வலைதள வாசகர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும்.

சிறிய அளவில் சில விஷயங்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். அனேகமாய் இவை என் அனுபவம் சார்ந்ததாய் இருக்கும். நான் அறிந்ததாகவும் இருக்கும். படித்துப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தையே மேன்மேலும் யோசனை செய்யுங்கள்.

காலையில் பல் தேய்ப்பது பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அற்புதமான பற்பசைகள் விற்கப்படுகின்றன. மிருதுவான பற்குச்சிகளும் இருக்கின்றன. பற்களில் இடைவெளி இல்லாது ஈறுகள் அடைத்து இருத்தல் நல்லது. ஆனால் நூற்றுக்கு எண்பது பேருக்கு சந்துப்பல்தான் அமைகிறது. இந்த சந்துப்பல்லில்தான் உணவுகள் தங்கி பாக்டிரியாக்கள் வளர்ந்து பல் சொத்தை ஏற்படுகிறது. பல் சொத்தை மிகப் பெரிய ஆரோக்கியக் குறைவு. உள்ளங்கால் வரை தொந்தரவு செய்யக் கூடிய குறைபாடு அது.

சிறு வயதில் தரமற்ற பற்பொடிகள்தான் கிடைத்தன. பிறகு உமிக்கரியும், உப்பும் நானாக தயார் செய்து கொண்டேன். மத்திம வயதில் நூலால் அழுக்குகளை தினமும் நீக்குகின்ற முறையை கடைபிடித்தேன். வெந்நீரில் வாய் கொப்பளித்தேன். ஆயினும் வருடத்திற்கு ஒரு பல்லாவது இழக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானேன். இதனால் உணவு அரைபடுவது தகறாறு ஆயிற்று. இது ஜீரண சக்தியை பாதித்தது. உணவு செரிமானத்திற்கு ஆரோக்கியமான பற்களே அடிப்படை. பிறகு “ப்ளாஸ்” என்ற கூர்முனையும் நூலும் கொண்ட ஒரு பொருளை வாங்கினேன். சாப்பிட்டு முடித்ததும் பற்களை இதனால் சுத்தம் செய்து விடுகிறேன். சந்துகளில் ஏதும் தங்க விடாது செய்கிறேன். ஆறேழு முறை வாய் கொப்பளிக்கிறேன். பிறகு நாக்கு வழிக்கிறேன். நாக்கில் படிமம் படர்வதும் பாக்டிரியாக்கள் வளரக் காரணம். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். நண்பரோடு பேசவும் , காதலியை முத்தமிடவும், குழந்தைகளை கொஞ்சவும் துர்நாற்றம் இல்லாத வாய் முக்கியம். சில சமயம் கடவுளுக்குக் கூட நம் வாய் துர்நாற்றம் கஷ்டமாக இருக்கலாம்.

எனவே, பற்கள் சுத்தம் மனித வாழ்வில் முதன்மை பெறுகிறது.

நான் “சென்சோடைன் ரிப்பேர்” பற்பசை உபயோகிக்கிறேன். இது நல்ல பலன் தருகிறது. நான் இந்த பற்பசையின் ஏஜென்ட் அல்ல. விளம்பரதாரர் அல்ல. உபயோகித்து பலன் கண்டு எழுதுகிறேன்.

பற்பசை எதுவாயினும் வெறும் தேய்த்தல் போதாது. பற்சந்துகளை சுத்தப்படுத்தல் மிக முக்கியம். நாக்கு வழித்தல் அவசியம். நல்ல மௌத் வாஷினாலும் வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து கொள்ளலாம். இப்படி சில விஷயங்களை பேசலாம் என்று இருக்கிறேன்.உங்கள் அனுமதியோடு.

பேசத்தானே பிறந்திருக்கிறோம். பேச்சில்தானே தெளிவுறுகிறோம். பேச்சால் தானே வெளிப்படுகிறோம். பேச்சு மிக முக்கியமப்பா. கூர்மையாய் பேசுபவருக்கு வாழ்க்கையில் முன்னேறுவது எளிதாகிறது. பேசத் தெரியாதவனை உலகம் நிர்மூடன் என்கிறது. தெளிவாகவும் திடமாகவும் இனிமையாகவும் ஒரு மனிதர் பேச வேண்டுமப்பா.பேசப் பழகுதல் நலம். அது ஒரு பலமப்பா….

(என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா)