உ
யோகிராம் சுரத்குமார்
திடம்
கேள்வி: உங்களுக்குள் ஏற்பட்ட இந்த ஆன்மிக முதிர்ச்சி உங்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன?
எந்த இடத்தில் இருந்தாலும் நான், நானாக இருந்தேன். அந்த ஆன்மிக வளர்ச்சி திடமாக இருந்ததால்தான் என்னுடைய வேலையை நான் உணரமுடிந்தது. நான் எழுத்தாளனாகவே இருக்க முடிந்தது. சினிமாவில் இருந்த போதும் எந்த விதமான சீரழிவையும் நடத்தவில்லை. அதே சமயம் சினிமாவும் என்னிடம் இல்லை என்பது தெரிந்தது. சினிமாவில் கொஞ்சம் காசு சம்பாதிக்க முடிந்தது. வீடு வாங்க முடிந்தது. வாகனம் வாங்க முடிந்தது. அதற்குப் பிறகு சினிமா எனக்குத் தேவையாக இல்லை. இப்போது எழுத்திலே நான் அறிந்ததை சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்கிற தாபம் இருந்தது. ஏனெனில் யோகிராம்சுரத்குமார் உள்ளே நுழைந்ததும் பல்வேறு அனுபவங்களுக்கு ஆளாக்கினார்கள். அந்த ஆன்மிக அனுபவங்கள் உள்ளே சென்று என்னை அமைதிமிக்கவனாக, அறிவு மிக்கவனாக, எதையும் ஆழ்ந்து யோசித்து செய்பவனாக மாற்றியது.
நான் செய்து விட்டு, ஸாரி… தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்லுகிற ஆளாக இல்லை. எது செய்தாலும் சரியாக செய்தேன். அதனால் வாழ்க்கை எந்த சச்சரவும் இல்லாமல், எவரோடும் சண்டை இல்லாமல் எதன் பொருட்டும் ஆத்திரம் இல்லாமல் எந்த தந்திரமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது. என்னுடைய இந்த நிறைவு என்னுடைய இந்த அமைதி வீட்டாரையும் பாதித்தது. வீட்டார் இதை உள்வாங்கி அவர்களும் அமைதியாக இருந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த அமைதி புரிந்தது.
“என்ன வேண்டும் உனக்கு? எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டுமா?” என்று என் மகளை யோகிராம்சுரத்குமார் கேட்க, என் மகள் திடமாக உங்கள் விருப்பம் பகவான்…. உங்கள் விருப்பம்தான் என் விருப்பம் பகவான்… என அவரிடம் மிகத் திடமாக சொன்னாள். அந்த திடம் என்னிடமிருந்து பொங்கி அவளிடம் சேர்ந்தது. ஒரு வீட்டில் ஒரு தலைவன் மிகச் சரியாக இருப்பின் அந்த வீடு மிக நன்றாக இருக்கும். என் வீடு அவ்விதமாக என்னை பின்தொடர்ந்து என் குருவை பற்றிக் கொண்டது.