உ
யோகிராம் சுரத்குமார்
சமுத்திர ராஜ குமாரா…
” அம்மா…”
இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு பெண்பிள்ளை மாதிரி கூவினான். வினாடி நேரத்தில் குழந்தையாகிப் போனான். சின்னதாய் வாயைப் பிளந்து கொண்டு, சுழித்தபடி ஒடும் காவேரியோடு சிறிது தூரம் நடந்தான். சந்தோஷத்துடன் மறுபடி என்னிடம் திரும்பி வந்தான்.
” அம்மா! என்ன அழகு சரஸ்வதி. எவ்வளவு அழகு இது. திமுதிமுன்னு என்ன கோபம் பாரேன் இவளுக்கு! கோச்சிண்டு பரபரப்பா வீட்டு வேலை செய்யற பொம்மனாட்டி மாதிரியில்லை இந்த காவிரி? பார்க்கப் பார்க்க அதிசயமாயில்லை சரஸ்வதி? ”
எனக்கு இவன் சந்தோஷம்தான் ஆச்சரியமாய் இருந்தது. இப்படி ஆற்றங்கரையில் பரவசப்பட்டுப் போகும் ஆண்! வியப்பாய் இருந்தது. கரையோரக் கூட்டத்தில் நாலு பேர் மத்தியில் தன் சந்தேகத்தைக் குழந்தை மாதிரி வெளியிடுபவனை இதுவரை நான் கண்டதேயில்லை.
” சரஸ்வதி, காவிரில குளிச்சிருக்கீங்ளோ?”
நான் மிரண்டேன், இழுத்துத் தண்ணீரில் இறக்கி விடுவானோ என்று பயந்தேன்.
” இல்லை ராஜாராம்… ஓரே ஒரு தடவை பாவாடைச் சட்டையோட பள்ளிக்கூடம் போற காலத்தில் கால் வழுக்கி விழுந்திருக்கேன்…. மொத்த பாவாடையும் நனைஞ்சிடுச்சு. அழுதுகிட்டே வீட்டுக்குப் போய், வீட்டுலயும் திட்டு வாங்கி அழுது… நான் காவிரில குளிச்சது அன்னிக்குத்தான். அதுக்கப்புறம் சான்ஸே இல்லை. ”
” இந்த ஊர்தானே சரஸ்வதி உங்களுக்கு? ”
” பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கே தான். ஆனா பஸ்ல போறப்ப காவிரியைப் பார்க்கறதோட. சரி. இப்ப பத்திரிகை படிச்சுகிட்டே பஸ்ல போறதுனால பார்க்கறது கூட இல்லை… ஊர் விட்டு ஊர் வந்திருக்கீங்க, சிடி ஆளுக்கு காவிரி அதிசயம்தான். ”
” நோ டியர்… நோ. ” பலமாய் தலையசைத்தான். “எனக்கு காவிரி தெரியும். நானும் இந்தக் காவிரிக்கரை பையன்தான். ஆனா எங்க ஊர் காவிரி ஒதுங்கி, இரண்டு பக்கமும் கவிஞ்சு நிக்கற மரத்துக்கு நடுவுல அழகு தாவணி சுத்திக்கிட்டுப் போற பெண் மாதிரி இருக்கும்! இப்படி பட்டும் பளபளப்பும் காசுமாலைத் தெறிக்கும் கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் பண்ணப்போற பொம்மனாட்டியா இருக்காது… அங்க பாருங்க, நடுவுல வெயில் பட்டு என்னமா தெறிக்குது! ”
ஜங்ஷனில் படியிறங்கின ஷணம் முதல் இப்படிதான் கவிதையாய் இறைத்துக் கொண்டிருக்கிறான்.
” உங்கள் ஊருக்கு வருகிறேன். ஆடிப்பெருக்கு காவிரி பார்க்க, விவரம் விசாரிக்க வருகிறேன். பத்திரிகையில் ரிப்போர்ட் செய்ய போகிறேன். உங்களைப் பிற்பகல் உங்கள் அலுவலகத்தில் சந்திக்கிறேன். அரசு கஜானா என்று கேட்டால் போதுமா? வழி சொல்வார்களா?” என்று எனக்கு எழுதியிருந்தான் இவன் என் ஊரில் இருக்க, பிற்பகல் வரை எனக்குத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. விடிகாலை ஜங்ஷனுக்குப் போய் விட்டேன். இவன் தரை தொட்டதும் நேரே போய் கை கூப்பினேன்.
