஒரு குழந்தை ஒரு அந்தன யுவதியின் மடியிலிருந்து பொம்மையை நோக்கி கைகாட்டியது.
அடேயப்பா…. இரண்டு வயதுக் குழந்தைக்கு இது கிருஷ்ணர் என்று தெரியுமா…
அந்த வியாபாரி வியந்தான்.
அந்தப் பெண்மணி நின்றாள்.
“ஆமாண்டா கண்ணு. கிருஷ்ணர் எவ்வளவு அழகா இருக்கு….” அவள் தொடாமல் பார்த்தாள்.
“எடுத்துப் பாருங்கள் தாயே!” வியாபாரி பொம்மையை எடுத்து பெண்மணியிடம் நீட்டினான்.
பெண்மணி தயங்கினாள்.
குழந்தை கை நீட்டியது. இரண்டு கைகளாலும் பொம்மையை வாங்கிக் கொண்டது. பொம்மையை எடுத்து தலையில் வைத்துக் கொண்டது. கண்களில் ஒற்றிக் கொண்டது.
பெரியவர்கள் இம்மாதிரி செய்வதைப் பார்த்திருந்து தானும் அவ்விதமே செய்தது.
அந்த வியாபாரிக்குக் குழந்தையின் செய்கைகள் ஆச்சரியமாக இருந்தன. இரண்டு வயதுக் குழந்தை எதைக் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளும். கிலுகிலுப்பை போல் ஆட்டும். தூக்கி எறியும். இந்தக் குழந்தை கிருஷ்ணர் பொம்மையைக் கண்டதும் கண்ணில் ஒற்றிக் கொண்டது.
நமக்கு இது கடவுள் என்று புரிய தாமதமாயிற்று. ஆனால், இந்தக் குழந்தை வினாடி நேரத்தில் புரிந்து கொண்டது.
“இது யாரு?” குழந்தையின் தாய் மரகதம் குழந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“கிருஷ்ணர்!” குழந்தை அழுத்தந்திருத்தமாய் சொன்னது. “நீ கிருஷ்ணரைப் பார்த்து என்ன பாடுவே!” அம்மா மறுபடி கேட்டாள்.
“கிருஷ்ணம் வந்தே நந்த குமாரம். ராதா வல்லப நவநீத சோரம் தேவகி நந்தன நந்த முகுந்தா நந்தித முனிகண நித்யாநந்தா…”
இரண்டு கைகளாலும் கிருஷ்ணர் பொம்மையைத் தன் எதிரே பிடித்துக் கொண்டு பொம்மையை நோக்கி குழந்தை பாடியது.
குழந்தைக்கு அது பொம்மையே இல்லை. அது உயிருள்ள கிருஷ்ணர்.
தனக்குத்தான் அது வெண்கலம் விற்பனைப் பொருள். வெறும் பொம்மை. இந்த பொம்மை செய்த நானே இதைக் கடவுள் என்று நம்பாதபோது வேறு யார் நம்புவார்கள். கடவுள் என்று இதை நம்பாதபோது எதற்கு இதைக் காசு கொடுத்து வாங்குவார்கள்.
”ஐயா, என் சாமி, எனக்குப் புரிந்து விட்டது. தன்னுள் நம்பிக்கை உள்ளவன்தான் மற்றவருக்கு நம்பிக்கை தர முடியும். தன்னையே நம்பாதவன் மற்றவருக்கு என்ன விதத்தில் லாபம்.
கிருஷ்ணா! நீயே இந்தக் குழந்தை வடிவாக வந்து எனக்குப் புரிய வைத்தாய். நான் தூக்கி வந்தது வெண்கல மல்ல. கிருஷ்ணர். உயிருள்ள கிருஷ்ணர். பல்வேறு வீடுகளில் குடியேறி பல்வேறு குடும்பங்களை வாழ் வைக்கிற கிருஷ்ணர்.”
“அம்மா. இந்த பொம்மை எனக்கு வாங்கித் தரயா.” குழந்தை உரக்கப் பேசி வியாபாரியின் சிந்தனையைக் கலைத்தது.
அம்மா தயங்கினாள். “வேண்டாம்டா, வேற ஏதாவது வாங்கலாம்.”
“இல்லேம்மா! எனக்கு இந்த கிருஷ்ணர்தான் வேணும். இந்த கிருஷ்ணர் அழகா இருக்காரம்மா.”
குழந்தை மிகுந்த பரவசத்தோடு சொன்னது. சொல்லும்போது கண்களை மூடிக் கொண்டது.
வியாபாரிக்கு அந்தப் பரவசம் பார்த்து உள்ளுக்குள், ஒரு கேவல் எழுந்தது. கூடையிலுள்ள மற்ற கிருஷ்ணர்களை ஒரு குழந்தை பார்ப்பது போல் பார்த்தான்.
“சரி, வாங்கித் தரேன். எவ்வளோப்பா விலை?” குழந்தையின் தாய் கேட்டாள்.
என்ன விலை சொல்வது, இந்த வெண்கல பொம்மைக்கு இப்போது உயிர் வந்துவிட்டதே, ஒரு உயிருக்கு என்ன விலை சொல்வது.
