[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …]

கர்வம் கிழிக்கப்படுவதற்கு முன்பு குருவால் வேட்டிகள் கிழிக்கப்பட்டன. பகற்பொழுதில் வேட்டிக்கு காவல் இருக்க வேண்டும் என்று அவர்கள் முறை போட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு நீ காவல், நாளைக்கு நான் காவல் என்று முற்றத்து வெயிலில் பருப்பு குவியல் போல் உட்கார்ந்து கொண்டார்கள். வேட்டிகளைக் காவல் காத்தார்கள்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, வேட்டி கிழியலின் வேதனை அடங்கிய பிறகு ராமானுஜர் கூவியவர்களே அருகே அழைத்தார். “மடத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஆளாளுக்கு தகுந்த யோசனைகள் சொன்னார்கள்.

“தோழர்களிடம் போய் கையேந்துவதில் எனக்கு விருப்பமில்லை. இங்குள்ளோரிடம் அடிக்கடி போய் காசு கேட்பதும் சரியாகப்படவில்லை. இதற்கு உடனடியாக ஒரு தீர்வு தான் இருக்கிறது” என்று ஸ்ரீ ராமானுஜர் அடிக்குரலில் பேசினார். குரு தாழ்ந்த குரலில் பேசியதும் சீடர்கள் நெருங்கி உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களும் ரகசியமாக என்ன வழி இருக்கிறது என்று குருவை கேட்டார்கள்.

“வில்லிதாசனின் மனைவி பொன்னாச்சியின் கால்தண்டைகளை பார்த்திருக்கிறீர்களா? நவரத்தின மணிகள் அணிந்த கால் சதங்கை அது. பரம்பரை பரம்பரையாக அவள் போட்டுக் கொண்டிருப்பது, அந்த தண்டை இரண்டையும் விற்று வந்தால், பல மாதங்களுக்கு நம் மடத்திற்கு உணவுப் பஞ்சம் ஏற்படாது. அவள் தாழ்ந்த ஜாதி. அவளிடம் போய் பிராமணர்களான உங்களை கையேந்தி, பிச்சை எடுக்க அனுமதிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை.”

வேறு என்ன வழி இருக்கிறது என்று யோசித்தார்கள். “கழட்டி கொடுத்துவிடு என்று நீங்கள் உத்தரவிட்டால் கொடுத்து விடுவாளே!” ஒரு பிராமணன் சொன்னான்.

“ஆனால் அதுவும் யாசகம் போலதானே? அப்படி செய்யலாமா? மடத்துக்கு காசில்லை, கழட்டிக் கொடு என்று நீ கேட்பாயா?”

அவன் மாட்டேன் என்று சொல்லி விட்டான். “அதுதான் முறை. ஒரு தாசியிடம் போய் கால் சிலம்பை கழட்டி கொடு என்று கேட்டு, அவள் ஊர்முழுக்க உன்னைப் பற்றிச் சொன்னால் நன்றாகவா இருக்கும்? தாசிக்கு நீ கொடுப்பது போக, நீ தாசியிடம் இருந்து வாங்கினால் உன் குலத்திற்கு என்ன மதிப்பு?” அவர் கேட்க, அவன் தலை குனிந்து கொண்டான்.

“பிறகு என்னதான் வழி?” மற்றொருவர் கேட்டார்.

“பேசாமல் தாசி பொன்னாச்சி தூங்குகிற போது, திருடிக் கொண்டு வந்து விடுங்கள்.”

“அது ஒன்றும் கடினம் இல்லை. திருடி விடலாம். பக்குவமாக நுழைந்து, பக்குவமாக தண்டையை வளைத்து இழுத்து, காலில் இருந்து பிரித்து எடுத்துவிடலாம். ஆனால்…”

“என்ன ஆனால்…?” திகழ் சக்கரத்தார் கேட்டார்.

“வில்லிதாசன் இருக்கிறானே… அவன் கண்ணில் அகப்பட்டால் துவம்சம் செய்து விடுவானே? அவனுடைய ஒரு அறை கூட தாங்க முடியாதே? யானையை அறைந்து கதிகலக்கியவனல்லவா? என்னை அறைந்தால் என் பிராணன் போய் விடுமே?”

