அன்னதானம் என்பது மனித நாகரீகத்தின் உச்சம்.

வேறெந்த உயிரும் உணவு தானம் செய்வதில்லை. கூடித் தின்னும். தானம் வேறு.

அன்னதான சிவன் பற்றி சொல்வார்கள். பொருள் தேடி ஏன் யாசகம் வாங்கி தினம் அன்னதானம். மனிதர்களில் சிலர் இதற்கிடையில் நீர்ப் பந்தல். சொத்து வித்து சிவன் சன்னதியில் சாம்பிராணி போட்டது. அள்ளிக் கொடுக்கிற புத்தி. என்னுதில்லை என்கிற எண்ணம். கடை வழிக்கும் வாராது என்று தெரிந்த மனம்.

வடித்து ஏதோ கொட்டுவதல்ல…. முழங்கை நெய் வழிய கூடியிருந்த குளிர்ந்து உண்ணல். மன ஒருமைப்பாடு.

கடவுளே கடவுளே என்ன உயரமையா மனிதன்.

மயிலை அறுபத்து மூவரில் முப்பது நாற்பது பண்டங்கள் உண்ணத்தருவோம் பில்டர் காஃபி உட்பட. மூன்று மணி நேர விநியோகம் மூவாயிரம் பேர்க்கு. இது தருமம். தலைகாக்கும் தருமம். ஈயாதவன் செல்வம் இல்லாதவன். செல்வம் வந்து சேராதவன். விடியாதவன். தாரித்யன்

கொடுத்தால் கிடைக்கும் என் அனுபவம்

கொத்து வேர்க்கடலை உப்பிட்டு கொடு போதும் உயர நிறுத்தும்.

ஐயோ திண்ணூட்டு போறியே என்பது உன் தகனத்துக்குதவாது.

எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம்.

தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ செலவாயிருச்சு என்பது நிர்மூடம். தானம் தந்தவர் அத்தனை பேருக்கும் பல மடங்கு சுகம் திரும்ப வரும்.

நாயன்மார்கள் அத்தனை பேரும் அள்ளித் தந்தவர்களே. தன்னை ஈந்தவர்களே. அவர்கள் உலா வருகையில் அவர்கள் பார்க்க வழங்குவது தனி சுகம். இந்த குணம் வளரும், இந்த மனம் தொடரும்.
மயிலை ஒரு புண்ய பூமி.

மதம் தாண்டிய ஒரு பொதுமறை (திருக்குறள்) தோன்றிய பூமி. இந்தக் கோலாகலங்களை எல்லாம் பாராது போதியோ பூம்பாவாய் என்று திருஞான சம்பந்தர் பாடி இறந்தவரை உயிர்ப்பித்த இடம்.

கருணை நிலவு பொழி வதன மதியன் எங்கள் கபாலி வாழும் ஊர். கற்பக வல்லி பொற்பதம் பணிய நற்கதி அருளும் கோயில்.

பேசிப் பேசி பொழுதை அறுக்கும் மனிதரிடையே பேசாதே மெளனம் காத்த வாயிலா நாயனார் பிறந்த இடம்.

வருக வருக மயிலைக்கு வருக.

(21 மார்ச் 2016 முகநூல் பதிவிலிருந்து)