[கிருஷ்ணாவதாரம் புத்தகத்திலிருந்து …]

கிருஷ்ணர் தன்னை மறந்து தன் சூழ்நிலையை மறந்து, இசைத்துக் கொண்டிருந்தார்.

பெண்கள் கிருஷ்ணர் தங்கள் வருகையை அங்கீகரித்தாய் நினைத்து இன்னும் அவரை ஆரக் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டார்கள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினார். உதட்டில் இருந்து எடுத்தார். ஓசை நின்றது. மெல்ல சுற்றி பார்த்தார். எல்லாப் பெண்களும் விலகி நின்று கிருஷ்ணருக்கு வணக்கம் சொன்னார்கள்.

“என்ன இது. இந்த நேரத்தில் நீங்கள் எல்லாம் ஏன் இங்கு வந்தீர்கள்? கணவருக்கு நீ விசிறாமல் தூங்க முடியாதே. ஏன் தூக்கிப் போட்டு விட்டு வந்து விட்டாய். குழந்தை அழுவது கூட முக்கியமில்லையா. இங்கு ஏன் வந்தாய். வரும் போது பாலை உருட்டி விட்டு வர வேண்டுமா?

இது குடும்ப பெண்ணுக்கு அழகா? கிருஷ்ணர் சீறி விழத் துவங்கினார்.

“உனக்கு வயதாகாதா? உனக்கு கால் குடையாதா? அவளுக்கு தூக்கம் வர வேண்டுமென்றால் நாலு நாழிகை கால் பிடித்து விட வேண்டும். இதைக் கூட செய்யாது என்ன ஒரு பெண்மணி நீ. யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்தில் நடனமாடுவதைப் போல யாருக்கும் தெரியாமல் இங்கு ஓடி வந்து விட்டீர்களா? மொத்த பாலும் பொங்கி விட்டது. ஒன்றுமே இல்லை. இனி கூரையில் நெருப்பு பிடிக்க வேண்டியது தான் பாக்கி. நன்றாக இருக்கிறது நீங்கள் குடித்தனம் செய்கிற அழகு. குலப் பெண்களா நீங்கள்?

தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்து குழல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களை யாரும் வரச் சொல்லவில்லையே. உங்களை யாரும் இங்கு அழைக்க வில்லையே. அந்த மான்கள் கூட குழல் இசையை கேட்டு கொண்டு தான் இருக்கின்றன. அவை எதுவும் அருகில் வரவில்லையே. பறவைகள் எல்லாம் என் குழல் ஓசையை கேட்டு கொண்டிருக்கின்றன. அவை எவையும் என்னை சுற்றி வட்டமிடவில்லையே.

குழல் வாசித்தது, எனக்காக. உங்களை அழைக்க அல்ல. என் மீது உங்களுக்கு மரியாதையும், அன்பும் இருப்பது என்னால் உணர முடிகிறது. அதற்காக கற்பு என்ற ஒரு விஷயத்தை உதறி விட்டு வர வேண்டுமா? உனக்கு புருஷன் வேண்டாம், பிள்ளை வேண்டாம். உற்றார் வேண்டாம், வீடு வேண்டாம், வீட்டிலுள்ள பால் வேண்டாம். பசுக்கள் வேண்டாம் என்று உதறி விட்டு என் பின்னால் வந்து விடுவீர்களா?

அப்படி வந்த உங்களை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கருதுகிறீர்களா?

உங்கள் நடவடிக்கை நன்றாக இருக்கிறதா, யோசிக்காமல் இந்த இருட்டில் எப்படி என்னை சுற்றி உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லையா?

