நோயுற்று துவண்டிருக்கும் நேரங்களில் என்னடா நகர முடியவில்லை என்கிற மன அழுத்த நேரங்களில் என் காதில் ஒரு பாட்டு ஒலிக்கும்.

என் சிறு வயதில் தூங்க வைக்க அம்மா பாடும் பாட்டு. பஜனைகளில் பாடும்பாட்டு. ஒரு மயக்க நிலைக்கு தள்ளும் பாடல்.

ஶ்ரீகெளரி சூர்யா இருவரையும் தூங்க வைக்க அல்லது தூங்கும் பொழுது இப்பாடலை என் வீடு பாடியிருக்கிறது.

யார் இயற்றியது பாடலின் வயதென்ன எதுவும் தெரியாது.

ஆனால் அது சொக்க வைக்கும் இனிமை. இதம். கடவுள் பாட்டுதான். ஆனால் கடவுளை முன் நிறுத்தியதில்லை. மெல்லிய வார்த்தைகளே அதன் பலம். இசையே அதன் அழகு. தூங்கும் நேரம் உங்கள் குழந்தைக்கு இந்தப் பாடலை பாடிப்பாருங்கள். கனத்த தூக்கமும் கண் விழிக்கும் போது மலர்ச்சியும் நிச்சயம் ஏற்படும்.

கிருஷ்ணம் வந்தே நந்த குமாரம் ராதா வல்லப நவநிதசோரம்
தேவகி நந்தன நந்தமுகுந்தா
நந்தித முனிகண நித்யானந்தா.

திரும்பத் திரும்ப பலமுறை பாடலாம்.

நான் இறக்கும் நேரமும் இறந்த பிறகும் எரியூட்டும் போதும் இப்பாடல் பாடப்பட வேண்டும் என்பது என்னாசை.