உ
யோகி ராம்சுரத்குமார்
வெங்கண்ணா – பகுதி 1
[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …]
என் தாயே, என் தந்தையே, நீங்கள் சூட்சுமமாக இன்னும் என்னைச் சுற்றியிருப்பீர்கள் அல்லவா? நீங்கள் இறந்து போனாலும், என் மீது அக்கறையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. என் நிலைமையைப் பார்த்தீர்களல்லவா. எந்த ஞானமும் இல்லாமல் வெறும் காட்டுவெளியில் பசுக்களோடு பசுக்களாக அமர்ந்திருக்கிறேன் . என்னை நீங்கள் ஆசிர்வதிக்கவேண்டும். எனக்கு நல்லது நடக்கவேண்டும். உங்களைப் பலமுறை மனசுக்குள் நமஸ்கரிக்கிறேன். அவன் கைகூப்பி வெட்ட வெளியைப் பார்த்துத் தொழுதான்.
தொலைவில் கொடிகள் அசைந்தன. எக்காளம் கேட்டது. சிறுமுரசை ஒற்றையாய் அடித்துக்கொண்டு ஒருவன் முன்னே வந்தான். பின்னே மாட்டுவண்டிகளும் குதிரைகளும் வந்தன.
யாரது அரசரா?
வெங்கண்ணா மற்ற இடைச்சிறுவர்களை எழுப்ப நினைத்தான். ஆனால், அது அரசர் இல்லை என்று காவிக் கொடியைப் பார்த்ததுமே தெரிந்துபோயிற்று. அயர்ந்து தூங்குகிறார்கள் பாவம். விடியற்காலையில் வந்து மாடுகளைத் திரட்டி வந்தபிறகு இங்கு தூங்கமுடியவில்லையெனில் வீட்டிற்குப் போனால் தூங்க முடியாது. வீட்டில் எப்பொழுதும் வேலை இருந்து கொண்டேயிருக்கும். நான் தான் தூங்கவில்லை, அவர்கள் தூக்கத்தைக் கலைப்பானேன்.
அவன் விரைவாக புல்வெளி தாண்டி ஓடினான்.
யார் வருவது, யார் வருவது என்று அந்த ஊர்வலத்து நாயகரைத் தேடினான்.
பச்சைபசேலென்று புல்வெளிகளினூடேயே பசுக்களைத் தாண்டி ஒரு சிறுவன் ஓடிவருவதைப் பார்த்து ஸ்ரீராகவேந்திரர் மெல்லியதாய்ப் புன்முறுவல் செய்தார். அந்தப் பையனின் ஒட்டத்தில் ஒரு துள்ளல் இருந்தது. ஒரு தேடல் இருந்தது.
அவன், குதிரையைப் பார்த்து, மாட்டு வண்டிகளைப் பார்த்து, சீடர்களைப் பார்த்து எல்லாரையும் வணங்கி அந்த ஊர்வலத்தில் மூல புருஷர் யார் என்று தேடுவதையும் உற்று கவனித்தார். அந்தத் தேடலில் உண்மை இருந்தது. அவன் முகத்தில் மென்மை இருந்தது. அவன் நெஞ்சில் வெண்மை இருந்தது.
ஸ்ரீராகவேந்திரரைப் பார்த்ததும் அவன் திடுக்கிட்டு நின்றான் தயங்கி அவர் நடந்த பக்கமே அவரைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
யார் இவர் என்று அடிக்குரலில் விசாரித்தான்.
சீடர்கள் குருவைப் பற்றிச் சொல்லச் சொல்ல கைகூப்பினான். விழுந்து நமஸ்கரித்தான்
மறுபடியும் விழுந்து நமஸ்கரித்தான். அவர் பின்னேயே ஓடினான். அவரைத் தாண்டி ஓடி அவர் கடந்துபோனதும் எழுந்து நின்றான். மறுபடியும் கைகூப்பி அவரைத் தாண்டி ஓடி தொலைவிலிருந்து இன்னும் முகத்தைக் கூர்மையாகப் பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறார், எத்தனை தேஜஸ்வியாக இருக்கிறார், அவர் கண்ணில் சரஸ்வதி தெரிகிறாளே என்று வியந்து மறுபடியும் விழுந்து வணங்கினான்.