நீங்கள் செய்த செய்கையை அடுத்த கிராமத்தில் உள்ளவர்கள் கேட்டால் பிருந்தாவனத்திற்கு எவ்வளவு பெரிய கெட்ட பெயர்.” சுற்றியுள்ள எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் கடிந்து கொண்டார். சுற்றியிருந்த பெண்கள் திகைத்துப் போனார்கள். ‘ஹா.. ‘ என்ற வியப்போடும். வேதனையோடும் ஸ்ரீ கிருஷ்ணரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் செய்தது தவறு. மிகப் பெரிய தவறு, உறவுகளை தூக்கி எறிந்து விட்டு வந்தால் நான் உங்களை கொண்டாடுவேன் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என் சம்மதம் ஒரு நாளும் கிடையாது. உங்களுடைய வீட்டிற்கு நீங்கள் போங்கள். உங்களை கண்டால் எனக்கு பிடிக்கவில்லை” அவர் கோபத்துடன் எழுந்தார். தூரத்தில் நின்று கொண்டிருந்த ராதை என்கிற கோபிகையை “அருகே வா “என்று அழைத்து “இவள் பிறந்ததிலிருந்து என்னை நினைப்பது தவிர வேறு எந்த எண்ணமுமில்லை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னை நேசிப்பதை தவிர வேறு எந்த பொறுப்பும் இவளுக்கு இல்லை. ஆனால் நான் இந்த பெண்ணையும் அண்ட விடாத தொலைவில் தான் வைத்திருக்கிறேன்.

எல்லோரும் எனக்கு அருகே நெருங்கி இருக்க, ராதை நான் அழைக்க வேண்டும் என காத்திருக்கிறாள். அது எனக்கு பிடித்திருக்கிறது ராதை என்னருகே வா…’

ராதை அருகே வந்ததும், கிருஷ்ண அவளை ஆரத் தழுவிக் கொண்டார். உதடுகளில் முத்தமிட்டார். இடுப்பில் கைகோர்த்து இறுக்கிக் கொண்டார்.

“நீங்கள் செய்தது தவறு. உங்கள் செய்கைகள் கேவலமாக இருக்கிறன. உங்களோடு இருக்க எனக்கு பிடிக்கவில்லை. ராதை நாம் வனத்திற்குள் போகலாம். இவர்கள் போக சொன்னால் போக மாட்டார்கள். நாம் போவோம் வா” என்று ராதையின் இடுப்பை தழுவிய வண்ணம், அவ்வப்போது ராதையின் கன்னத்தில் முத்தமிட்ட வண்ணம், ஸ்ரீ கிருஷ்ணர் அவளோடு பின்னிப் பிணைந்து நடந்து மரங்களுக்கு நடுவே புகுந்து வனத்திற்குள் மறைந்தார்.

அந்த பெண்கள் நிலவொளியில் விதிர்த்துப் போய் நின்றார்கள். கதறி அழத் துவங்கினார்கள். தனியே போகின்ற கிருஷ்ணரையும், ராதையையும் வெறித்துப் பார்த்தார்கள். ஒரு பெண்மணி சீறி எழுந்தாள்.

“இந்த பொறுப்புகளை நானா ஏற்றுக் கொண்டேன. என் தலையில் திணிக்கப்பட்டவை யல்லவா. எப்பொழுது உன்னை தெரியுமோ அப்போது இருந்தே உன்னால் கவரப்பட்டவள் நானும் அல்லவா. உன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டல்லவா எங்கே எங்கே என்று நானும் ஏங்கியிருக்கிறேன் அல்லவா.

திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால் ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கவே கூடாதா. ஸ்ரீ கிருஷ்ணா என்று கூப்பிடவே கூடாதா. உன்னை வந்து கோபித்து எனக்கு அது பொருட்டே அல்ல. ஆனால் நீ ஏன் கோபித்து கொள்கிறாய், நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியதா தெரியும், தெரிந்தும் புறக்கணிக்கிறாய். மல்லாக்க தள்ளுகிறாய். நான் விடுவேனா. விட மாட்டேன். ராதையும், நீயும் வனத்திற்குள் போய் விட்டால், நானும் அந்த வனத்திற்கு வருவேன். என்னை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. உன்னை தேடுவேன். உன்னை பின் தொடருவேன் உன்னை விட மாட்டேன்” என்று ஆவேசமாக சீறினாள்.

