பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

” டே… எழுந்திருடா… ” புன்னைவனம் சப்தம் போட்டார்.

ஒரு லேசான துர்வாசனை மூக்கை தாக்கியது. மறுபடியும் புன்னைவனம் குரல் கொடுக்க, அவன் தலை தூக்கி, மறுபடி “பொத்”தென்று படுத்தான் இருமத் துவங்கினான் அந்த இருமல் சத்தம் மிக மோசமாக இருந்தது.

” என்னப்பா செய்யுது” புன்னைவனம் கேட்டார்.

அவன் பதில் சொன்னது எங்கள் இருவருக்கும் புரியவில்லை.

” ஆட்டோ கூட்டிட்டு வரட்டுமா. ஆஸ்பத்திரி போயிடறியா.” அவனுக்கு அருகே உட்கார்ந்து கேட்டார்.

அவன் மூச்சு வாங்குவது அதிகமாயிற்று.

” புன்னைவனம் மேல் மூச்சு வாங்குதய்யா ” நான் சொன்னேன்.

” என்ன அதனால. ”

” இவன் ஆஸ்பத்திரிக்கு போயே ஆகணும். ”

” முருகேசன் எழுந்து உட்கார்ந்துக்க. ஆஸ்பத்திரிக்கு போயிடலாம். புன்னைவனம் அவனை எழுப்பி உட்கார வைத்தார். அவன் மிகக் கொடுமையாக இரும ஆரம்பித்தான். உடம்பு நாலாபுறமும் அலைந்தது.

” வேணாம். வேணாம். படுத்துக்க. ”

புன்னைவனம் மறுபடி அவனை படுக்க வைத்தார்.

” இப்படியே விட்ருங்க. இப்படியே விட்ருங்க. நான் போயிடறேன் ” அவன் பேசியதற்கு பல்வேறு அர்த்தங்கள் தொனித்தன.

” டீ சாப்பிடறியா. ” புன்னைவனம் கேட்டார். அவன் சரி என்று தலை அசைத்தான். நான் வேட்டியை மடித்துக் கொண்டு வசந்தா டீ பாருக்கு வேகமாக நடந்தேன். டபரா டம்ளரில் டீ கேட்டேன். விஷயம் சொன்னேன்.

எடுத்துக் கொண்டு கடை வாசலுக்கு வந்தேன். நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

பிராண சப்தம் வேகமாயும், துரிதமாயும் கேட்டது. நான் டீயை நன்கு ஆற்றி, அவனை சற்று இடக்கையால் தூக்கிக் கொண்டு, வலக்கையால் டீ கொடுத்தேன்.

முழு டீயையும் மிக நிதானமாக குடித்தான். டீ கொடுக்கும் போதே என் மனதுக்குள் ராமநாமம் ஓடியது. அவன் டீ குடித்த பிறகு அதை சத்தமாக செல்லத் தோன்றியது.

புன்னைவனம் டம்ளரை திருப்பித்தர போய்விட்டார். அவர் முகம் கலவரத்தில் ஆழ்ந்திருந்தது.

முருகேசன் என் வேட்டியை லேசாக பிடித்து இழுத்தான். நான் குனிந்து என்ன என்று கேட்டேன்.

” இன்னும் கொஞ்சம் சத்தமாக ” கட்டளை இடுவது போல் சொன்னான்.

” ஓம் ஸ்ரீராம், ஸ்ரீராம் ஜெய, ஜெயராம் ” நான் கை தட்டலுடன் பாடினேன். புன்னைவனம் அருகே வந்து நின்றார்.

” என்னய்யா பண்றீரு ”

” அவன் சத்தம் போட்டு பாடச் சொன்னான்.”

” அதெல்லாம் ஒண்ணும் வேணாம்யா ” அவர் குரலில் கலவரம் இருந்தது.

” இருக்கட்டும். அவன் ஆசைப்பட்டு கேட்டான். ”

” அவன் தண்ணியில இருக்கான்யா. நாளைக்கு காலையில எழுந்து வண்டி ஓட்டுவான். ”

” எனக்கு ஒண்ணும் அப்படி தெரியல.” நான் சொல்லி முடித்தவுடன் அவன் மறுபடி இருமினான். என்னை கை நீட்டி அருகே அழைத்தான். சட்டென்று என் வலது கையை பற்றிக் கொண்டான். தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.

” வேணாம் போயிடலாம். வாய்யா ” புன்னைவனம் பயந்தார்.

” இப்ப எப்படி போறது ”

” உதறிட்டு வா ” புன்னைவனம் கட்டளையிட்டார். நான் தலையாட்டி மறுத்தேன். என்னை மீறி நான் ராம நாமம் சொல்லத் துவங்கினேன்.

” இது போலீஸ் கேசாகும். இது தேவையில்லாத வம்பு. நான் கிளம்பறேன்.”

யாரோ விரட்டியது போல, அந்த இடத்தை விட்டு வேகமாகப் போனார்.

என் கை முருகேசன் கைக்குள் சிக்கியிருந்தது. முருகேசன் அடங்குவது நன்கு தெரிந்தது. நான் மெல்லிய குரலில் ராமநாமம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

முருகேசன் பிடி சட்டென்று தளர்ந்தது. கை கனத்தது. நீர் குடிக்கும் சத்தம் போல தொண்டையில் இருந்து ஒரு சத்தம் வந்தது.

முருகேசன் மரணம் அடைந்தான். நான் கையை எடுத்துக் கொண்டு அவன் முன்பு கை கூப்பினேன்.

” நண்பனே, நல்லபடி போய் வா ” என்று முணுமுணுத்தேன். சாலையில் எவரும் இல்லை. மரம் கூட அசையவில்லை. ஒரு லாரி வேகமாய் கடந்து போயிற்று. வீட்டிக்கு போவது நலம் என்று தோன்றியது.

நான் வீடு நோக்கி நடந்தேன். முருகேசன் சடலத்தில் இருந்து இருபது அடி தொலைவு நடந்த பிறகு யாரோ என் தோளில் கை வைத்தார்கள்.

நான் திகைத்துப் போய் நின்றேன். அந்த தொடல் இதுவரை அனுபவித்திராத தொடல், உடல் ரோமங்கள் எழுந்து நின்றன. திரும்பினேன். எவரும் இல்லை.

மறுபடி வீடு நோக்கி நடந்த போது, யாரோ கூடவே வந்தார்கள்.

” ரொம்ப நன்றி சார் ” ஒரு உணர்வு பேசியது.

” தினம் ராத்திரி வாங்க சார் ஏதாவது பேசிக்கிட்டு இருப்போம். ” தொடர்ந்து அந்த உணர்வு சொல்லியது. நான் பதில் பேசாது நகர்ந்தேன்.

” நான் எப்பவும் இருப்பேன் சார். தினம் வாங்க சார் எதுனா பேசுவோம். ”

அது முருகேசன் என்று எனக்கு உணர்த்தப்பட்டது.

நான் வீட்டிற்குள் நுழைய, நான் மறுபடி தனியானது தெரிந்தது. அதற்குப் பிறகு நான் கடைவாசலில் உட்கார்ந்து பேசுவதை விட்டு விட்டேன். புன்னைவனம் நான் கோபித்துக் கொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு பரிசோதனை செய்வதில் பயம் என்பதை அவரிடம் நான் விளக்க விரும்பவில்லை.

-முற்றும்