உ
யோகிராம் சுரத்குமார்
வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 3
“விதுரா,”
தாழ்ந்த குரலில் இரகசியம் போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான்.
“வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி உன்னை இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்? ”
மன்னனின் குரலில் அறிய வேண்டும் என்ற அக்கறை இருந்தது. விதுரன் நெகிழ்ந்தான்.
“மன்னா, ஐந்து கூரிய வாட்கள் மனிதனின் ஆயுசை வெட்டுகின்றன. மிகுந்த கர்வம், அதிகம் பேசுதல், தியாகமின்மை, தன் வயிறு வளர்க்கும் கவலை, சினேக துரோகம் என்ற ஐந்து கூரிய வாட்கள் சரீரம் உடையவரின் ஆயுசை வெட்டுகின்றன. குருவின் மனைவியோடு சேருபவன், மது அருந்துபவன், சலனமடைந்தவனை இம்சிப்பவன் இவர்கள் பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு சமானமானவர்கள். இவர்களுடைய நட்பு ஏற்படுமானால் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பிராயச்சித்தம் என்பது மறுபடி இம்மாதிரி சங்கம் நேரக்கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பது. ஏற்பட்டதற்கு வருந்துவது.
பெரியவர்களின் ஆணையை ஏற்பவன். நீதி அறிந்தவன், வள்ளல், பூஜை செய்து சமர்பித்த உணவை உண்பவன், இம்சை செய்யாதவன், தவறான செயல்களிலிருந்து விலகியிருப்பவன், நன்றியுள்ளவன், சத்தியம் சொல்பவன், மென்மையான இயல்புடைய பண்டிதன் சொர்கத்திற்கு செல்கிறார்கள்.
எப்பொழுதும் அன்பாக பேசுபவர் கிடைக்கலாம். ஆனால் பிரியமே இல்லாமல் அன்பாக பேசுகிறானா என்று ஆராய வேண்டும். நடிப்பவரிடமிருந்து உடனே விலகி விட வேண்டும்.
எந்த வேலையாள் அதிகம் தெரியும் என்று சொல்கிறானோ, எஜமானனை விட கெட்டிக்காரன் என்று கருதிக் கொள்கிறானோ, தன்னுடைய அறிவு மிகக் கூர்மையானது என்ற கர்வம் கொள்கிறானோ அவனை உடனே விலக்கி விட வேண்டும். உலகில் மிகப் பெரிய கோள்மூட்டி அவன்தான்.
வாழ்வில் அக்கறை உள்ள மனிதன் ஒருபொழுதும் அகாலத்தில் ஒருவன் வீட்டிற்கு செல்லக் கூடாது. இரவில் மறைந்து நிற்கக் கூடாது. எஜமானன் விரும்பும் பெண்ணை அடைய முயற்சி செய்யக் கூடாது. பணியாளன் முகத்திற்கு எதிரே நான் உன்னை நம்பவில்லை என்று சொல்லக் கூடாது. ஒரு பாசாங்கோடு அவனை ஆதரித்து வெளியேற்றிவிட வேண்டும். ஏனெனில் இவனும் பிறரிடம் போய் எஜமானனைப் பற்றி கோள் சொல்பவன்.
வாரி வழங்குகின்ற மன்னன், விபச்சாரம் செய்யும் பெண், அரசாங்க சிப்பந்தி, புதல்வன், சகோதரன், சிறிய குழந்தையுடைய விதவை, படை வீரன், அதிகாரம் பிடுங்கப் பட்டவன் ஆகியவனோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது.
ஒரு மனிதன் தினந்தோறும் நீராட வேண்டும். பலம், ரூபம், இனிமையான குரல், பிரகாசமான வண்ணம், மென்மை, நறுமணம், புனிதம், அழகு, சுகுமாரத் தன்மை, அழகிய பெண்கள் என்று பத்து லாபங்கள் கிடைக்கின்றன. அதேபோல் ஒருவன் தினந்தோறும் சிறிதளவே உண்ண வேண்டும். ஆரோக்கியம், ஆயுள், பலம், சுகம், சத்தான உற்பத்தி, நல்ல தூக்கம் என்று உள்ளவனுக்கு சிறிய உணவு காரணமாகின்றன.
கடமையைச் செய்யாதவன், அதிகம் உண்பவன், சகலரிடமும் பகை கொள்பவன், மாயாவி, குரூரமானவன், தேச கால அறிவற்றவன், நல்லவன் போல் வேடம் தரிப்பவன் ஆகியவனை ஒருபொழுதும் வீட்டில் தங்க விடக் கூடாது. கவலையளிக்கும் தொழிலை செய்பவர்கள், அதிக குற்றம் செய்பவர்கள், எப்பொழுதும் பொய் பேசுபவர்கள், நிலையற்ற பக்தியுடையவர்கள், அன்பற்றவர்கள், தன்னை கெட்டிக்காரனாக கருதுபவர்கள் ஆகியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது.
புதல்வர்களை தோற்றுவித்து அவர்களை கடன் பாரத்திலிருந்து விடுவித்து ஏதேனும் ஒரு வாழ்க்கைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். கன்னிகைகளை தகுந்த இடத்தில் கம்பீரமாக திருமணம் செய்விக்க வேண்டும். பிறகு காட்டிற்குப் போய் முனிவர்கள் போல வாழ வேண்டும். எது பிராணிகள் அனைத்திற்கும் நன்மை செய்வதோ, எது தனக்கு சுகம் அளிப்பதோ அதை ஈஸ்வர அர்பணமாக செய்ய வேண்டும்.
புரியவில்லையா, உன் உணவு வெறுமே வாங்கியதாக இருக்கக் கூடாது. அது தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்டு அது இப்பொழுது வலிமை மிக்கது என்ற எண்ணத்தோடு உண்ண வேண்டும். மனிதனுடைய சித்திகள் அனைத்திற்கும் உணவை ஈஸ்வர அர்ப்பணமாக செய்வதிலிருந்து துவங்கும்.
எவன் செல்வத்தின் பூரண சுகத்தை விரும்புகின்றானோ அவன் தர்மத்தின் படி நடக்க வேண்டும். அமுதத்திலிருந்து சத்து விலகாதது போல தர்மத்திலிருந்து நல்லது விலகுவதே இல்லை. யாருடைய அறிவு பாவத்திலிருந்து விலகி நன்மையை நாடுகிறதோ அவனுக்கு தர்மம் புலப்படும். இன்னும் சூட்சமமாகச் சொல்லப் போனால் எவன் கோபத்திலும் மகிழ்ச்சியிலும் தன்னுடைய வேகத்தை மட்டுப்படுத்தி வைக்கிறானோ அவனுக்கு எல்லாமும் வசப்படும். அவன் எந்த ஆபத்திலும் மயக்கமடைவதிலிலை. அவனிடம் ராஜ்ய லகூஷ்மி அடைக்கலம் புகுகிறாள்.
-தொடரும்
A R KRISHNAKUMAR
அற்புதமான கருத்துக்கள்