” பேராசிரியருக்கு உடம்பு நடுங்குது. வேர்க்குது. நெஞ்சு அடைக்குது. இவ்வளவு சீக்கிரமான்றாரு. ஆமான்றான். நாளைக்கு கிளாஸ் இருக்கேன்றாரு. அது அப்புறம் வேற யாராவது சொல்லித்தருவாங்க. நீ அதுபத்தி கவலைப்படாதேன்றான். எல்லா நோட்ஸூம் எடுத்துட்டேன். நாளைக்கு ஒரு நாள் மறுபிறவி மட்டும் சொல்லிட்டு வந்துடறேன்றாறு. நீங்க பாதிரியாரா இருந்தவராச்சே, எனக்காக கொஞ்சம் கருணை காட்டக்கூடாதான்னு கெஞ்சறாரு. சீக்கிரம் கூட்டிகிட்டு வரச்சொல்லி சொன்னாங்க. என்னை மாதிரியே நீயும் பிரசங்கம் பண்றே. நம்ம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஓரே சாதி. அதனால நாளைக்கு சாயந்திரம் வரைக்கும் விடறேன் மறுபிறவி பத்தி பிரசங்கம் முடிச்சவுடனே கிளம்பிடு. நீ என்னதான் பேசறேன்னு நானும் வந்து கேக்கறேன். அப்படின்னு சொல்லிட்டு போயிடுது. ”

பேராசிரியரும், எல்லாத்தையும் வாரி சுருட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிடறாரு.

மறுநாள் கிளாஸ் கொள்ளாத கூட்டம். அந்த யுனிவர்சிட்டியில இருக்கிற வெவ்வேறு கிளாஸ் பசங்கள்ளாம் வந்திருக்காங்க. எல்லாருக்கும் முன்னாடி இடப்பக்கம் ஒரு தனி சேர்ல அந்த செத்துப் போன பாதிரியார் உட்கார்ந்திருக்கார். சீக்கிரம் முடின்ற மாதிரி பார்க்கறாரு.

பேராசிரியர் யோசிக்கிறார். இன்னிக்கு கிளாஸ் இல்லேன்னு சொல்லிடறாரு. பசங்க கலைஞ்சு போயிடறாங்க. அந்த செத்துப் போன ஆள் என்ன இப்படி பண்ணிட்டேன்னு கேட்கிறான். பேராசிரியர் பதிலே சொல்லாது வீட்டுக்கு போறாரு.

பேராசிரியர் இன்று வரையிலும் மறுபிறப்பு பற்றி வகுப்பே எடுக்கவில்லை அப்படின்னு கதை முடியுது. அந்த பாதிரியார் பேய் யுனிவர்சிட்டியில இத்தனாவது பிளாக்குல, இத்தனாவது கிளாஸ்ல தினம் இத்தனை மணிக்கு வந்துட்டுப் போகுது அப்படின்னு ஒரு பின்குறிப்பு இருக்கு.

மாணவர்கள் இப்ப பேராசிரியரை விட்டுட்டங்களாம். தினம் கிளாஸ்க்கு போயி… ஃபாதர் ஃபாதர்னு கூப்பிடறாங்களாம் அவருக்கு ” கேக்” கெல்லாம் வெச்சுட்டு போறாங்களாம். வேண்டுதல் எல்லாம் எழுதி வெக்கறாங்களாம்.

மெத்த படிச்ச ஒரு யுனிவர்சிட்டியை துணிக்கடைல வேலை செய்த குமாஸ்தா சிறுகதை எழுதி பைத்தியமா அடிச்சுட்டான்.

” எழுத்தாளனுக்கு முன்னாடி முட்டாளா போயிட்டாங்க பாரு. ஒரு கதை ஒரு பெரிய தேசத்தையே கலக்கிருச்சு போ ”

நானும் அவர் கூற்றை ஒப்புக்கொண்டேன். அவர் கதை சொன்ன விதம் அழகாக இருந்தது. கதை இதைவிட அழகாக எழுதப்பட்டிருக்க வேண்டும். பேய் பற்றிய ஜனங்களுடைய எண்ணத்தை கதை ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புத்திசாலிகளை திகைக்க வைத்திருக்கிறார். பலவீனர்களை பயமுறுத்தி இருக்கிறார். ஒரு ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறார்.

ஆனால் உண்மையில் பேய் இருக்கிறதா, உண்மையில் இருந்தால் அதனால் என்ன பிரச்சினை வரும். என்ன லாபம் வரும்.

” மணி பன்னிரெண்டரை ஆயிட்டுது. பேயே போய் ரெண்டு டீ வாங்கிட்டு வா ” என்று ஏவ முடியுமா.

வசந்தா டீ பாருக்கு போய் நானும், புன்னைவனமும் டீ குடித்தோம்.

” இதோ இவங்கள பிடிக்கறதேயில்ல ” டீக்கடைக்காரர் எங்களை கைகாட்டி சொன்னார்.

என்ன சொல்கிறார். எங்களைப் பேய் பிடிக்காது என்று சொல்கிறாரா.

” என்னப்பா, என்ன சௌல்ற. ”

” அந்தப் பிசாசுங்க உங்களைப் பிடிக்கறதே இல்லன்னு சொல்றேன் சார். ”

” புரியலப்பா. ”

” போலீஸ்காரனுவ ரோட்ல ஒருத்தன் உட்கார விடமாட்டேன்றான் சார். நேத்து டீக்கடை வாசல்ல இருந்து அஞ்சுபேர அள்ளிக்கிட்டு போயிட்டான். ”

நாங்கள் சிரித்துக் கொண்டோம். மறுபடி வேறு ஏதோ பேசிக் கொண்டு அந்த இடத்துக்கு வர, நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் யாரோ படுத்திருக்கிறார்கள். இருட்டில் உற்றுப் பார்க்கும் போது அது முருகேசன் என்பது புரிந்தது.

முருகேசன் அந்த ஏரியாவின் சைக்கிள் ரிக்ஷாக்காரன்.

புன்னைவனத்துக்கு நன்கு பழக்கமானவன். நாற்பது ஐம்பது வருடங்களாக அந்த சந்துமுனையில் சைக்கிள் ரிக்ஷாவோடு வாழ்பவன்.

-தொடரும்