வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது.

கோவிலில் பிரதிமையை விட முக்யம் கோவிலின் அடர்த்தி. ஏதோ ஒரு நிம்மதி பரவும். அமைதி கூட்டத்துக்கு நடுவேயும் ஏற்படும்.மனதில் பலம் கூடும்.

தன்னை மறந்து மற்றவராக மாறும் நேரம் இது.

என் குழந்தையில்லை? ஏன் அவருக்கு திருமணமாகவில்லை? எதனால் இந்த நோய்.? என்று பலர் நினைவு வரும். மனம் தடவும் தலை வருடும்.

மனம் அன்புமயமாக மாறும். இது பிரார்த்தனையில்லை. அதற்கும் மேல்.விதியின் தடம் மாற்றும் விழைவு.

எதனாலோ நல்லது நடக்கும். காரணம் நானா. இல்லை நான் கருவி.

கடவுள் என்கிற வார்த்தையை பிரதிமையோடு பிரதிமைக் கதைகளோடு முடித்து விடக்கூடாது. கடவுள் என்பது கனத்த உணர்வு. அது மனம் போடும் கூத்தல்ல. மனம் தாண்டி பரவுதல். நான் என்பது நழுவி நிற்றல்.

அந்த பலம் எவரையும் சொஸ்தப்படுத்தும். நெல் முனையளவும் பலன் கருதாத அமைதியது. கடவுளின் பிரவேசம் மனிதருள் புகும் நிலையது. உலகம் முழுவதும் பல இடங்களில் கடவுளின் கருவிகள் இயங்குகின்றன. பிரகாசமான மனிதர்கள் அவர்கள்.

ஒரு கோவிலின் அடர்த்தி பலம் கூட்டும். ஒரு கோவிலில் வேடங்கள் பூணாது, உங்களை
முன்னிலைப் படுத்திக் கொள்ளாது, மனதுள் அமர்ந்தபடி கோவிலின் சூழல் உணருங்கள். அது நல்லது.

ஆனால் சத்தியத்தோடு இருப்பது மிக மிகக் கடினமப்பா. இடையறாது வேடங்கள் பூண்ட மனமல்லவா… எது சத்யம் என்பதே தெரியாது.

அது ஒரு நிர்வாணம். மனிதர்கள் மறைத்து கொள்ள பழக்கப்பட்டவர்கள். வேஷதாரிகள் வெட்கப்பட்டு நிர்வாணியிடம் வந்துதானாக வேண்டும்.

வாழ்க்கை வெகு விசித்திரம்.