பார்த்தசாரதி திடுக்கிட்டு வடக்கே ஓட. தெற்கிருந்து வந்தவன் துரத்தத் தொடங்கினான். திடீரென்று வடக்கே இருந்து முப்பது, நாற்பது பேர் விதம் விதமான ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள்.

நானும் புன்னைவனமும் நிற்கின்ற இடத்தில் இருந்து நூறு கஜ தூரத்தில் அந்த பார்த்தசாரதியை வெட்டிப் போட்டார்கள். சுற்றி இருந்த ஜனம் வெவ்வேறு பக்கங்களில் ஓடிவிட்டது.

பார்த்தசாரதி செத்த பிறகு பதினைந்து நிமிடம் கழித்து, லாரி லாரியாய் போலீஸ் வந்தது. இதில் மாட்டிக் கொண்டால், தேற முடியாது என்று தெரிந்து நானும், புன்னைவனமும் வீடு போய் விட்டோம். ஆனாலும் நாங்கள் பேசுவதை நிறுத்தவில்லை.

எழுதுபவருக்கு எழுதப் போவதை பேச ஆள் வேண்டும். அதற்கு இரவே சவுகரியம். மரங்கள் அடர்ந்த தெருவில் இரவே சுத்தமாய் பெருக்கப்பட்டு கோலம் போட்ட வாசலில் உட்கார்ந்து பேசுவது ஒரு சுகம். அதையும் தவிர, ஐம்பது வயது தாண்டிய இரண்டு எழுத்தாளர்களை எல்லோரும் மரியாதையாகத் தான் நடத்துகிறார்களே. யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. செய்ய முயற்சித்ததும் இல்லை.

படிப்பு இல்லாத ஒரு போலீஸ்காரர் ஒருமுறை மிரட்டியபோது புன்னைவனம் மிகவும் கோபமானார்.

” நான் போக மாட்டேன். என்ன வேணா பண்ணிக்க. ”

பின்னால் வந்த மற்ற போலீஸ்காரர்கள் விவரம் புரிந்து கொண்டு திட்டி அனுப்பினார்கள். புன்னைவனம் தோள் தட்டிக் கொண்டார்.

ஒரு இரவு மரணம் பற்றி நானும் அவரும் பேசிக் கொண்டார் இருந்தோம். ஒரு ஆங்கில எழுத்தாளரின் பெயர் குறிப்பிட்டு, ” இவர் புக் படிச்சிருக்கேன், தத்ரூபமா எழுதறான்யா” என்று ஆரம்பித்தார்.

ஒரு புரொபஸர் இந்தியன் பிலாஸபியை வகுப்பில் எடுக்கிறார். அதுல மரணம் பத்தி என்ன சொல்லி இருக்குன்னு விரிவா ஸ்டூடன்ட்ஸ் கிட்ட பேசறாரு. நிறைய குறிப்புகள் வெச்சு, புத்தகங்கள் பேர் சொல்லி, இந்த புக்குல இந்த பக்கம் படிங்க, அந்த புக்குல பக்கம் படிங்கன்னு நிறைய மேற்கோள் கொடுக்கறாரு.

மறுபிறப்பு பத்தி நாளைக்கு கிளாஸ் எடுக்கறேன்றார். ஸ்டூடன்ஸ் எல்லாம் ஆஹா ஓஹோன்னு போறாங்க. வேறு வகுப்பு ஸ்டூடன்ஸ்க்கெல்லாம் சொல்லணும்னு ‘ பிளான் பண்றாங்க. வகுப்பறையிலேயே உட்கார்ந்து அந்த பேராசிரியர் அடுத்த நாள் வேலைக்கு உண்டான நோட்ஸ் எடுக்கறாரு. கதவ உள்ள தாழ்ப்பாள் போட்டுட்டு, யாரும் தொந்தரவு பண்ணாம இருக்கணும்னு அமைதியா வேலை செய்யறாரு. டக்குன்னு எதிர்க்க அவரு இதுவரைக்கும் பார்க்காத ஒரு ஆள் நிக்கறான். போலாமான்னு கேட்கிறான். உடம்போட ஒட்டின டிரஸ். சாம்பல் விழுந்து எழுந்த மாதிரி மூஞ்சி. அவன் பேசற இங்கிலிஷ், ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி உள்ள இங்கிலிஷ்.

பேராசிரியர் திகைச்சுப் போய் நிக்கறாரு. நீ யாருன்னு கேட்கறாரு. நானும் உன்ன மாதிரி மரணம் பத்தி நிறைய பேசியவன்தான். ‘ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காத்தாலேயும் சாவு பத்தி பேசியே காசு சம்பாதிச்சேன். வெளியூருக்கெல்லாம் என்னை கூட்டிகிட்டு போயி, பிரசங்கம் பண்ணச் சொல்லுவாங்க. நான் செத்துப் போயி ரொம்ப வருஷம் ஆச்சு. நீ பேசினது போதும் வா போலாம் அப்படின்னு சொல்லுது.

-தொடரும்