” நீங்களா.. நீங்கதான் சரஸ்வதியா? நெத்தி மயிர் கண்ணுக்குத் தெரியலை… இந்த இருட்ல எப்படி வந்தீங்க ஜங்ஷனுக்கு? ஆனா வந்தது பத்தி ரொம்ப சந்தோஷம், தனியாளா ஊர் சுத்திப் பார்க்கிறதைவிட. இப்படி ரசனை உள்ள துணையோட பேசிக்கிட்டே சுத்தறது ரொம்ப சுகம், கண்ணாடி முன்னால. சிரிச்சிக்கிட்டே தலைவாரிக்கிற சுகம், காப்பி சாப்பிடலாமா சரஸ்வதி? ”
காப்பி சாப்பிட்டுவிட்டு பொத்து பொத்தென்று சட்டை, பேண்ட் பாக்கெட்டைத் தடவிற்று. நான் என் கைப்பையைத் திறந்து வில்ஸ் பில்டர் பாக்கெட்டை எடுத்து வைத்ததும் அயர்ந்து போயிற்று.
” யூ ஸ்மோக்?… ” கொக்கி போட்ட புருவத்தோடு கேள்வி கேட்டது.
நான் வாய்விட்டுச் சிரித்தேன், இல்லை. உங்களுக்காக வாங்கினேன். நீங்க சிகரெட் பிடிப்பீங்கன்னு தெரியும்.
” எப்படித் தெரியும்? ”
” உங்க கதைகளிலிருந்து தெரியும், ஆனா இது உங்க பிராண்டா? ”
” என் பிராண்ட் இது இல்லை. ஆனாலும் தேங்க்ஸ். இப்போதைக்கு இது போதும். நீங்களா வாங்கினீர்கள்?”
” ஆமாம். ”
” கடைக்காரன் ஒரு மாதிரி பாக்கலை. ”
” பார்த்தான். முப்பத்திரெண்டு வயசுக்குள்ள ஒரு மாதிரி பார்க்கிறது எல்லாம் பழகிப் போயிடுச்சி! பார்க்கறாங்களே, பார்க்கறாங்களேன்னு இருபது வயசில கோபம் வரும். பதறும், இப்ப சரிதான் போன்னு போயிடுச்சி. பொம்மனாட்டி சிகரெட் வாங்கினாதான் பார்ப்பாங்களா? வெறும் பஸ் ஸ்டாண்டில தனியா நின்னுகிட்டு இருந்தாலும் ஒரு மாதிரி பார்க்கறாங்க…
வாய்விட்டுச் சிரிச்சா மூஞ்சியை சுருக்கறாங்க. இரக்கப்பட்டு பேசினா ‘ லவ்வு’ன்னு நினைக்கிறாங்க… அவ லெட்டர் எழுதினா, அவளுக்கு லெட்டர் வந்தா கேஸூன்னு டிக்ளர் பண்றாங்க. ”
” ஐயம் ஸாரி. ”
” எதுக்கு ஸாரி? ”
” அடிக்கடி லெட்டர் எழுதறதுக்கு ”
” கம் ஆன் ராஜாராம்… நான் உங்களைச் சொல்லலை. பொதுவா ஊரைச் சொன்னேன். ”
” நா வந்தது கஷ்டமில்லையே சரஸ்வதி? ”
” மகா சந்தோஷம் ராஜாராம்! ”
அதுவும் கண்களில் சந்தோஷத்தை, நன்றியைக் காட்டிற்று.
ஒரு லாட்ஜில் பையை விருட்டென்று எறிந்துவிட்டு, குளித்து டிபன் முடித்து காவிரிக்கரை வரும்வரை ஓயாமல் பேசிற்று. சமுதாயம், பெண் விடுதலை, வரதட்சிணை, வேலையில்லா திண்டாட்டம், கடவுள் நம்பிக்கை என்று எங்கெங்கே தொட்டு திரும்பியது.
” நீங்க ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை சரஸ்வதி? ”
” நாம பேசின காரணம்தான்… இருபது பவுன் நகை அஞ்சாயிரம் வரதட்சிணை, தவிர செலவுக்கு இருபது வேண்டாமா? இது இல்லை. அதுதான். ”
” அப்ப காசு தானா? ”
” அப்ப காசு. இப்ப மனசு!”
” புரியலையே?”