”ஒண்ணும் வேணாம்மா… இப்பத்தான் கூடை இறக்கினேன். இது முத பொம்மை. என் அன்பா குழந்தைக்கு இருக்கட்டும்!” வியாபாரி மறுத்தான்.
“இல்லேப்பா! விலை சொல்லு. ஏதாவது விலை வச்சுத்தான் இங்கே கொண்டு வந்திருப்பே.”
“ரெண்டணான்னு விலை வச்சிருக்கேம்மா. ஆனா, தயவு செய்து காசு தரவேணாம். இந்த கிருஷ்ணருக்கு இது என் அன்பா இருக்கட்டும்.” அவன் குழந்தையின் காலைத் தொட்டு தலையில் வைத்துக் கொண்டான்.
கடவுள் பொம்மையில் இருப்பது உண்மையென்றால் குழந்தையிலும் இருக்கிறார் அல்லவா. மனிதர்களைத் தெய்வமாகப் பார்ப்பதற்குத்தானே தெய்வத்தை மனித பொம்மையாகச் செய்வது.
வியாபாரிக்கு இந்து மதத் தத்துவம் வினாடி நேரத்தில் புரிந்து போயிற்று.
இரண்டு கைகளையும் நெற்றிக்கு மேல் தூக்கி குழந்தையைப் பார்த்துக் கும்பிட்டான்.
குழந்தை சேஷாத்திரி வியாபாரியைப் பார்த்து சிரித்தது.
குழந்தையின் தாய் மரகதம் வியப்போடு வியா பாரியைப் பார்த்தாள். “ரெண்டணா வச்சுக்கோப்பா.” காசு எடுத்து நீட்டினான்.
“வேண்டாம் தாயே. சத்தியமா எனக்குக் காசு வேண்டாம்.” வியாபாரி தெளிவாக உறுதியோடு இருந் தான் .
“சௌக்கியமா இருப்பா!” குழந்தையின் தாய் வாழ்த்திவிட்டு குழந்தையோடு கோவிலுக்கு நடந்தாள்.
குழந்தையோடு கிருஷ்ணரும் கோவிலுக்குப் போனார்.
அன்று முழுவதும் குழந்தை சேஷாத்திரி பொம்மையைத் தரை இறக்கவில்லை. மடியிலும் மார்பிலும் போட்டுக்கு கொண்டு விளையாடியபடியே இருந்ததைப் பெரியவர்கள் பார்த்து ரசித்தார்கள்.
“கிருஷ்ணனுக்குத் தூக்கம் வர்றதாம், தூங்கப் பண்ணு. சேஷாத்திரிக்கு பக்கத்திலேயே குழந்தை கிருஷ்ணனுக்கு சிறிய படுக்கை போட்டு தூங்கச் செய்தார்கள்.
தூங்குவதற்கு கிருஷ்ணன் வந்தே நந்தகுமாரம் பாடினார்கள்.
குழந்தை தூங்க, கிருஷ்ணரும் தூங்கினார். குழந்தை விழிக்க, கிருஷ்ணரும் விழித்தார்.
மறுநாளும் அம்மாவின் இடுப்பிலேறி கிருஷ்ணரைக் கையில் இடுக்கி குழந்தை சேஷாத்திரி கோவிலுக்குக் கிளம்ப, எதிர்ப்பட்ட பொம்மை வியாபாரி குழந்தை சேஷாத்திரியைப் பார்த்துக் கை கூப்பினான்.
அம்மா, ஆயிரத்து நாப்பது பொம்மை, தூக்க முடியாம் தூக்கிட்டு வந்தேன், எப்பேர்ப்பட்ட திருவிழான்னாலும் நூறு விக்கும்,நூத்தம்பது விக்கும், இருநூறு விக்கும். ஆனா, நேத்து ராத்திரியே ஆயிரத்து நாப்பது பொம்மையும் வித்துருத்தும்மா.”
“முத முத உங்க குழந்தை என் கூடைடையத் தொட்டு என் பொம்மையைத் தொட்டு, ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிச்சு. அந்த தொடல், அந்த வாக்கு பலிதமாகி எல்லா பொம்மையும் வித்துப் போச்சும்மா. இது சாதாரணக் குழந்தையில்லை. இது தங்கக் கைக் குழந்தை.”
குழந்தையின் கைப்பற்றி தலையில் வைத்துக்கொண்டான். கண்களில் ஒற்றிக் கொண்டான். கன்னத்தில் பதித்துக் கொண்டான். நெஞ்சில் பதினைந்து வினாடிகள் அழுத்திக் கொண்டான்.
குழந்தையையும் தாயையும் வலமாக வந்து நமஸ்கரித்த படியே பின்னடைந்தான்.
வீட்டிலுள்ளோர் செய்தி கேள்விப்பட்டு சந்தோஷமாகச் சிரித்தார்கள்.
Bharathi
சேஷாத்ரி சுவாமிகள் பிறப்பு எழுத்துச் சித்தர் எழுத்தில் படிப்பது மிக அற்புதமாக உள்ளது.