துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும் , சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக் கூடாது என்று பேசப்படுவது அல்ல. துன்பம் வரும்போதும் துவளாது இருக்க தர்மம் உதவி செய்யும்.

“விதுரா”

திருதராஷ்டிரன் அலறினான்.

உடனே விதுரரை கூப்பிடு. மனதும் வயிறும் கலங்கும்படியான வார்த்தைகளை சஞ்சயன் சொல்லிவிட்டுப் போகிறான். என்னால் இனி உறங்க முடியாது. விதுரனை அழைத்து வந்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். விதுரன் தர்மத்தின் பக்கம் நிற்பவன். அவனால் எனக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்ல முடியும். உடனே விதுரனை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

விதுரர் விரைவாக வந்து சேர்ந்தார்.

“விதுரா, அருமை சகோதரனே, எனக்கு மனம் கலங்கியிருக்கிறது. தூங்க முடியவில்லை. என்ன முயற்சித்தாலும் உறக்கம் வரவில்லை. மாறாக இடையறாத ஒரு பதட்டத்தில் சிக்கித் தவிக்கிறேன். என் வம்சத்தினர் வாழ்வு என்ன ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்ற காரணம் புரியவில்லை. இன்றைய சூழ்நிலையை ஆராய்ந்து தெளிவாகப் பேசு . இம்மாதிரி நேரத்தில் ஒரு அரசன் என்ன செய்ய வேண்டுமென்று சொல். யார் பக்கம் நிற்க வேண்டும் என்று தெரிவி. வந்த அந்தணரும் சண்டையைச் சொல்ல, போன சஞ்சயனும் யுத்தம் பற்றிய செய்தியோடு வர, என் மனதில் கலக்கம் அதிகமாகிறது. அழிவு வந்துவிட்டதோ என்றுத் தோன்றுகிறது. நான் இப்போது செய்ய வேண்டிய தர்மத்தைச் சொல். நீ அறிவுமிக்கவன். ஞானி. என் மீது அக்கறையுள்ளவன். துன்பத்தில் இருக்கின்ற என்னை வழிநடத்து.”

திருதராஷ்டிரன் பணிவாகக் கை கூப்பினான்.

விதுரன் யோசித்து பேச ஆரம்பித்தார்.

இந்தப் பகுதிக்கு விதுர நீதி என்று பெயர். சுருக்கமாகவும், தெளிவாகவும் வாழ்வின் தர்மத்தைப் பற்றி விதுர நீதி சொல்கிறது. அரசனுக்கு மட்டுமல்ல, சகலருக்கும் உரித்தானது. மகாபாரதத்தின் சிறப்பு பகவத்கீதை. பகவத்கீதை தங்கப் பதக்கம் என்றால் விதுர நீதி வெள்ளிப் பதக்கம். பலமுறை பலமுறை படிக்க வேண்டிய விஷயம்.

திருதராஷ்டிரனை நோக்கி பணிவாகவும் , உறுதியாகவும் விதுரர் பேசத் துவங்கினார்.