விநாயகர் வடிவத்தில் என்ன சிறப்பு?

அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது.

ஓம் என்பது என்ன?

அ என்ற எழுத்தினுடைய நீட்டலும் உ என்ற எழுத்தினுடைய நீட்டலும் ம என்ற எழுத்தினுடைய அழுத்தமும் ஒன்று சேரக் கிடைப்பது ஓம்.

அ என்ற ஒலி சிவம். அது அசையாது எல்லாவற்றையும் ஏற்கின்ற ஒரு குணம். உ என்பது ஒன்றுக்குள் புகுந்து அதற்குள் உயிர்ப்பை ஏற்படுத்துகின்ற தன்மை.

ம என்பது இந்த இரண்டும் ஒன்று சேர்ந்ததனால் ஏற்பட்டதினுடைய சக்தி. எல்லாம் கலந்து இருப்பதினுடைய வரிவடிவம்தான் விநாயகர்.

அதாவது சிவனும், சக்தியும் ஒன்றுகூடி வெளிப்பட்ட அந்த சக்தியின் வரிவடிவம் இந்த மூர்த்தி.

எதற்காக வரிவடிவம்?

சிறு வயதில் கணிதம் கற்பிக்கும்போது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வார்கள். எது ஒன்று எப்படி இரண்டு என்று குழந்தை விழிக்கும்.

ஒரு புளியங்கொட்டையும் அதோடு இன்னொரு புளியங்கொட்டையும் சேர்ந்தால் இரண்டு புளியங்கொட்டைகள் ஆகின்றன அல்லவா என்று ஆசிரியர் விளக்குவார்.

ஐந்து புளியங்கொட்டைகளும் வேறு ஐந்து புளியங்கொட்டைகளும் சேர்ந்தால், எத்தனை இருக்கிறது எண்ணு என்று குழந்தையிடம் சொல்ல, அது பத்து என்று எண்ணி சந்தோஷப்படும்.

மனதால் எண்ணுவதற்கு, மனதால் கூட்டுவதற்கு உபயோகமாக புளியங்கொட்டைகள் இருப்பது போல, வரி வடிவங்கள் இறை என்ற விஷயத்தை மனதுக்குள் நினைப்பதற்கு உதவுகின்றன.

வரிவடிவைப் பார்க்கும் போது பிரணவ ஒலி ஞாபகம் வரும். பிரணவ ஒலி உள்ளுக்குள் எழும்பும்போது இந்த வரிவடிவம் தோன்றும்.

சனாதன தர்மத்தில் மக்களுக்குக் கடவுள் தன்மையைப் புரிய வைக்க பல்வேறு விதமான முயற்சிகள் ஏற்பட்டு, அதில் மிகச் சரியான முயற்சி என்று உருவ வழிபாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பிரபஞ்ச சக்தியின் இயக்க வடிவம் விநாயகர். உள்ளாழ்ந்த அமைதி, மிகுந்த கம்பீரம், தெள்ளிய விழிப்புணர்வு. இம்மூன்றையும் விநாயகரை உற்றுப் பார்க்கும்போது நம்மால் உணர முடியும்.

இதுதான் சித்தர்களின் நிலை. மனிதர்களில் மிக உயர்ந்தோரின் குணம்.

விநாயக புராணங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

அடக்கம் போல இருக்கும் அகங்காரத்தை, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையை, தானே எல்லாமும் செய்து முடித்துவிடுவேன் என்கிற இறுமாப்பை, உடைத்தெறிகிற கதைகளைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது.

கர்வப்படுபவர் சிவனாக இருந்தாலும், சிவனுக்குத் தாசனாக இருந்தாலும், உமையாக இருந்தாலும், அது பிரபஞ்ச சக்தி இல்லையெனில்… அந்த சக்தியைக் குறித்த நினைவு இல்லையெனில் எல்லாம் பாழாகும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.