“ஆமாம். அதுவும் வாஸ்தவம்தான்.” குருவும் கவலைப்பட்டார். “ஒன்று செய்கிறேன்.”

“என்ன?” எல்லோரும் பாய்ந்தார்கள்.

“வில்லிதாசனை ஏதாவது சொல்லி இங்கே நிறுத்தி விடுகிறேன். இரவோடு இரவாக நீங்கள் பொன்னாச்சி இருக்கும் இடத்திற்குப் போய் மிகப் பக்குவமாக அவளுடைய நகைகளை திருடிக் கொண்டு வந்து விடுங்கள். எவ்வளவு நகைகள் முடியுமோ, அத்தனை நகைகள் எடுத்து வந்து விட்டால், நமக்கு உணவுக்காகும். நகைகளை உறையூர் தாண்டி, எங்கேனும் விற்றுவிட்டு வந்துவிடலாம். நம்மீது எவருக்கும் சந்தேகம் வராது. யார் திருடர்கள் என்று பிறகு நாமே விசாரிக்கலாம்.” குரு சொன்னவுடன் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். நிச்சயமாய் செய்து முடிக்கிறோம் என்று சொன்னார்கள்.

இரவு வந்ததும், வில்லிதாசனை ஸ்ரீ ராமானுஜர் நிறுத்திக்கொண்டார். “கால் குடைச்சலாக இருக்கிறது, பிடித்துவிடு வில்லிதாசா” என்றார்.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று அவர் கால்களை மெல்ல அழுத்தி பிடித்து விட ஆரம்பித்தான். தொடையிலிருந்து நிதானமாக இறுக்கி, இறுக்கி ரத்தத்தை உள்ளங்கால் வரை கொண்டு வந்தான்.

“காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாய்?”

“விடியலில் முதல் ஜாமத்தில் எழுந்து விடுவேன். விடிவெள்ளி உதயமாவதற்கு முன்பு விழித்து விடுவேன்.”

“ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்?”

அப்பொழுது எழுந்து உறையூருக்கு போனால்தான் விடியல் நேரம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க சரியாக இருக்கும். ஒரு பத்து வீரர்கள் சேர்ந்திருக்கிறார்கள். நாலூரான் போய் வேறு ஒரு தளபதி அங்கு வந்த பிறகு நல்ல இளைஞர்கள் எனக்கு அருகே வந்து மல்யுத்தம் பயில்கிறார்கள். அவர்களுக்காக விடியலில் போய்விடுகிறேன்.”

“அப்படியா பிறகு எத்தனை மணிக்கு?”

“உச்சிப்பொழுதில்… மேற்கே சூரியன் சரிகிற நேரத்தில் கிளம்பி ஆறு தாண்டி ஸ்ரீரங்கத்திற்கு வந்துவிடுகிறேன்…”

“பிறகு…?”

“உணவு எடுத்துக் கொள்கிறேன்.”

“பிறகு…?”

“அவள் நடனமாட கோயிலுக்கோ, அல்லது மண்டபங்களுக்கோ, வேறு மடங்களுக்கோ போகிறாள். அங்கு போய் அவளுக்கு துணையாக இருக்கிறேன்.”

“பிறகு…?”

“இரவு கடைசி ஜாமத்தில் அவளோடு திரும்பி வருகிறேன்.”

“பிறகு…?”

“சிறிது நேரம் கண்மூடி அவளுக்கு அருகே அமர்ந்திருக்கிறேன். நடனமாடியவள் கால்களையும் கைகளையும் பிடித்து விடுகிறேன். தலையை தடவி அவளை தூங்க செய்கிறேன்.”

“பிறகு…?”

“முதல் ஜாமம் ஆரம்பித்துவிடும். கிளம்பிப் போய் விடுகிறேன்.”

“எப்போது தூங்குகிறாய், வில்லிதாசா?”

“நான் உறங்குவதே இல்லை ஐயா.”

“என்ன…? உறங்காமல் எப்படி இருக்க முடிகிறது?”

“தெரியவில்லை, ஐயா.”