மற்ற பெண்களும் அதே வேகத்தில் எழுந்தார்கள். “திரும்ப திரும்ப பால் காய்ச்சி, வெண்ணெய் எடுத்து. நெய் காய்ச்சி என் வாழ்க்கை இப்படியே போக வேண்டுமா. அதற்குத் தான் பிறந்திருக்கிறேனா. ஸ்ரீ கிருஷ்ணர் என்று என் கண்ணுக்கு முன்பே ஒரு பெரிய அவதாரம் நிற்கும் பொழுது, ஒரு பௌருஷம் மிகுந்த ஒரு ஆணை பார்க்கும் பொழுது, எல்லாம் வல்ல இறைவன் இங்கு அவதரித்து இருக்கும் பொழுது, அதை தொடர்ந்து போகாது என்னை வெறுமே பால் காய்ச்ச விட்டால் விடுவேனா. முடியாது. என்னால் பால் காய்ச்சிக் கொண்டு இருக்க முடியாது” என்று அவளும் வனத்திற்குள் புகுந்தாள். *கொல்லைப்புரம் நடனமாடியது உன்னை நினைத்த படியே, உன் வீட்டிற்குள் வளைய வந்தது உன்னை நினைத்தபடியே யாருக்கு வாழ்க்கை பட்டாலும், உள்ளுக்குள் உன்னோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று உனக்கு என்னைத் தெரியும், என்னைப் பார்த்து சிரிக்கின்ற சிரிப்பில் உனக்கு என்னை தெரியும் என்பதை வெளிப்படுத்தி விட்டாய். இப்போது ஒன்றும் தெரியாதவனாக மிக உத்தமனாக நீ பேசுகிறாய்.

நீ இழித்து என்னை பேசி விட்டால் பயந்து விலகி விடுவேன என்று நினைக்கிறாய். அவமானப்படுத்தி விடலாம் என்று என்னை அசிங்கமாக நடத்தினால் நான் அகன்று விடுவேன் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறாய். இல்லை இந்த வனம் என்ன செய்யும், நீ எங்கு போனாலும் விட மாட்டேன். உன்னை பின் தொடருவேன். இனி எனக்கு வீடு என்பது இல்லை. நீதான் எனக்கு உலகம். நீதான் எனக்கு வாழ்க்கை” அவளும் பின் தொடர்ந்தாள்.

அத்தனை கோபியர்கள் எழுந்து கிருஷ்ணர் எங்கே.. எங்கே.. என்று அந்த வனத்திற்குள் தேடினார்கள்.

“நீ பார்த்தால் சொல். நான் பார்த்தால் சொல்கிறேன்” என்று ஒருவருக்கு ஒருவர் குரல் கொடுத்து கொண்டு, ஒவ்வொரு புதராக ஒவ்வொரு மரமாக அந்த அடர்ந்த வனத்திற்குள் பயமின்றி கிருஷ்ணரை தேடினார்கள்.

“கிருஷ்ணா.. கிருஷ்ணா..” என்று குரல் கொடுத்தார்கள்.

சட்டென்று குழல் ஒலி மறுபடியும் கேட்டது. வந்த திசை நோக்கி அவர்கள் ஆரவாரமாய் ஓடினார்கள். மீண்டும் புல்வெளி. புல்வெளிக்கு நடுவே ஸ்ரீ கிருஷ்ணர் நின்றபடி குழல் வாசித்துக் கொண்டிருந்தார்.

ராதை அவருக்கு அருகே நின்று, அவரை தழுவிய படி நின்று அவர் வாசிப்பதையே ஆவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தாள். இதை வேடிக்கை பார்க்க, கோபியர்கள் அவரை சுற்றி நின்று கொண்டார்கள். வட்டமாக நின்றார்கள். குழலுக்கு ஏற்ப கைதாளம் போட்டார்கள்.

அவர்கள் காலும் தாளமிட்டன மெல்ல அசைந்தார்கள். கைகளை வீசி நடனமாடினார்கள். துள்ளி குதித்தார்கள். எல்லோரும் சுழன்று சுழன்று கிருஷ்ணரையும், ராதையையும் வலம் வந்தார்கள். ராதை அவரை அணைத்து கொண்டிருப்பது பொறாமையாக இல்லை.

