உ
யோகிராம் சுரத்குமார்
அன்னதானம் – பகுதி 2
[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]
“அவர் பசியில் துடிக்கிறாரே. ஏதேனும் செய்யலாகாதா. ஒரு அதிதி நம் வீட்டு வாசலுக்கு வந்து பசியில் துடித்தார் என்றால் அது மிகப்பாவம் ஆயிற்றே. அடுத்த ஜென்மத்தில் நாம் சுகமாக இருக்க முடியாதே. ஏதேனும் செய்யுங்கள்” என்று பெண் புறா இறைஞ்சிற்று.
ஆண் புறா அருகே வந்து வேடனின் தோளில் உட்கார்ந்து கொண்டது
“எனக்கு கொடுப்பதற்கென்று எதுவும் இல்லை. எங்கள் வீடு தேடி நீங்கள் வந்திருக்கிறீர்கள். பசியால் துடிக்கிறீர்கள். எனவே, இன்று இரவு உணவிற்காக நான் என்னையே உங்களுக்கு தியாகம் செய்கிறேன். நீங்கள் என்னை உண்டு இளைப்பாறுங்கள்” என்று சொல்லி வேகமாக மேலே போய் சரக்கென்று தீயில் குதித்தது. வேடன் திகைத்துப் போனான்
“என்ன இது. உன்னை கொல்லும்படி நான் கேட்கவில்லையே. நான் கொலைகாரன் தான். வேட்டையாடுபவன் தான். ஆனால் நீ உயிர்த்தியாகம் செய்து எனக்கு உணவு கொடு என்று நான் சொல்லவில்லையே. இது என்ன தியாகம். உன்னுடைய வீடு ஆலமரம் என்றால் இங்கு வந்த எனக்கு நீ உணவு அளித்து தான் ஆக வேண்டுமா. இதென்ன ஒரு சத்தியம். இதென்ன ஒரு கட்டுப்பாடு” என்று வியந்தான்.
பயந்துபோய் கூண்டைத் திறந்து பெண் புறாவை வெளியே விட்டான். மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்தான்.
மனிதர்கள் கூட செய்ய முடியாத ஒரு தியாகத்தை இங்கு பறவைகள் எவ்வளவு இயல்பாக செய்கின்றன என்று திகைத்தான். அவன் வேட குணங்கள் குறைந்து மென்மையான குணம் பரவ ஆரம்பித்தது. பெண் புறா சிலிர்த்து எழுந்தது.
“என் நாயகன் போய்விட்டான் இனி எனக்கு என்ன வேலை. இன்று இரவு உணவுக்கு என்று தன்னை உயிர் தியாகம் செய்து கொண்டார். நாளை காலை உணவுக்கு என்று என்னை நீங்கள் புசிக்கலாம். நானும் இந்த அக்னியில் புகுந்து உங்களுக்கு உணவாகிறேன்” என்று சொல்லி உயரே எழும்பி சிறகுகளை அடக்கிக்கொண்டு தலைகீழாக வந்து நெருப்பில் புகுந்தது.
வேடன் திகைத்து பின்னால் நகர்ந்து ஆலமரத்தின் மீது சாய்ந்தான்.
‘என்னவிதமான கொலைகள் செய்திருக்கிறேன். எத்தனை விதமான ஜந்துக்களை அழித்திருக்கிறேன். உணவுக்காகவும் உல்லாசத்திற்காக வும் எத்தனை கொலைகள் செய்திருக்கிறேன். எத்தனை விதமாக செய்திருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு புறாக்களும் என் உணவிற்காக இப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனவே. இதுதான் அதிதி உபச்சாரமா. அதிதி உபச்சாரம் தான் மிக உன்னதமா. மற்றவர் பசியோடு இருத்தல் பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாதா. இதுதான் தர்மமா. இதுதான் அன்பா. இதுதான் வேதமா. இதுதான் உத்தமமா’ என்று சொல்லி திகைத்து எழுந்தான்.
வில்லை விட்டு, கத்தியை விட்டு, கூண்டை விட்டு, அவன் மெல்ல ஆலமரம் விட்டு நகர்ந்தான். தீயை வலம் வந்து வெளியேறினான். அவன் மனம் திகைப்பில் கிடந்தது. புறாக்களுக்கு இருக்கின்ற தர்மசிந்தனை கூட எனக்கு இல்லையே என்று துடித்தான். துக்கத்தை தவமாக மாற்றினான். தொலைதூரம் போய் ஒரு சரியான இடத்தில் அமர்ந்து கொண்டான். கண் மூடினான். என்ன நடந்தது என்று யோசித்தான். யோசிப்பில் நிகழ்வின் தத்துவத்தை மறுபடியும் நிகழ்வுக்கு கொண்டு வந்தான். திரும்பத் திரும்ப சிந்தனையில் ஆழ்ந்தான். என்ன? என்ன? என்ன? என்று கேட்டுக்கொண்டான். ஆழ்ந்த தவத்தில் அடங்கினான். அவன்மீது புற்றுமண் படர்ந்தது. செடி கொடிகள் வளர்ந்தன. வெகு நாள் கழித்து அவன் மிகச் சிறந்த ஞானியாக வெளியே வந்தான்.
அன்னதானம் மற்றவருடைய பசியை மட்டுமல்ல, மற்றவருடைய கெட்ட குணங்களை தள்ளி நல்ல குணம் ஆக மாற்றுகிறது. தகுந்த நேரத்தில், தகுந்த நபருக்கு தகுந்த உணவு கொடுக்கும் பொழுது அவர் மிகச் சிறப்பான நிலையை அடைகிறார். மிக உன்னதமாக மாறுகிறார் என்று இந்தக் கதை சொல்கிறது.
ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம்.
[தொடரும் ….]
அன்னதானம் - பகுதி 4 | Writer Balakumaran - பாலகுமாரன்
[…] பகுதி 2 […]