கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா?

எனக்கு சோழ தேசம். நான் பிறந்து வளர்ந்த இடம். என் மூதாதையர்கள் வாழ்ந்த பூமி. எனது வம்சம் இடக்கை தூக்கி ஆசிர்வதித்த ஊர். வலது கையால் ஆசிர்வதித்தால் அக்னி ஹோத்ரம் செய்யும் கையால் ஆசி கூறினால் பஸ்மமாகிவிடும் என்று இடது கையால் ஆசிர்வதிப்பார்கள். அப்பேர்பட்ட கர்வமும் , கல்வியும் கொண்ட ஒரு குழு என்னுடைய பழமர்நேரி என்கிற கிராமம். பழ மரங்கள் நிறைந்த நேரி என்பதே அதற்குப் பொருள். செழிப்பான பூமி என்று அர்த்தம். நூறு வருடங்களுக்கு முன்பு பெரிய திண்ணை கட்டி, வயலை குத்தகைக்கு விட்டு நெல்லை அளந்து வாங்கிக் கொள்கின்ற கும்பல். வாய் சவடால் நிறைந்த ஆட்கள். நல்லவரா, கெட்டவரா என்று அனுமானிக்க முடியாத பேச்சு. அருமையான சாப்பாடு. பிழைப்புக்காக பட்டணம் வந்து விட்டாலும் எங்கள் குடும்பத்தின் வேர்கள் அங்குதான் இருந்தன. கொழுக்கட்டை தரமி என்கிற அத்தை இருந்தாள். கொழுக்கட்டை செப்பு மிக அற்புதமாக செய்வாள் என்பதால் ஏற்பட்ட காரணப் பெயர்.

பதினேழு வயதிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டேன். நாலு நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை கிடைத்தாலும் கொஞ்சம் காசு எடுத்துக் கொண்டு பஸ் பிடித்து தஞ்சாவூர் போய் விடுவேன். மேல் தெருவில் சித்தப்பா வீடு. அங்கே தங்கி தஞ்சையின் பல பாகங்களுக்கு போய் வருவேன். பிரகதீஸ்வரர் கோவிலை ஒவ்வொரு கல்லாக தடவி ரசித்தேன். இராஜராஜன் சரித்ததிரம் படித்து விட்டு, எங்கே நின்றிருப்பான். எந்த இடம் குந்தவையின் இடம். வந்திய தேவன் அமர்ந்த இடம் எது. கிருஸ்ணன் ராமன் எங்கிருந்து கட்டிட வேலையை கவனித்திருப்பான். என்றெல்லாம் தேடி அலைந்தேன். சில இடங்கள் மனதிற்கு தானாய் தென்பட்டன. சில இடங்களுக்கு குறிப்புகள் இருந்தன. அப்பொழுது தஞ்சையில் எழுத்தாளர் மாலன் ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார். அவரோடு நான் தஞ்சையின் கிராமங்களுக்கும் சுற்றி இருக்கிறேன். அப்பொழுது இவ்வளவு பெரிய நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. தஞ்சாவூரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

இந்த தஞ்சையின் மீது காதல் வந்ததற்கு தி. ஜானகிராமன் நாவல்களும் ஒரு உந்துதல். என்னை, எப்படி காவிரியை பார்ப்பது, கிராமங்களை பார்ப்பது என்று அவர் நாவல்கள் சொல்லிக் கொடுத்தன. நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பெரிய கோவில் பற்றியும், தஞ்சையில் உள்ள மற்ற கோவில்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். இருபத்தோரு வருட இடையறாத நூற்றுக்கணக்கான பயணங்களுக்குப் பிறகுதான் நாவல் எழுத வேண்டும் என்ற முயற்சியிலேயே இறங்கினேன். இது கட்டின பெண்டாட்டியை கூடலில் ஈடுபட்டு கலந்து கிழடான பிறகு மறுபடியும் நினைவு கூர்ந்து சந்தோசப் படுவது போன்ற செயல். சோழ தேசத்திற்கு ஒரு மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எல்லோரும் வந்து வணங்க வேண்டும் என்று விரும்பினேன். அதுவும் காரணம்.

கேள்வி: சரி. பிறந்த மண் சோழ தேசம். ஆனால் இராஜராஜன், இராஜேந்திரன் என்று தேர்ந்தெடுத்தது எதனால்?

சோழ வம்சத்தில் இந்த இரண்டு பேர்களிடையேதான் அதிகம் சம்பவங்கள் இருக்கின்றன. இதற்கு முந்திய ஆட்சி பெரிதும் விரிவு படுத்தாது இருந்தது. இவர்களுக்கு பின்னோரின் ஆட்சிகள் மெல்ல மெல்ல கைப்பற்றியதை இழக்கும்படி நேரிட்டது. இவர்கள் ஆட்சியில் தான் தஞ்சை மிகப் பெரிய விஸ்தீரணத்தை அடைந்தது. பெரிய படையெடுப்புகள். அது மட்டுமில்லாது மிகச் சிறந்த கற்றளிகள் பலதும் இவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். மிக நாகரீகமான, சீரான அதேசமயம் கொஞ்சம் சிரமமான ஒரு வாழ்க்கை தமிழர்கள் இவர்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்வில் வியக்க வைக்கும் விசயங்கள் பலதும் இருக்கின்றன.

கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்?

-பதில் நாளை