தாங்கள் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணரை நேசிக்கிறோம் என்பது தெரிந்து விட்டது. இது வெட்கமாக இல்லை.

எந்த லஜ்ஜையும் இன்றி ஆடைகள் பறக்க, தெகிழ அவர்கள் அந்த சரத்கால பௌர்ணமியில் நிலவொளியில் நடனமாடினார்கள்.

சட்டென்று யாரோ முதுகை தொடுவது போல் இருந்தது. திரும்பினாள். அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் நின்றிருந்தார்.

வேறொருவளுக்கு தன் இடுப்பில் கை வைப்பது தெரிந்தது. திரும்பினாள். அங்கு ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் நின்று கொண்டிருந்தார்.

வேறு யாரோ அவளை பலவந்தமாக திருப்பி அணைத்து கொண்டார்கள். நிமிர்ந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் நின்று கொண்டிருந்தார்.

யாரோ கன்னத்தை வருடி, உதட்டில் முத்தமிட்டார்கள். விழித்துப் பார்த்தால் எதிரே ஸ்ரீ கிருஷ்ணர் நின்று கொண்டிருந்தார்.

ஒவ்வொரு கோபியர்களுக்கு முன்னாலும் ஓர் கிருஷ்ணர் இருந்தார். ராதைக்கு அருகேயும் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார்.

குழல் ஊதும் ஸ்ரீ கிருஷ்ணர் நடுவிலே இருந்தார். சுற்றி வட்டமாக கோபியர்களுக்கு அருகேயும் இருந்தார். எல்லா
கோபியர்கள், பல கிருஷ்ணர். அவர்கள் எல்லோரும் சரத்ருது பௌர்ணமி நிலவொளியில் குழல் இசைக்கு ஏற்ப கை தட்டி நடனமாடினார்கள். பாட்டுக்கள் பாடினார்கள்.

விடிய விடிய அற்புதமான நடனம், அற்புதமான கை தட்டல்களுடன் கூடிய பாட்டு தொடர்ந்தது.

கால்கள் சோரும் வரை, கைகள் சோரும் வரை உடம்பு களைப்பாகும் வரை அவர்கள் ஆடினார்கள்.

மெல்ல பெளர்ணமி நிலவு மேற்கு பக்கம் நகர்ந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் கிழக்கு பக்கம் தோன்றின.

கிருஷ்ணர் சட்டென்று மறைந்தார்.

ராதை நிதானமாக பிருந்தாவனம் நோக்கி நடக்க, மற்றவர்களும் பிருந்தாவனம் நோக்கி நடந்தார்கள்

இது போதும் கிருஷ்ணா, நீ இடுப்பை தொட்டது போதும், இறுக்கி அணைத்தது போதும் தழுவிக் கொண்டு திளைத்தது போதும் கிருஷ்ணா. இனி இந்த சுகத்தோடு நான் என் வீட்டிற்கு போகிறேன். என் குழந்தையை பார்ப்பேன். என் புருஷனை கவனித்துக் கொள்வேன். என் மாமியாருக்கு உதவி செய்வேன் வீட்டின் அத்தனை விஷயங்களையும் நான் மிக சிறப்பாக நடத்துவேன்.

பல நூறு முறை நான் பால் காய்ச்சுவேன் பல நூறு முறை நான் வெண்ணெய் எடுப்பேன். இனி பால் காய்ச்சுவதும், வெண்ணெய் எடுப்பதும் தொடர்ந்து நடக்கும். ஆனால் என்னை நீ தொட்டதும், முத்தமிட்டதும், இறுக்கி அணைத்ததும், நெஞ்சுக்குள்
என்றும் இருக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணா நீ ‘என்னை நேசித்தாய். நான் உன்னை நேசித்தேன். நாம் நேசிப்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி இறுகிக் கிடந்தோம். இது போதும்.