அவன் கண்களில் நீர் நிரம்பியது. ஒரு மகானைப் பார்த்த சந்தோஷம், அவன் உதடு துடித்தது. நெஞ்சு விம்மிற்று. ஏனோ அழுகை வந்தது. அவன் கைகூப்பி கண்ணிலிருந்து நீர் வழிய அவரைப் பார்த்தபடி நின்றான். அவன் கண்களிலிருந்து நீர் வருவதைப் பார்த்து ஸ்ரீராகவேந்திரர் அவனுக்கருகே நின்றார்.
“வாப்பா… வா” என்று அழைத்தார்.
அது மிகப்பெரிய அழைப்பு. அவர் வாஞ்சை அவன் மனதைக் குழைத்தது. அப்படிப் பிரியமாய் வெங்கண்ணாவை யாரும் இதுவரை அருகே அழைத்ததேயில்லை.
வெங்கண்ணா அருகே போனான்.
“ஏன் அழுகிறாய்?” இனிமையான குரலில் மிகுந்த பாசத்தோடு ஸ்ரீராகவேந்திரர் அவனை வினவினார்.
அவன் தன் கதையை வேகமாகச் சொன்னான்.
தந்தை இறந்ததும், தாய்மாமன் வளர்த்ததும், அவர் செய்கின்ற கொடுமையும், படிக்க வேண்டுமென்ற ஆவலும், அவர் தன்னை மாடுமேய்க்க அனுப்பியதும், மாடு மேய்க்கின்ற இடத்தில் உடம்பின்மீது கருநாகம் படுத்திருந்ததும், தாய்மாமன் அழைத்ததும், அவர் மற்றவர்களை அனுப்பி விட்டு தனியே போட்டு அடித்ததும், இனிமேல் பகலில் உறங்கக்கூடாது என்று சொல்லியதும் என்று ஒரே மூச்சில் வேகமாகச் சொன்னான்.
எப்படித் தன்னால் இவ்வளவு வேகமாகச் சொல்ல முடிந்தது என்று வியந்தான். வியந்தபடியே அவரைப் பார்த்தான்.
உத்தமமான மகான்களைச் சந்திக்கிறவர்கள் மனம் தானாகத் திறந்துகொள்ளும். பேச்சு தங்குதடையின்றி விழும். மனம் திறப்பதற்கும், தங்கு தடையின்றி தன்னைப் பற்றிப் பேசுவதற்கும் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
வெங்கண்ணாவின் பூர்வஜென்ம புண்ணியம் அவனை ஒரு மகானுக்கருகில் வரவழைத்தது.
“கவலைப்படாதே. எப்பொழுது கருநாகம் உன்னைத் தீண்டாமல் உன்மீது படமெடுத்து ஆடியதோ நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகிறாய். பாம்பு மனிதர்களை எளிதில் தொடாது. ஒரு நாகம் உன்மீது அமர்ந்ததிலிருந்து ஸ்ரீஹரியின் ஆசீர்வாதம் நிரம்ப உண்டு என்பதே பொருள். என்ன பிரச்சினை வந்தாலும், என்னை நினைத்துக்கொள். என் பெயரை இடைவிடாது சொல்லிவா. இந்தா வாங்கிக் கொள்.”
அவன் கையில் மங்களாட்சதையைக் கொடுத்தார்.
“என்னுடைய நண்பர்கள் அங்கே அந்தத் தோப்புக்குள் தூங்குகிறார்கள். மிகுந்த களைப்போடு இருக்கிறார்கள். அதனால் அவர்களை எழுப்பாது வந்துவிட்டேன். அவர்களையும் நீங்கள் ஆசீர்வாதம் செய்யவேண்டும். அவர்களுக்கும் நீங்கள் மங்களாட்சதை தரவேண்டும்.”