திருட்டுக்கு அனுப்பிய இரண்டு சீடர்களைத் தவிர மற்ற சீடர்கள் ராமானுஜரையும், வில்லிதாசனையும் சுற்றி அமர்ந்திருந்தனர். ராமானுஜர் திடுக்கிட்டு எழுந்தார்.

“இது நேற்று மட்டும்தானா, இல்லை பலநாட்களாக இவ்விதமே தொடர்கிறதா?”

“நீங்கள் அரங்கனின் தரிசனம் காட்டியதிலிருந்தே நான் உறங்கவில்லை. உறங்க முடியவில்லை. உறங்க வேண்டிய அவசியம் எனக்கு எதுவுமில்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். ஐயா, உறங்காதது எனக்கு எந்த விதத்திலும் சிரமமாக இல்லை. சோழ மன்னனிடம் கைநீட்டி சன்மானம் வாங்குவதால், அதற்குண்டான பொறுப்புகளை நான் நிறைவேற்றுவதற்கு உறையூர் போக வேண்டியிருக்கிறது. பொன்னாச்சி என்கிறவளுக்கு, மனைவி என்கிற ஸ்தானத்திற்குரிய மதிப்பை கொடுத்து, புருஷனாய் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்ய வேண்டியிருக்கிறது. பிறகு, உங்களோடு வந்து பேசி சந்தோஷித்து, உங்கள் பாத தரிசனம் பெற வேண்டிய சிஷ்ய பாவம் எனக்கு ஏற்படுகிறது. இதற்கிடையே, உறங்குவதற்கு என்று எனக்கு நேரமில்லை. நான் உறங்க விரும்பவும் இல்லை.”

“எத்தனை நாள்?”

“கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் ஆகின்றன. நான் உறங்கி.”

“இப்படி தம்பி லட்சுமணரை அல்லவா சொல்வார்கள், உறங்கவே உறங்காதவன் என்று? ராமபிரானை பின்பற்றி பலா, அதிபலா என்கிற மந்திரத்தினுடைய மகிமையினால் உண்ணவும் உண்ணாமல், உறங்கவும் உறங்காமல் அந்தப் பிள்ளை இலட்சுமணன் அல்லவா ராமனை காவல் காத்ததாக சொன்னார்கள்.”

“ஐயா, எனக்கு உறக்கம் தான் வரவில்லையே தவிர, பசி நன்றாக எடுக்கிறது. நன்கு சாப்பிடுகிறேன். தேவையான நேரத்திற்கு நல்ல உணவும் இறையருளால் கிடைக்கிறது. ஆகவே, என்னை லட்சுமண பெருமாளோடு ஒப்பிடாதீர்கள். நான் சாதாரண மனிதன்.”

“இல்லை. நீ உறங்காதவன். உறங்கா வில்லிதாசன். லட்சுமண பெருமாள் மாதிரி ஏன் சொல்லக்கூடாது? பிள்ளை… பிள்ளை… என்று லட்சுமண பெருமானை பிரியமுடன் என் குருநாதர் சொல்வார். அந்தப் பிள்ளை எவ்வளவு தொண்டு செய்தது என்று ஆச்சரியப்படுவார். எனவே நான் இனிமேல் உன்னை கூப்பிடும்போது வெறும் வில்லிதாசா என்று கூப்பிட மாட்டேன். உறங்காத வில்லிதாசன்… என் பிள்ளை… நம் பிள்ளை… பிள்ளை உறங்கா வில்லிதாசன் என்று கூப்பிட போகிறேன். பிள்ளை உறங்கா வில்லிதாசன் வாழ்க! வாழ்க.”

வில்லிதாசனை பார்த்து கை கூப்பினார்.

குருவின் கருணை காட்டாற்று வெள்ளம் போல் அந்த மல்லன் மீது பாய்ந்தது. மல்லன் கைகூப்பினான். காலில் விழுந்தான். குறுகி அவர் எதிரே நின்றான். “பிள்ளை உறங்கா வில்லிதாசா என் கை கால்களை சற்று பிடித்து விடு…” என்று மறுபடி கட்டளையிட, அவன் மிக மெதுவாய் அவருக்கு கால் பிடித்து விடலானான். அருகே உள்ள வைணவர்கள் குருவையும், சீடனையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் நடித்தார்.

[தொடரும் ….]