என்னை நீ புரிந்து கொண்டாய், நான் உன்னை புரிந்து கொண்டேன் . என்னை ஆசிர்வதித்தாய் கிருஷ்ணா.. இது போதும் என்னை ஆசிர்வதித்து தழுவிக் கொண்டாய். கிருஷ்ணா இது போதும்.

என் அதரங்களில் உன் இனிப்பு இருக்கும். என் இடுப்பினிலே உன் கைகள் எப்போதும் இருக்கும். என் நெஞ்சில் உன் நெஞ்சு படர்ந்து இருக்கும். என்னுள் இனி காமத்தீ என்பது இல்லை. எது மேலும் ஆசையில்லை. எது பற்றிய நினைப்பும் இல்லை. என் உடம்பு, மனம், புத்தி எல்லாம் குளிர்ந்து கிடக்கிறது கிருஷ்ணா.

கிருஷ்ணா… கிருஷ்ணா… இது போதும், வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நான் வெறுமே இருக்கிறேன். உலகத்தின் விதிப்படி இயங்குகிறேன். என்னுள் நீ, உன்னுள் நான். இணை பிரியாதவர்களாய் நாம் மாறி விட்டோம். இந்த உலகத்தில் இந்த உடம்புக்கு மரணம் ஏற்படும் வரையில் நான் நிம்மதியாக இருப்பேன். கோபியர்கள் அனைவரும் உள்ளுக்குள்ளே நிறைவோடு அவரவர் வீட்டிற்கு போனார்கள்.

வீட்டில் பால் எப்படி வைத்து விட்டு வந்தாளோ அப்படியே இருந்தது. குழந்தை உறங்கி கிடந்தது. புருஷன் தலையணையை கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். மாமியார் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தாள். வழிந்த பால் சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. விடியல் நேரத்தில் அத்தனை கோபிகைகளும் மிக உற்சாகமாக தங்கள் தினசரி வாழ்க்கையின் வேலைகளை ஆரம்பித்தார்கள்.

கிருஷ்ணாவதாரத்தில் இந்த ராஸ நடனம் மிக முக்கியமான விஷயம். ஒரு உபமானத்தின் மூலமாக வாழ்க்கை தத்துவத்தை விளக்குவது என்பது சனாதன தர்மம் இடையறாது செய்து கொண்டிருக்கிறது. இது ஆண் பெண் கூடல் அல்ல. காமத்தால் தடுமாறுகின்ற பெண்களாக கோபியர்கள், கோபிகைகள் ஒரு நாளும் இல்லை. இந்த பெண்களின் இடுப்பை தொட்டு, தொட்டு, நெஞ்சை தொட்டு திளைப்பவராக ஸ்ரீ கிருஷ்ணர் இல்லை. ஜீவாத்மாவைத் தேடி பரமாத்மா பரிதவிக்கிற விஷயம் தான் இந்த ராஸ நடனம். ஜீவாத்மா என்பது மனித உருவம் கொண்டு பிறந்து விட்டால் அதற்கென்று ஏகப்பட்ட கடமைகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கடமைகள் இருக்கும். ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான சிக்கிக் கொள்வார்கள். அடுத்து அடுத்து என்று பின்னி பிணைந்து வாழ்க்கை இழுத்து கொண்டு போகும். ஆனால் இந்த இழுப்புக்கு நடுவே பரமாத்மா என்கிற கடவுள் தேடுதலை இந்த ஜீவாத்மா நிச்சயம் செய்து கொண்டு இருக்கும். உண்மையான ஜீவாத்மா பரமாத்மாவை தேடிக் கொண்டருக்கும். எத்தனை வேலைகள் இருப்பினும் அந்த வேலைகளில் எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும், அந்த வாழ்க்கையில் எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் மனம் பரமாத்மாவை நோக்கியே இருக்கும். அவரைத் தேடுதல் ஒரு தனித்த செயலாக உள்ளுக்குள் இடையறாது நடந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் ஒரு சரத்கால பெளர்ணமி உண்டு. கடவுள் தேடுகின்ற தாபம் மிக உச்ச நிலையில் அந்த நேரம் ஜீவாத்மாவுக்கு ஏற்படும். ஜீவாத்மா பரிதவித்து கடவுளை நோக்கி எழும். கடவுள் தேடும் போது, கடவுள் தேடுதல் எளிதாக இருக்காது மனம் இடித்துரைக்கும் இழித்துப் பேசும். கடவுள் என்ற விஷயம் கைக்கு எட்டாமல் நாம் கடவுளை தேடுதல் தவறோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். திகைக்க வைக்கும். கதற வைக்கும். குற்றம் சொல்லும் போது பதில் சொல்ல முடியாமல் விதிர்த்து போக நிற்க வைக்கும். கடவுள் தேடுதல் எளிதல்ல என்பதற்கான விளையாட்டு. இப்படி நீ விலக்கப்பட்டால், அப்படி நீ புறக்கணிக்கப்பட்டால் என்ன செய்வாய் என்று உன்னை சோதிக்கின்ற விளையாட்டு. அந்த சோதனையை மீறி நீ என்னை விலக்கினாலும், என்னை விரட்டினாலும் உன்னை பின் தொடர்வேன்.” உன்னை தெரிந்து கொள்ளாமல் மரணமடைய மாட்டேன் என்று ஜீவாத்மா, பரமாத்மாவை நோக்கி அடர்ந்து, இருள் படர்ந்து அழகாய் இருக்கின்ற காடுகளுக்குள் அதை தேட, மனதின் இருட்டான பகுதியில் தேட கடவுள் சட்டென்று காட்சியளிப்பார். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.

