கேள்வி: உங்கள் எழுத்தை விமர்சிக்கிற வாசகர்களும் நிறைய இருக்கிறார்களே?

இருப்பதுதானே இயற்கை. வலது என ஒன்று இருந்தால் இடது என ஒன்று இருக்கத்தானே செய்யும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அல்லது வேறு எவரேனும் படிக்கக் கேள்விப் பட்டு அதை தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் இலக்கிய உலகில் விமர்சிப்பதற்கு முன்னால் படிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. இங்கே முதலில் தனிப்பட்ட கருத்தைத்தான் விமர்சனம் என்கிறார்கள். விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர் ஆரம்பித்தபோதும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தகத் திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழா நடப்பதும் நல்ல வாசகர் எண்ணிக்கை வளர்வதும் தான் இன்றைய தேவை. விமர்சனம் இங்கே நொறுக்குத்தீனி. வாய் மெல்லப் பயன்படும் அதுவே அறுசுவை விருந்தல்ல. நுனிப்புல் மேய்கிறவர்கள் விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்.

கேள்வி: ஆரம்பத்தில் பாலியல் கண்ணோட்டத்தோடு நீங்கள் எழுதினீர்கள். இப்பொழுது தலைகீழ் பிறழ்வாக ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் எழுதுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை இதே வாசகர்கள் முன்பு முன்வைத்தார்களே?

நான் நுனிப்புல் மேய்பவர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில்தான் எழுதியிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேரின் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய்ப் போனதற்குக் காரணம் பாலியல் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும்தான். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்டபிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை வேலை, வருமானம், குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து, அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும் காமத்தினுடைய பங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ வக்கிரமான பாலியலோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறான அணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காக சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா- அம்மா கதைதானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை; படித்தது பற்றிய தெளிவின்மை. இவர்கள்தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாகப் படித்து விட்டு, என் எழுத்தைச் சரியாக அணுகாமல் புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக்கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாகச் செய்ததில்லை. மற்றவர் உருப்படியாகச் செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத்தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன.