உ
யோகிராம் சுரத்குமார்
கேள்வி – பதில்
கேள்வி: நிறைவாக எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எதன் நிறைவாக? இந்த கேள்வி, பதில் பகுதியின் நிறைவாகவா? ஆமாம். இந்த பகுதி இந்தக் கேள்வியோடு முடிகிறது.
என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.
விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும். நிம்மதியாக்கும் என்று சொல்லியிருக்கிறார். எது தர்மம்? உனக்கு நிச்சயம் தெரியும். தர்மமற்றது எது? வெகு தெளிவாகத் தெரியும். நல்லவனாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் வந்து விட்டால், எது நல்லது என்பதை யாரிடமும் கேட்க வேண்டாம். உனக்கே தெரியும். கெட்டிக்காரனாக, தந்திரம் மிக்கவனாக நீ முயற்சி செய்தால், அதற்கான திட்டங்கள் தீட்டினால் உன் வாழ்க்கை சரியத் துவங்கும். மனிதனுடைய கெட்டிக்காரத்தனம் மிகச் சொற்ப நாட்களே நீடிக்கும் என்பது மிகத் தெளிவாகப் புரியவரும்.
ஆசைகளற்ற, திட்டங்களற்ற தந்திரமற்ற ஒரு நிலைக்கு நீ தள்ளப்படும் போது எது சரி? எது தவறு? எது நல்லது? எது கெடுதல்? என்பதோடு, இப்போது இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்ற புத்தியும் வந்துவிடும். இது ஏற்பட்ட பிறகும் இதை உலுக்குகிற மாதிரி சம்பவங்கள் நிகழும். தர்மம் பற்றி எதிர்மறையாக நினைக்கும்படி சூழ்நிலைகள் வரும். அந்த நேரமும் மனதோடு தெளிவாக பேச வேண்டும். இது நியாயமா என்று கேட்க வேண்டும்.
நீ நல்லவனாக இருக்கலாம். நீ மற்றவருக்கு நன்மையே செய்யலாம். ஆனாலும் உனக்கு எதிரிகள் ஏற்படுவார்கள். உன் எதிரிகள் உன் மீது சீறி வருவார்கள். ஆனால் அந்த நேரமும் அமைதியாக இரு. உன்னைப்பற்றி தெளிவுபடுத்து. முடியவில்லையெனில் மண்டி போடு. மன்னிப்புக் கேள். முறையற்ற ரௌத்திரத்தின் முன்பு எதிர்ப்புக் காட்டி அடிபட வேண்டாம்.
அவர்களுக்கு புரியவில்லை. புரிகின்ற நிலை ஒருநாள் வரும் என்று அமைதியாக பின்வாங்கு. அந்த அமைதி, அந்த தெளிவு உள்ளுக்குள்ளே ஒன்றாகி, ‘நான் செய்யாத தவறுக்கு என்னை அவமானப்படுத்திவிட்டார்களே’ என்ற குமறலைக் கொடுக்கும். இது நியாயமா? என்று உனக்குள் இருக்கின்ற சக்தியை நோக்கி கேள்வி எழும். அந்த சக்தி வேலை செய்யத் துவங்கும். உன்னை அவமானப்படுத்தியவன், நீ அவமானப்பட்டதைவிட பலநூறு மடங்கு அவமானமும், தூக்கமின்மையும் உடல் நோவும், காசு செலவும் ஏற்பட்டுக் கதறுவான் என்று தெளிவாகும். அடித்து நொறுக்குகின்ற கோபத்திலிருந்தும், கடும் மன நோயிலிருந்தும் நீ காப்பாற்றப்படுவாய்.
நல்லவனான உன்னை, எதிர்த்தவர்கள் அல்லாடுவர்கள். அலறித் தவிப்பார்கள். கண்ணில் நீர் வடிய மனம் துடிப்பார்கள். இது உன் கண்முன்னே நேரும். அப்போழுதும் நல்லவனாகவே இரு. ‘அவன் துன்பம் நீங்கட்டும். வாழ்வு வளமாகட்டும்’ என்று மனது ஒன்று குவிந்து பிரார்த்தனை செய். அது அவனை சுகமாக்கும். தீயதிலிருந்து வெளியே கொண்டு வரும். நல்லதை நோக்கி நடக்கின்ற குணவானாக அவன் மாறுவான். இது உன்னுடைய அன்பால் மிக சூட்சுமமாக அவனுக்குள் ஏற்படும்.
எனவே, உனக்கு எதிரியென்று எவரும் இலர். எதிரி இருந்தால் தானே சூழ்ச்சி வரும். கெட்டவனாகவோ, குரூரமாகவோ வாழ நேரிடும். எதிரியே இல்லாதபோது நீ நல்லவனாகத்தான் வாழ முடியும். ஏனெனில் இங்கே நல்லவன் வாழ்வான். நல்லவன் மட்டும்தான் வாழ்வான்.
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் சகலரும் நல்லவர்களாக மாறும் காலகட்டம் ஒன்று உண்டு. உலகத்தில் எல்லோரும் நல்லவர்களாக மாற அந்த யுகம் முடிகிறது. மறுபடியும் பிரளயம் வருகிறது. மீண்டும் உயிர்கள் தோன்றுகின்றன. இது மிக நீண்ட பாதை. கண்ணுக்கு எட்டாத தூரத்தில் தெரிகின்ற பாதை. நீ தனியனாய், ஒரே ஒரு சிறு துளியாய் அந்தப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறாய். ஜன்ம ஜன்மமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். ஒவ்வொரு ஜன்மத்திலும் மேலும் நல்லவனாக, மிக சீக்கிரமே நல்லவனாக வாழத் துவங்கிவிடுவாய். நல்லவனாக வாழ்வதுதான் வாழ்க்கை. ஏனெனில் நல்லவன் மட்டுமே வாழ்வான். நல்லவனாக வாழ முயற்சி செய்யுங்கள். உள்ளுக்குள் பேசுங்கள் என்று வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.
Usha Balakrishnan
அற்புதம் ஐயா ஐயா தான்.