கடவுளை உன் முயற்சியால் தேடுவது. எல்லாவற்றையும் உதறி விட்டு கடவுளை நோக்கி வந்தால் கடவுள் தரிசனம் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை கொள்வது, வழியல்ல.

கடவுள் தரிசனம் கடவுளால் உனக்கு வழங்கப்படும். நீ கேட்டு உன் முயற்சியினால் பெறுவதல்ல. அது வழங்கப்படுவது.

ராதை போன்ற ஜீவாத்மாக்கள் இங்கு உண்டு முற்பிறவியின் பயனாக பிறப்பின் ஆரம்பத்திலேயே கடவுளைத் தேடுகின்ற, கடவுளுக்கு நெருக்கமாய் இருக்கின்ற கடவுளையே நினைத்து கொண்டிருக்கிற ஒரு வாழ்க்கை அவர்களுக்கு அமைந்து விடும். அவர்களுக்கு கடவுள் தரிசனமும் எளிதாக கிடைக்கும்.

கடவுள் அவர்களை அருகே அழைத்து, இதோ என்னை பார். வா வந்து தழுவிக் கொள் என்று அணைத்து அவரும் தழுவிக் கொள்வார். அது மற்ற ஜீவாத்மாவுக்கு ஒரு உந்துதல். அந்த ஜீவாத்மாவுக்கு கிடைத்த தரிசனம் தனக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்ற செயல்.

ஜீவாத்மாக்கள் உத்வேகம் அடைந்து உன்னை விட்டு போக மாட்டேன் என்று பின் தொடர்ந்து போகிற போது பரமாத்மாவின் தரிசனம் கிடைக்கும். கடவுள் தேடல் பூர்த்தியாகும். இது தான் கடவுள். இங்குதான் விஷயம் இருக்கிறது. இது ஒருமித்த இடம். இது தான் ஒன்றாக கூடி கலக்கின்ற இடம். இது இதனோடு சேர்வது இந்த இடத்தில், இவ்விதம் என்று புரிந்து விட்டால் உலக வாழ்க்கை மிக சாதாரணமாகப் போகும்.

பூமியையே பெயர்த்து, தோளில் வைத்து போகும் ஜீவாத்மாவுக்கு மண் கூடை சுமப்பது ஒரு நாளும் கடினமாகாது. மிக எளிதாக, மிக திறமையாக, மிக சுகமாக, மிக சுத்தமாக தினசரி வாழ்க்கையின் நிறைவேறும். எல்லா விஷயங்களும் நிறைவேறும்.

