உ
யோகிராம் சுரத்குமார்
அந்தகரணம் – பாகம் 3
” ஐயா, இந்த கோவில் இந்த ஊரின் ஒரே கோவில். இவன் ஒரே பரிசாரகன். இவனைக் கொன்றுவிடாதீர்கள். இறைவனுக்கு உண்டான நிவேதனம் குறைபாடாகும். ஐயா மன்னித்து அருள வேண்டும். ”
கை கூப்பினார்கள்.
” இறைவன் சன்னதியில் மனிதரைக் கொல்வேனா? இது மயக்கம் தான். அவருக்கு நீர் தந்து எழுப்புங்கள். ”
பரிசாரகன் எழுந்து கைகூப்பி தரையில் விழுந்து அழுதான்.
” புத்தி…புத்தி… புத்திமானே பலவான். ”
” புரிகிறது… புரிகிறது. ” கன்னத்தில் கை தட்டி அபராதம் போட்டுக் கொண்டார்கள். கைபிடித்து வந்தார்கள். நடைமேடை போட்டார்கள்.
பரிசாரகனுக்கு திருநீறு இட்டு, ” தீர்காயுஷூ மான் பவ : ” என்றதும் தான் அழுகை நிறுத்தினான். அத்தனை பயம். புத்தி, கூர்மையான புத்தியை உணர்ந்த பயம்.
இந்த ஊரில் யார் வாங்கிக் கட்டிக் கொள்ளப்போகிறார்களோ? யாரையும் துன்புறுத்த விருப்பமில்லை. வம்புக்கு வந்தால் வெறுமே விடவும் மனசில்லை. புத்தி முக்கியம் என்பது சொல்லியே ஆக வேண்டும்.
குழல் ஒலி குன்றுக்கு அந்தப் பக்கம் கேட்டது. அவர் மலையேறினார். உயரே நின்றார் . ஊர் தெரிந்தது. பசுஞ்சோலை தெரிந்தது. வயல்வெளிகள் தெரிந்தன. சிறிய ஊர். நிறைய நிலம். புகை வீசியது. உணவு வாசனை வீசியது.
பிற்பகல் இங்கே கவளம் கிடைக்கும். மலை இறங்கினார். பாதை திரும்பிய இடத்தில் ஆடுகள் இருந்தன. பத்து வயதுப் பையன் கால் மடித்து அமர்ந்து குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
வலப்பக்கம் கோல் இருந்தது. வலது காது, வலது கண், இரப்பை , கன்னம் குலைந்திருந்தன. நொண்டி தான் இவன். இளம்பிள்ளை வாதம். நரம்புக்கோளாறு. சுற்றிப் பார்த்து இலைகள் பறித்தார்.
அவர் பார்த்ததும் குழல் ஊதுவதை நிறுத்தினான். எழவில்லை.
” உன் பெயர் என்ன தம்பி? ”
” கோமான். ”
” கோமன் இந்த இலைகளை அதுக்கிக் கரைத்து சாப்பிட்டுவிட்டு உடன் உமிழ்நீரை பாதித்த பகுதியில் தடவு. ”
அவன் விழித்தான்.
” நான் கோமான். கோமன் இல்லை. ”
” ஒரு கால் இல்லையே. நீ கோமன் தான். ”
” ஐயா ” அவன் எழுந்தான். தடுமாறினான்.
சட்டென்று கோல் எடுத்து அவனிடம் நீட்டினார். வாங்கித் தாங்கி நின்றான்.
” ம்ம்… சாப்பிடு… ” அவன் மென்றான். தொண்டை கமறியது. அவர் அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உமிழ்நீரால் துவண்ட காலை நீவி விட்டான்.
” உதறு”
உதறினான்.
கால் பூமியில் ‘டக்’ கென்று இடித்தது.
” உதறு ”
உதறினான்.
கால் பூமியில் படிய நின்றது.
” உதறு.”
கால் வலுவு வர உடம்பைத் தாங்கியது.
” ஐயா! தெய்வமே.” அவர் புத்தி சிரித்தது. கர்வத்துடன் சிரித்தது. புத்தியே ஞானம். சகல சௌபாக்கியங்களையும் தரும் ஞானம். வாழ்வின் ஒளிவிளக்கு புத்தி. இருள் அகற்றும் சூரியன் புத்தி. இன்னல் துடைக்கும் குளிர் கரம் புத்தி.
காலில் விழுந்து அழுதவனை ஆசீர்வதித்தார்.
” ஐயா நீங்கள் யார்? ”
” தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? ”
” போ. போய் ஆடுகள் மேய்க்க துவங்கு. என்னைத் தொடராதே போ. ”
அவன் மறுபடி வணங்கினான். அவர் பாதம் பட்ட மண்ணை நெற்றியில் இட்டான். அவர் நடந்தார்.
-தொடரும்