உ
யோகிராம் சுரத்குமார்
பித்ரு தர்ப்பணம்
ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையென்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாளாக அதை மிக திறம்பட கூர்மையான புத்தியோடு செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தேன்.
பித்ரு கடன் தீர்ப்பது என்பது இந்துக்களுடைய பல கடமைகளில் ஒன்று. என் இரண்டு மனைவிகளோடு இராமேஸ்வரம் போய் தனுஷ்கோடி கடலில் நீராடி அங்குள்ள மணலில் சிவலிங்கம் பிடித்து அதற்கு பூஜை செய்து, அந்த சிவலிங்கம் பிடித்த மண்ணை எடுத்துக் கொண்டு வந்து மனைவியரோடு அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்திற்கு வந்து, சரஸ்வதியும், கங்கையும், யமுனையும் சேருகின்ற இடத்தில் மணல் கரைத்து, தலைமுடியின் நுனியை வேணிதானம் என்பதாகச் செய்து, கை கோர்த்து தலை முழுகி, பிண்டப் பிரதானம் செய்து, அங்கிருந்து காசிக்குச் சென்று ஐந்து விதமான கட்டங்களில் முப்பதாறு முறை ஒவ்வொரு கட்டத்திலும் மூழ்கி, பத்தொன்பது, பத்தொன்பது பிண்டங்களாக ஐந்து கட்டத்திலும் வைத்து, பிந்துமாதவரை தரிசித்து, மணிகர்னிகாவில் கை கூப்பி, தகதகத்து எரிகின்ற சிதைகளுக்கு வணக்கம் சொல்லி, நமச்சிவாய நமச்சிவாய என்று பிதற்றி, உலக வாழ்க்கையின் எல்லா கர்வமும், எல்லா உயரமும் இவ்வளவுதான் என்று கண்ணார, உளமார புரிந்து கொண்டு, அங்கிருந்து கயாவிற்கு வந்து, தாய்வழி மூத்தோருக்கும், தந்தைவழி மூத்தோருக்கும் பிண்டம் பிடித்து மற்றும் உள்ள உறவுகளுக்கும், குருவிற்கும், நண்பர்களுக்கும், பார்த்தேயறியாத பெரியவர்களுக்கும், அறுபத்து நான்கு பிண்டங்கள் பிடித்து, அவர்களுக்கு உண்ணக் கொடுத்து நீர் ஊற்றி நமஸ்கரித்தேன்.
யாரெல்லாம் எனக்கு உதவி செய்தார்களோ அத்தனை பேர் ஆன்மாவும் குளிர வேண்டும், அவர்கள் கடைத்தேற வேண்டுமென்றும் மனமார விரும்பினேன்.
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை, என்னை குமுதத்திற்கு அறிமுகம் செய்து வைத்த குமுதம் நிருபர் பால்யூ, என்னோடு குமுதம் பத்திரிகைக்கு முதன் முதலில் கூட வந்த எழுத்தாள நண்பர் சுப்ரமண்யராஜு, எனக்கு எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்த எழுத்தாளர் சுஜாதா, நான் வியந்து வியந்து படித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன் என்று பலருக்கும் பிண்டம் வைத்து நீர் வார்த்தேன்.
குருநாதருக்கு தனியாக நீத்தார் கடன் செய்தேன்.தர்ப்பணம் செய்து பிண்டம் வைத்து ஆடகேஸ்வரம் என்கிற ஆலமரத்தடியில் பித்ருக்களை திருப்தியடையச் செய்தேன்.
அவர்கள் திருப்தியானார்கள் என்று அந்தணர் வாய் வழியாக சொல்லக் கேட்டு, கை கூப்பி நமஸ்கரித்து, சென்னை திரும்பி, அங்கிருந்து ராமேஸ்வரம் பயணப்பட்டு, கையோடு கொண்டு வந்த கங்கை ஜலத்தை ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து அங்கேயும் சேத்திர பிண்டம் வைத்து, பித்ருக்களை வணங்கினேன்.
நான் தவறாமல் மாதம் தோறும் தர்ப்பணம் செய்கிறவன். செய்கிறபோது காக்கைக்கு சோறு வைக்கிறவன். வருடத்திற்கு இரண்டு முறை சிரார்த்தம் செய்கிறவன். அப்பொழுதும் காக்கையை அழைத்து பித்ருக்களுக்கு உணவாக நெய்யும், பருப்பும் கலந்த சாதம் வைக்கிறவன். அப்பொழுது எல்லாம் காக்கை வரும். ஒன்றிரண்டு உட்கார்ந்து கொத்தித் தின்னும். சந்தோஷமாவேன்.
ராமேஸ்வரத்தில் காக்கைகளுக்கு பிண்டம் வைத்தபோது இருபத்தைந்து காக்கைகள் பாய்ந்து வந்து எகிறி எகிறி கொத்தி குதறி முப்பது வினாடிகளில் சாப்பிட்டு முடித்ததைப் பார்த்தபோது உள்ளே நிரம்பி வழிந்தது.
நான் சிரத்தையாக சிரார்த்தம் செய்திருக்கிறேன் என்பதை என் மனம் அனுபவித்து, கண்களில் நீர் தளும்பியது.
இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். என் திருப்தி எனக்கு சொந்தம். உங்களுக்கு என் திருப்தி புரிய வேண்டுமென்ற அவசியமில்லை. ஒருவேளை ஈடுபாட்டோடு செய்து பாருங்கள். அப்போது என் திருப்தி உங்களுக்கும் வரும். அப்போது அந்தத் திருப்தி உங்களுக்கும் புரியும்.
வாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல. மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானது. அது இருப்போருக்கும் கொடுக்கும். இறந்தோருக்கும் கொடுக்கும்.
Prasad
I miss you Bala sir..