தர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்.

மிகப் பெரிய சக்தி உன் மூலம் இயங்கும் என்று காட்டத்தான் அர்ஜுனன் என்கிற நரனை தேர்ந்தெடுத்தது. மிகச் சிறந்த, மிக புத்திசாலியான, மிகத் துடிப்பான அதே சமயம் மிக உண்மையான மனிதன் அர்ஜுனன். முன்கோபி. ஏழு பெண்டாட்டிக்காரன். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. அர்ஜுனனிடம் இருந்தது உண்மை. சரணாகதி. குருபக்தி. இது கலப்படமே இல்லாத உன்னதமான விஷயம்.

எது தர்மம், எது அதர்மம்? ஒவ்வொரு மனிதனுக்கும் மிகத் தெளிவாக தர்மமும், அதர்மமும் தெரியும். கொஞ்சம் யோசித்தால் நடுநிலைக்கு வந்துவிட முடியும். அந்த வலு மனிதனிடம் இருக்கிறது. ஏதேனும் ஒரு மயக்கத்தில் அவன் அதர்மத்தை நாடுகிறான். தான் செய்வதே சரி என்கிறான்.

அந்த மதிமயக்கம் போவதற்குத்தான் தியானம். அதற்குத்தான் ஜபம். அதற்குத்தான் ஹோமம். அதற்குத்தான் பக்தி. அதற்குத்தான் பஜனைப் பாடல்கள். அதற்குத்தான் கோவில். அதற்குத்தான் கும்பாபிஷேகம். அதற்குத்தான் தேர் இழுத்தல். அதற்குத்தான் கல்வியை நாடல். அதற்குத்தான் துறவறம் பூண்பது. அதற்குத்தான் தொண்டு செய்தல். அதற்குத்தான் மதம். அதற்குத்தான் மதமற்று இருத்தல். அதற்குத்தான் குடித்தனம். அதற்காகத்தான் குழந்தை பேறு. மனிதருடைய எல்லா நடவடிக்கையும் தர்மத்தை காக்கவும், அதர்மத்தை வீழ்த்தவும்தான் இருக்கிறது.