கேள்வி: அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்?

அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை ஒத்துதான் இருக்கிறது, காமம் என்பதை தவறு என்று ஒருபோதும் இந்துமதம் என்கிற சனாதன தர்மம் சொன்னதேயில்லை.

காதலின் வெளிப்பாடு காமம். அது நெறிமுறைப்பட்டதாக இருப்பின், மிகச்சிறந்த அனுபவமாக, நிம்மதி தரும் விஷயமாக உடம்பையும், மனதையும் குளிர வைக்கின்ற ஒரு தந்திரமாக செயல்படுகிறது.

தந்திரா என்று வழங்கப்படும் சனாதன தர்மத்தின் ஒரு கொள்கை காமத்தை காதலோடு ஈடுபடசெய்கிறது. அடுத்த உயிரின் மீது, மனிதர் மீது கருணையும், மதிப்பும் கொண்டிருந்தால் தான் அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருக்கும். அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருந்தால் தான், இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் எந்த விஷயமும் சிறப்பாக அமையும்.

காதல் இத்தகையது. நேசிப்பது என்பது உண்மையாக இருந்துவிட்டால் அதே விதமான அன்பு வெகு வேகமாக திரும்ப கிடைக்கும். திக்குமுக்காட வைக்கின்ற அந்த அன்பை அனுபவிப்பதுதான் ஆன்மீகம்.

காமம் என்ற வார்த்தைக்கு ஆசை என்று பொருள், எந்த ஆசையையும் சுயநலத்தோடு நிறைவேற்றிக்கொள்ள விரும்பும்போது, அடுத்தவர் என்ன அவஸ்தைப்பட்டாலும் சரி. எனக்கு வேண்டியதை நான் எடுத்துக்கொள்வேன் என்று ஆத்திரத்தோடு அணுகும் போது அந்த அனுபவம் கசப்பானதாக மாறிவிடுகிறது. காமம் அதாவது ஆசை தவறென்று பிதற்ற வேண்டியிருக்கிறது.

உனக்கு இன்று என்னாயிற்று, தலைவலியா, மூச்சுத்திணறலா, தூங்கு என்று மனைவியை தூங்க வைத்து தலைக்கு தைலம் தடவி, காது வரை கம்பளி போர்த்தி கருணையோடு நடத்தினால், உடல்நலம் தேறிய போது மனைவிக்கு உவகை பொங்கும். பதிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். நிச்சயம் செய்வாள்.

அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது, எங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கும்.

நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன் அவ்வளவே. அங்கு அன்பு தானாக இருக்கும். அன்புதான் ஆன்மீகம்.