கேள்வி: யோகிராம் சுரத்குமார் நாமம் எப்போது சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்?

குளித்த பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து, சுக்லாம் பரதரம் குட்டி விநாயகரை வணங்கி 108 முறை யோகி ராம்சுரத்குமார் சொல்லலாம். ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா’ என்பது ஒரு முறை. விரல்கள் விட்டு இதை எண்ணிக் கொண்டு போகலாம். அல்லது காலையில் எழுந்து படுக்கையில் உட்கார்ந்த உடனே சொல்லலாம். குளிக்கவேண்டும், திருநீறு அணிய வேண்டும் என்ற ஆசாரம் எல்லாம் இல்லை. பல் விளக்குவதற்கு முன் கூட இதை சொல்லலாம். அல்லது பல் விளக்கி விட்டு காபி குடித்துவிட்டு பிறகு சொல்லலாம். அல்லது அலுவலகத்திற்கு போகும் முன்பு சொல்லலாம். அல்லது இரவு நேரம் படுக்கையில் தூங்கப் போவதற்கு முன்பு ஒரு அருமையான நாளை கொடுத்ததற்காக நன்றி சொல்லி சொல்லலாம். ஒருவேளை நீங்கள் வீட்டு தலைவியாக இருந்தால் சகலரையும் வேலைக்கு அனுப்பிவிட்டு, முகம் துடைத்துக் கொண்டு, நெற்றிக்கு இட்டு டிவி பார்ப்பதற்கு பதில் உட்கார்ந்து சொல்லலாம். நீங்கள் நோயுற்று இருந்தால் படுக்கையில் படுத்தபடி சொல்லலாம். நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தால் ஒரு அரை தூக்கத்தில் முணுமுணுக்கலாம்.

புரிகிறதா. யோகிராம் சுரத்குமார் நாமத்தை எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆச்சார அனுஷ்டானங்களை தாண்டியது குருவின் பாதுகை. அலட்டல்கள் இல்லாதது குருவின் பாதுகை. குரு என்கிற விஷயம் மட்டுமே மனதிற்குள் நினைத்துக் கொண்டால் சுத்தம் தானாக சித்தியாகும்.  அமைதி தானாக உருவெடுக்கும். அதை மேலும் மேலும் சொல்லவைக்கும்.

நாமம் சொல்வதோடு நிற்கவில்லை. நாமத்திற்கு உள்ளே புகுந்து இந்த நாமம் என்ன ஏற்படுத்தியது என்று பார்க்கின்ற ஒரு சித்தியை கொடுக்கும். அந்தப்பார்வை உங்களை மேலும் பக்குவப்படுத்தும். உள்ளே இருப்பது என்ன. வெளியில் இருப்பது என்ன என்பதை தோற்றுவிக்கும். உள்ளும் புறமும் காட்டும்.

யோகி ராம் சுரத் குமார் என்பவர் மனிதர் அல்ல. வட தேசத்து சன்னியாசி அல்ல. அவர் பிரம்மாண்டமானவர் என்பது தெரியவரும். எல்லாவற்றுக்கும் காசு கலெக்ட்  செய்கின்ற குருமாராக அவர் இருந்ததே இல்லை. அவர் உபன்யாசி இல்லை. மைக் பிடித்து, ‘ஆதௌ கீர்த்தனாரம் பத்திலே’ என்று அவர் பேசுவது இல்லை. வடமொழியே மிக சிறந்தது என்றும் சொல்லவில்லை. ஜாதி பார்ப்பதில்லை. மதம் பார்ப்பதில்லை. பணக்கார, ஏழை என்று பார்த்ததில்லை. சகலரையும் அணைத்து கொண்ட மிகப்பெரிய பிரம்மாண்டத்தை நீங்கள் அவரை சந்தித்திராவிட்டாலும் அவர் நாமம் சொல்வதின் மூலம் அவரை முற்றிலும் புரிந்து கொள்வீர்கள். இது சத்தியம். அவரால் கொடுக்கப்பட்ட சத்தியம்.