” இருபத்தஞ்சில இந்த காசு இருந்திருந்தா சரின்னிட்டுருப்பேன். இப்ப காசு இருந்தாலும் வேணாம்ன்னு தோணுது. இப்ப பயப்பட என்னால முடியாது. புருஷனுக்குப் பயப்படாம. குடித்தனம் பண்ண முடியுமான்னு கவலையா இருக்கு. பயந்து பயந்து தான் வாழ்க்கை நடத்தணும்னா வேணாமேன்னு படுது. எங்க அம்மாகிங்டே, ‘ வேணாம் தொந்தரவே பண்ணாதே’ ன்னுட்டேன். ஜாதகத்தை கிழிச்சுப் போட்டுட்டேன். இது இருந்தாதானே தேடுவாங்க? விட்டுட்டாங்க! ”
என் வீட்டுச் சோகம் இவன் முகத்தில் அப்பிக் கொண்டது போலும்! காலுக்கும் முகவாய்க்கும் முட்டுக் கொடுத்தபடி ஆட்டோவில் மௌனமாய் வருபவனை சீண்டிப் பார்க்கத் தோன்றிற்று.
” திடீர்ன்னு என்னா இவ்வளவு கோபம்? எனக்கு கல்யாணம் ஆவளைன்னா?”
” உங்களுக்கு மட்டுமில்லை சரஸ்வதி… உங்க மாதிரி எத்தனை பெண்கள் இப்படி முதிர் கன்னியா… கடவுளே! என்னைக்கு விடிய போறது இங்கே? ”
” நான் அதிர்ந்தேன். உள்ளே அசிங்கப்பட்டேன். என் சீண்டல் குணம் காணாமல் போயிற்று.”
” காவிரி வந்துட்டோம் ராஜாராம்! ”
” அம்மா….? ”
“இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு குழந்தை மாதிரி கூவினான்”
குடத்தில் அம்மன் முகமெழுதி மாலை போட்டு, வெல்ல அரிசி, முளைப்பயிறு படைத்து மெல்லிய நூலில் மஞ்சள் தோய்த்து அம்மனுக்கு சார்த்தி ஒரு மூதாட்டி குடும்பத்துடன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்தான். குனிந்து மரியாதையுடன் கேட்டான்.
” எதுக்கும்மா மஞ்சக் கயிறு?”
” கட்டிக்கத்தான் ” ஆற்று வெயிலாய் பதில் தெறித்தது.
” இந்த இடத்தில் செய்யறீங்களே என்ன விசேஷம்? ”
” ஆறில்லாத ஊர் பாழ்… நூலில்லாத பொண்ணு பாழு! ”
” விளங்குமாறு சொல்லுங்க தாயே!” கைகூப்பினான். யப்பா சரியான ரிப்போர்ட்டர்.
” இப்ப ஆடி மாசம். ஆத்தா இரண்டு கரையும் உடாச்சுட்டுப் போறா வெய்ய நாள்ல இரண்டு விரல் ஆழத்துக்கு நடப்போ. என்னிக்காவது ஆத்தா தேங்கினது உண்டா? குளம் குட்டை மாதிரி நின்னது உண்டா? ஆணும் பொண்ணும், பயிர்த் தொழிலும் நடந்துகிட்டே இருக்கணும். அப்பதான் மரியாதை கம்பு போட்டு கரும்பு எடுத்து, கரும்பு போட்டு வேர் விவசாயம் நிலத்துல நடக்கணும். தரிசா விடப்படாது. கெட்டித் தட்டபபடாது ஆத்தா புருஷன் புருஷன்னு சமுத்திரத்துக்குப் பறக்கிற மாதிரி, பொண்ணு புருஷன் நினைப்பாவே இருக்கணும். அதுக்குத்தான் மஞ்சக் கயிறு கட்டிக்கிறது.
” கல்யாணமான பொண்ணு புருஷன் நினைப்பா இருக்கிறது சரி. கன்னிப்பொண்ணு என்ன வேண்டிக்கணும்? ”
” ஆனவளுக்கு நினைப்பு என்னா? அவ கடல்ல கலந்த காவிரி மாதிரி. பிரிச்சா பாக்கறது. பிரிச்சு பாக்கத்தான் முடியுமா? கன்னிப்பொண்ணுதான் ‘ எங்க என் புருஷன்’ னு ஓயாது தேடணும். இல்லன்னா ஆத்தா இந்த ஓட்டம் ஏன் ஓடறா…. நானே புருஷன்னு நினைக்கறதுக்கா பொண்ணா பொறந்திருக்கிறது. நின்னு என்னா புண்ணியம் என்னா மதிப்பு. ஆமா நீ யாரு?”
” நான் பத்திரிகை. விசாரிச்சு எழுத வந்திருக்கேன் ”
” எழுது. நல்லா எழுது… இது உங்க வூட்டு பொண்ணா? இந்தாம்மா, கட்டிக்க ” கிழவி மஞ்சள் நூல் உருவி, நடுவே பூ முடித்து என் கழுத்தில் கட்டினாள்.
