உ
யோகிராம் சுரத்குமார்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – ஒரு முன்னோட்டம்
பரதா,
அமைச்சர்கள், வேலைக்காரர்கள், தந்தை போல் போற்றத்தக்க வயோதிகர்கள், மருத்துவர்கள் மற்றும் அந்தணர்களை உரிய முறையில் கௌரவப்படுத்துகிறாய் அல்லவா. நம் ஆச்சாரியாரை நீ மேன்மைபடுத்துகிறாய் அல்லவா. அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் அல்லவா. சிறிய விஷயங்களையும் கலந்து ஆலோசிக்கிறாய் அல்லவா. விடியல் நேரத்தில் தூங்கவில்லையே. சரியாக எழுந்து விடுகிறாய் அல்லவா.
உன்னுடைய செயல் திட்டங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். மற்ற தேசத்து மன்னர்களுக்கு உன் வளர்ச்சி பிரம்மிப்பாக இருக்க வேண்டும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நல்ல திட்டங்களை நீ செயல்படுத்திக் காட்ட வேண்டும். அரசன் ஏதோ நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார், ஆனந்தமாக இருக்கிறார் என்றெல்லாம் உன்னைப் பார்த்து யாரும் எடை போட முடியாது முகச்சலனம் இல்லாது அமைதியாக இருக்கிறாய் அல்லவா, உன் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது அல்லவா. தண்டிக்க வேண்டும் என்று ஆசையில்லாது இருக்கிறாயா. வேலையாட்களுக்கு உண்டான சம்பளத்தை அவ்வப்போது கொடுத்து விட முடிகிறதா. அரசகுலத்து நண்பர்களை நெருக்கமாக வைத்திருக்கிறாயா. அவர்கள் உனக்கு நேரத்தில் உதவி செய்பவர்களாக இருக்கிறார்களா, அவர்களை வேவு பார்க்க ஆட்கள் உண்டா. நமது தேசத்தில் இருக்கின்ற பதினெட்டு வகை அரசு பணிளாளர்களும், பதினைந்து வகையான பணியாளர்களையும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் கண்காணிக்கின்ற திறமையான ஆட்கள் நம்மிடம் இருக்கிறார்களா.
பரதா, உன்னுடைய வேலைக்காரர்கள் உனக்கு நெருங்கி பழகிவிடக் கூடாது. அதேசமயம் விலகியும் இருக்கக் கூடாது. கோட்டைகளில் தனம், தானியம், தண்ணீர், இயந்திரங்கள், கட்டுமான தொழிலாளிகள், வில்லாளிகள் ஆகிய விஷயங்கள் நிறைந்து இருக்கின்றனவா. அடிக்கடி ஜனங்கள் முன்பு நன்கு அலங்கரித்து வலம் வருகிறாயா. இல்லையெனில் அரசனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கதை கட்டிவிடுவார்கள். குற்றம் செய்யாதவர்களை தண்டித்தால் அவர்களுடைய கண்ணீர் அந்த அரசனுடைய புகழையும், புதல்வர்களையும் அழித்து விடும்.
எனவே, அரசாட்சி என்பது எளிதானதல்ல. மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய விஷயம்.
வாலிபத்தில் சம்பாதிக்க வேண்டிய காலத்தில் தர்மத்தை சம்பாதிக்க வேண்டும். செல்வத்தை சம்பாதிக்க வேண்டிய காலத்தில் செல்வத்தையும் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்து தர்மத்திற்கு செலவழிக்கப்பட வேண்டும். செல்வம் போல காம சுகமும் ஒரு அற்புதமான விஷயம்தான். ஆனால் சரியான காலத்தில் சரியான அளவுகளோடு செய்யப்பட வேண்டும். நல்ல இடைவெளி விட்டு சிற்றின்பத்தில் ஈடுபட வேண்டும்.
ஒரு அரசன் தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை தவிர்க்கிறாயல்லவா. இடையறாது வேட்டை, இடையறாது சூதாட்டம், பகலில் தூங்குவது, பிறகு பெண்களை காமத்துடன் சுற்றி அலைவது, மது பானம், நாட்டியம், பாட்டு, தாளவாத்தியம்இவற்றில் மூழ்கிப்போவது போன்றவை செய்யாது இருக்க வேண்டும்.
நம்முடைய தேசத்தில் இது குழப்பமான காலகட்டம். நாட்டுக்கு தீங்கு செய்தவர்களை நாம் வெளியேற்றி இருப்போம். அவர்கள் இதுதான் சாக்கு என்று உள்ளே வர முற்படுவார்கள். அந்த மாதிரி ஆட்களை கண்காணிக்கிறாயா.
அரண்மனையும், கோவில்களும், மாடங்களும், மக்கள் கூடும் சபைகளும், பெரிய வீடுகளும், சிறிய வீடுகளும் உள்ள இந்த அயோத்தி நகரை கவனமாக பராமரித்து வருகிறாயா. சுத்தமாக வைத்திருக்கிறாயா. தண்ணீர் பஞ்சம் ஏற்படாது நீர் நிலைகளை துப்புறவுப்படுத்தி நன்றாக வைத்திருக்கிறாயா. வர்த்தகர்களுக்கு வாணிபம் செய்வதற்குண்டான உதவிகளையும், தேவைப்பட்டால் பொருளுதவியும் செய்ய தயாராக இருக்கிறாயா
ரிஷிகள் சொல்கின்ற இந்த நீதி மொழிகளை நமது முன்னோர்கள் அணுசரித்தார்கள். நமது தந்தையும் அணுசரித்தார். நீயும் இதை அணுசரிக்கிறாயல்லவா. நீதி, நெறிகளுடன் ஒரு அரசன் அரசாண்டால் அவன் பலமான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து நன்கு வயது முதிர்ந்த காலத்தில் உடம்பை உகுத்து சொர்க்கம் போவான்.
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியினுடைய இந்த தொடர்ச்சியான பரதனை நோக்கிய விசாரிப்புகள் அந்த காலத்து அரசு முறையையும், மக்கள் வாழ்வையும், நாகரீகத்தையும் மிகத் தெளிவாகச் சொல்கிறது. இந்த விஷயங்கள் இன்றைக்கும் தேவைப்படுகின்றன. ஆனால் எவ்வளவு தூரம் செயலோடும், செயலற்றும் இருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.
சரஸ்வதிசுவாமிநாதன்
காலம் கடந்தும் நிகழ்காலத்திற்கும் பரத கண்டத்திற்கும் பொருந்தும் எழுத்து. பரதன் மூலம் சகலருக்குமான தகவல்.