தரிசனம் கிடைத்தவர் உலக கடவுள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் குறைவற நிறைவேற்றுகிறார்.

கடவுளா எங்கிருக்கிறார் அவரை எதற்கு தேட வேண்டும் என்று குறட்டை விட்டு தூங்கும் ஜீவாத்மாகளும் உண்டு.

எகிறி குதித்து ஆடி மெல்லிய மயக்கத்தில் கால் மிதித்து வெறுமே கூச்சலான ஜீவாத்மாக்களும் உண்டு.

உலகில் வெகு சில ஜீவாத்மாக்களே வாழ்வின் கடமைகளுக்கு நடுவே கடவுள் தேடல் என்பது பற்றிய ஒரு சிந்தனையோடு இருக்கும் அதற்கான முயற்சிகளோடு இருக்கும். அந்த முயற்சி ஏதோ ஒரு சரத்கால பௌர்ணமியில் உணரப்பட்டு, கடவுள் பக்கம் இழுக்கப்பட்டு விளையாடப்பட்டு, சுவீகரிக்கப்பட்டு, மறுபடியும் அவர்களுக்கு அந்த கடவுள் தரிசனம் கிடைக்கும்.

கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு வாழ்வு மிக எளிதானது. வாழ்வு மிக சுவையானது. வாழ்வு மிக சுத்தமானது.

ஒவ்வொரு கோபிகைகளுக்கு பின்னும் ஒரு கிருஷ்ணர். ஒவ்வொரு ஜீவாத்மாவோடு பரமாத்மா லயிக்க துடித்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு ஜீவாத்மாவும் தன்னை நாடி வர வேண்டுமென்று,பரமாத்மா ஏங்கிக் கொண்டிருக்கிறது.

உணருவதற்கு உண்டான தகுதியிருக்கிறதா என்று சோதித்து கொண்டிருக்கிறது. இருட்டை தாண்டி வந்ததும் இறுக்க தழுவி, முத்தமிட்டு, மனைவியை கொஞ்சுகின்ற புருஷனைப் போல பரமாத்மா ஜீவாத்மாவை ஏற்றுக் கொள்கிறது. தன்னை இனம் காட்டுகிறது.

கிருஷ்ணாவதாரத்தில் இந்த பகுதி சனாதன தர்மத்தின், அந்த தத்துவத்தின் மிக அற்புதமான விளக்கம்… இதன் உள் கருத்து சிலர் அறியாமல் தவறாக சித்தரிப்பது உண்டு.

தான் யார்? தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம். தான் எங்கு போக வேண்டும். இந்த வாழ்க்கை திரும்ப திரும்ப ஒரே விதமாக இருக்கிறதே என்ற வேதனையில் அகப்பட்டு, தன்னைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு, தான் ஒரு பெரிய சக்தியினுடைய ஒரு துளி என்று ‘தெரிந்து, அந்த பெரிய சக்தியை நோக்கி தான் நகர வேண்டும் என்பது புரிந்து, உலகின் மற்ற வேலைகளுக்கு நடுவே அதை இடையறாது தாபத்தோடு செய்து வருகின்ற மனிதர்களுக்கு கடவுள் தரிசனம் கிடைக்கிறது.

கிருஷ்ணருடைய கதை சாதாரண விளையாட்டுக் கதை அல்ல. வெறும் காம களியாட்டமான விஷயமல்ல. சரத்கால பௌர்ணமி என்கிற குளுமையான நிலை, அமைதியான நிலை, ஒரு குழல் ஓசை மட்டும் கேட்கின்ற நிலை என்பது மிக ரகஸியமான ஒரு யோக விளக்கம்.

கடவுளைத் தேடி குவியும் மனம். சரத்கால பௌர்ணமியில் குளுமையை, அமைதியை, மங்கிய வெளிச்சத்தை குழல் ஓசையை, அனுபவித்து, அதோ, அதோ, அதோ, கடவுள் என்று பரிதவித்து எழும்.

நல்ல ஜீவாத்மாவுக்கு சரத்கால பௌர்ணமி உள்ளே தோன்றும். வழி நடத்தும்.