” விளைஞ்ச முளைப்பயிறும் வெல்ல அரிசிக்கலவையும் படையலாய் நான் வெச்சேன். தழைஞ்சு நான் பணிந்தேன். என் மனசு நோகாமல் ஒரு புருஷன் வரவேணும்…. ”
குப்பென்று என் விழியோரம் நீர் முட்டிற்று. நூல் கயிறு பூவை கண்ணில் ஒத்திக் கொண்டேன்.
மெல்லிய சோகமும் சந்தோஷமும் வியப்புமாய் அவன் என்னை விழிவிரித்துப் பார்த்தான். எனக்கு வயிறு கலங்கிற்று. வேறு யாரோ தினசரிப் பத்திரிகையாளர்கள் போட்டோ பிளாஷுடன் கூட்டத்தின் இயல்பைக் கலைத்து கொண்டிருந்தார்கள்.
” சரஸ்வதி, நான் குளிக்க போறேங்க ” சட்டென்று சட்டை பட்டன்களை கழற்றி, பெல்டை அவிழ்த்து, கரையோரம் இரண்டு ரூபாய்க்கு ஈரிழைத்துண்டு வாங்கி இடுப்பில் சுற்றிக்கொண்டு உடைகளை என்னிடம் கொடுத்தான். முங்கித் தீர்த்து எதிரில் நீந்தி உள்வாங்கி மிதந்து புரண்டு ஆட்டம் போட்டான். கரைக் கூட்டம் இவன் சந்தோஷத்தை வேடிக்கை பார்த்தது. வேறு யாரோ இருவர் இவன் சந்தோஷம் தொற்றிக்கொள்ள துண்டு வாங்கினார்கள். எனக்குள்ளும் ஜில்லென்று குளியலறைக்கு வெட வெடப்புக்கு ஆசை வந்தது. கணுக்கால்களைச் சேர்த்து அழுத்திக் கொண்டு நின்றேன்.
” சரஸ்வதி உங்களுக்கு குளிக்க ஆசை வரவில்லையா? இது அற்புதம். இங்கே குளிக்காதது பெரிய இழப்பு. எப்படி இந்த அனுபவத்தை மறுக்கிறீர்கள்? நீரிலிருந்ததபடி ஆங்கிலத்தில் கத்தினான், ” கம் ஆன் நானிருக்கிறேன். கமான்… ” என்னுள் நீர் ஆசை மேலும் குளிர்ந்து மலர்ந்தது. நீ அழைப்பது என்னைத்தானா, உன் அழைப்பில் அர்த்தமுண்டா?
நான் தோள் பையை அவன் உடைகளை துண்டு விற்பவனிடம் கொடுத்துவிட்டு, கட்டின புடவையோடு நீரில் இறங்கினேன். இன்று விட்டால் வேறு என்று குளிக்க முடியும்? காவிரியில் வேறு யார் துணை வருவார்கள் முங்கிக் குளிக்க.
” அக்கா, அன்னாண்ட ஜலம் மொண்டு கொடுங்களேன்… இங்க மொளைப் பயிறு மணக்குது.” ஏதோ ஒரு பெண் சொம்பு கொடுத்தது.
முழங்கால் ஆழத்தில் அவன் விரல்களை பற்றியபடி ஆற்றுவேகம் தாளாமல் தள்ளாடி நிற்கையில், என் கையிலிருந்து சொம்பை வாங்கிக் கொண்டான். என் வலக்கையைப் பிடித்தபடி, ‘ முழுக்கு போடுங்க! ‘ என்றான். அவன் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு குளிரக் குளிர முழுகினேன். குடத்தில் எழுதின அம்மன் முகத்தை நினைத்துக் கொண்டேன்.
” தலை நல்லா நனையலே சரஸ்வதி… ” சொம்பில் நீர் எடுத்து தலையில் அபிஷேகமாய் ஊற்றினான். மின்னிற்று ஆற்று வெயிலோ, போட்டோ ப்ளாஷோ, எவர்சில்வர் செம்போ, ஏதோ ஒன்று கண்விழியும் நீர் நடுவே மின்னிற்று.
ஈரம் ஒட்டக் கரையேறுகையில் கரை ஆட்கள் எங்களைக் கவனிப்பது தெரிந்தது. ஈர உடைகளுடன் தெருவில் நடக்கையில் கேட்டான் :
” வீட்ல எதுவும் சொல்லமாட்டங்களா, சரஸ்வதி? ”
” சொல்லமாட்டங்க ராஜாராம்…”
“என்ன சொல்வீங்க? ”
” காவிரியில் குளிச்சேன்னு சொல்வேன் ”
” திட்டமிட்டார்கள்?”