அவன் மறுபடியும் கைநீட்டினான். அவர் சிரித்தபடி மங்களாட்சதையைக் கையில் கொடுத்தார்.
நல்ல மனம்தான் தன்னை மட்டும் சிந்திக்காது தன்னோடு இருப்பவரையும் சேர்த்து சிந்திக்கும். அவர்களும் நல்லபடியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும்.
இந்தச் சிறுவன் மனது நல்ல மனது, புத்தி உயர்ந்த புத்தி என்று அந்த மகானுக்குத் தெரிந்துபோயிற்று. மிகுந்த கருவணயோடு அவன் கண்களை உற்றுப்பார்த்தார். பார்வை அவனை மலர்த்தியது. அவர் மூச்சுக்காற்று அவனைத் தொட்டது. மனம் மேலும் குழைந்தது.
அவன் மீண்டும் விழுந்து வணங்கினான். “விடை பெறுகிறேன்” என்று சொன்னான்.
“அவருடைய பெயரை எப்படிச் சொல்வது?” அவருக்கருகே இருந்தச் சீடர்கள் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
மகான் ஸ்ரீராகவேந்திரர் தொடர்ந்து ஸ்ரீசைலம் நோக்கி நிதானமாக நடக்கத் துவங்கினார். ஒரு சீடரை சற்று நிறுத்தி அவன் பலமுறை ஸ்ரீராகவேந்திரரை எப்படி ஸ்மரிப்பது என்பதைக் கேட்டுக் கொண்டான். சீடரையும் விழுந்து வணங்கினான்.
ஸ்ரீராகவேந்திரர் நின்ற இடத்தில் மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான்.
துள்ளியபடி அவனுடைய நண்பர்களை நோக்கி ஓடினான். நடந்ததைச் சொன்னான்.
“நிஜமாகவா, ஊர்வலம் போயிற்றா? காவிக்கொடியா, குதிரையா, மகான் ஸ்ரீராகவேந்திரரா? என்ன, நன்றாகத் தூங்கிவிட்டு கனவுகண்டிருக்கிறாய் அல்லவா, வீட்டிலிருந்து மஞ்சள் தோய்த்த அரிசியை இடுப்பில் முடிந்துகொண்டு இப்பொழுதுதான் வாங்கிவந்ததாகக் கதையடிக்கிறாய் அல்லவா, பகலில் தூங்காதே என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். தூங்கிக் கனவு காண்கிறாயே, உன்னுடைய தாய்மாமனிடம் சொன்னால் முதுகைப் பிளந்து விடுவார்.” என்று நண்பர்கள் கேலி செய்ய, வெங்கண்ணா அமைதியானான்.
நல்ல குருவிடம் எல்லாராலும் எளிதில்போய் சேர்ந்து விட முடியாது. குருவிடம் வேறு யாரும் அழைத்துப் போவதாகச் சொன்னாலும், ஏன் குருவே அழைத்தாலும் அவரிடம் போய் பூர்வஜென்ம புண்ணியம் இல்லாமல் ஒட்ட முடியாது. மற்ற சிறுவர்களுக்கு இல்லாத புண்ணியம் வெங்கண்ணாவிடம் இருந்தது. மனம், ஸ்ரீராகவேந்திரரையே, அந்த மலர்ந்த முகத்தையே, அமைதியான விழிகளையே, அந்த நடையையே, சுந்தரமான மேனியையே மறுபடி மறுபடி நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. அவருடைய பெயரை ஸ்மரிக்கலானான்.
ஸ்ரீராகவேந்திரர் அவனுடைய உள்ளத்தில் சம்மண மிட்டு அமர்ந்தார். நெஞ்சுக்குள் ஒரு குரு குடியேறுவது பெரிய பாக்கியம்.
— தொடரும்
Post your comment