இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன்.

மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம் பார்ப்பேன்.

ஒரு லயத்தில் இவைகளை நடத்தினால் மனம் மண்டியிட வாய்ப்பு உண்டு. அதென்ன லயம். இதமான சுகமான ஆத்திர அவசரமில்லா நிலை.

எப்படியாவது மனசு அடக்கணும் என்று இறுகினால் எகிறும். உடைத்துக்கொண்டு மனம் வெளியேரும். அதையே பார்த்துக் கொண்டிருந்தால் வசப்படும். பயப்படும்.

அப்படி என்னைப் பார்க்காதே என்று வேறு தந்திரப்படங்கள் போடும். கலைடாஸ்கோப் காட்டும். மாறாது அதையே கவனித்தல் முக்கியம். பிசிறடிக்காது அங்கேயே நிற்றல் சிறப்பு. இது ஒரு கோபமில்லா பிடிவாதம். விடா முயற்சி.

செய்து செய்து செய்து செய்து வித்தை கற்கவேணும். நா தெனம் மெடிடேட் பணறேன் தெரியுமோ. குசு. பிடுங்கிக் கொண்டு போகும்.

மனைவிக்கு கூட சொல்ல வேண்டாம். பேச வெளிறும். கூர்மை குறையும்.

கவனித்தலில் சுருளும் மனம் சட்டென்று காணாது போய் …விதிர்த்து எழுந்திருக்கும்.

என்னடா இது என்னநடந்தது. புரியும். சிரிப்புவரும். இதான் வழியா… மறுபடி மனம் அமரும்.

இந்த முறை எளிதில் வெற்றிடம் போகலாம்.

என்ன பலன். முகம் மலரும். புத்தியில் அமைதி வரும். உடல் மொழியில் நிதானம் வரும். யோசிப்பில் திறன் கூடும். எதிர்ப்பட்டவரை புரியும். இன்னும் என்னென்னவோ.

கார்த்திகை மார்கழி தை மாதங்கள் இம்முயற்சிக்கு ஏற்ற காலங்கள்.