கேள்வி: வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையைக் கேட்கவில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன். எனக்கு விளக்குவீர்களா?

பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன். சிறிய ஆனால் கூரிய கண்கள். தொலைதூரம் பார்க்கும் திறன். மிகப் பெரிய தலை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன்.

அதுமட்டுமில்லாது வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்த தும்பிக்கை. நீண்ட மூச்சை உள்ளிழுத்து மிக நீளமாக வெளியே விடுவது என்கிற விஷயம் யானைக்கு மட்டுமே உண்டு.

சிறிய அளவில் மூச்சுகள் இழுத்து வெளியிடுவதில் ஆயுசு குறைவும், நோயும் ஏற்படும்.

ஆனால் துதிக்கை நீளம் மூச்சை இழுத்து நுரையீரலுக்குப் போக வேண்டியிருப்பதால் யானை இயல்பாகவே நீளமாக மூச்சை இழுத்தும், நிதானமாக மூச்சை விடுவதும் செய்ய வேண்டியிருக்கிறது.

இதனாலேயே மற்ற மிருகங்களை விட இது அதிக காலம் நோயின்றியும் வாழ்கிறது.

மறுபடியும் சொல்கிறேன். நீண்ட வாழ்க்கை அதற்கான நீண்ட சுவாசம். அதனால் ஏற்படும் கூர்மையான புத்தி. தொலை தூரப்பார்வை. அந்த அமைதியால் விளையும் கேட்கும் திறன். இவையே கணபதி.

இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரங்கள். இந்தத் தூண்கள் மீதே கௌரவம், புகழ், பணம் போன்றவை விதானங்களாக கட்டப் பெறுகின்றன என்பதை உணர்த்தவே விநாயகர் உருவம்.

உங்களுக்கு இப்பொழுது வினாயகரைப் புரிகிறதா. இந்து மதத்தில் ஒரு முக்கியமான விஷயம், உங்களை கட்டளையிட்டு விஷயம் செய்யச் சொல்வார்கள்.

வினாயகரை வணங்கு. யானைத் தலையுடைய பொம்மையை வணங்கு என்று சொல்வார்கள். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏன் யானைத் தலை என்று நீங்கள் கேட்க வேண்டும்.

ஏன் உருவ வழிபாடு என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடவுளை அடைய மிகச் சிறந்த வழி எது என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தலைப்பட வேண்டும்.

உங்களுக்குள் நீங்களாகவே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையை வளர்ப்பதே இந்து மதம்.