” எனக்கு முப்பத்திரண்டு வயசாவலையா! திட்ட மாட்டாங்க.”
” எனக்கு ஜீலிர்ன்னு இருக்கே… குளிரலே உங்களுக்கு? ”
” விட்டுப் போச்சு! ”
” சரஸ்வதி ”
” சந்தோஷமா இருக்கேன் ராஜாராம். இப்ப வீட்டுப் பேச்சு எதுக்கு…? ”
” நிஜம்மாவே சந்தேகம்தான்?”
” இந்த ஊராயிருந்தும் நினைவு தெரிஞ்சு முதன் முதலாக காவிரியில் குளிக்கிறேன். சநதோஷமில்லையா இது… விடுதலையில்லையா இது? ”
” விடுதலைக்குப் பின்னால் வருத்தப்படக்கூடாது சரஸ்வதி… ”
” மாட்டேன் ராஜாராம் ”
” தட்ஸ் குட். ராத்திரி வண்டிக்கு ஊருக்கு போறேன். ”
நைலெக்ஸூம் டூ பை டூவும் காய்ந்து விட்டன. உள் பாவாடை மட்டும் மனசு மாதிரி கனத்துக் காலை இடறிக் கொண்டிருந்தது.
” ஜங்ஷனுக்கு வரட்டுமா ராஜாராம்? ”
” வேண்டாம் சரஸ்வதி… இருட்டிடாது. போய் நான் கடுதாசு எழுதறேன். ஸிடிக்கு வரும்போது அவஸ்யம் வீட்டுக்கு வாங்க. ஆடிப்பெருக்கு கட்டுரை படிச்சா எப்படி இருக்குன்னு எழுதுங்க. ”
” சரி.”
பிரித்தேன்? வீட்டில் தலையை விரித்து துவட்டிக் கொண்டேன். அம்மா வெறித்துப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். வெங்கலப்பானை மீது கோபத்தைக் காட்டினாள். நாலு நாட்கள் கழித்து நலமாய் அவன் ஊர் சேர்ந்ததாய் கடிதம் வந்தது. பத்திரிகையில் அவன் எழுதின ஆடிப்பெருக்கு கட்டுரை வந்தது.
காவிரியின் அகலமும், நீளமும், கரையோரக் காட்சிகளும், பட்சி வர்ணனைகளும், மூதாட்டி படையலும் மஞ்சள் நூல் தந்ததும், புருஷனைத் தேடும் காவிரியின் பரபரப்பும் அதில் இடம் பெற்றிருந்தன.
என்னோடு வலக்கை சேர்த்து முங்கினது வரவில்லை. என் தலையில் ஜலம் ஊற்றி குளிர்வித்தது வரவில்லை. நான் கண்ணில் நீர் முட்டக் கயிறு மாட்டிக் கொண்டது வரவில்லை. அவனுக்கு புரியவில்லை. என் மனம் தெரியவில்லை.
இதோ ஒரு வருடம் கழித்து கலராய் யாரோ எங்களை போட்டோ பிடித்துப் போட்டிருக்கிறார்கள். இதிலும் என் முகம் தெரியவில்லை. நான் யாரென்று எவருக்கும் புரியப்போவதில்லை.
தெளிவாய் என் ப்ளு நைலெக்ஸூம், டூ பை டூவும் வாங்கின கண்ணாடி வளையலும் விழுந்திருக்கிறது.
அவன் முகம் பிரகாசிக்கிறது.
ஒருவேளை இந்த போட்டோவைப் பார்த்தால் அவனுக்கு என் முகம் நினைவுக்கு வரலாம். என்னுடன் கைகோர்த்து முங்கியகதும் ஞாபகம் வரலாம். நான் கண்ணில் நீர் முட்டக் கயிறு கட்டிக் கொண்டது மனசில் உறுத்தலாம். அப்படி, இந்தப் படம் கண்ணில் படாது போனாலும், இந்த என் கதை அவனுடைய கண்ணுக்குப் படாதா? என் வெட்கம் விட்ட ஆசையை அவன் படிக்க மாட்டானா? என் உள் மனதில் அவனை நோக்கி ஓடி வருவதை, காவிரியாய் பொங்குவதை உணரமாட்டானா? சமுத்திர ராஜனாய் என்னை ஏற்க மாட்டானா…?
அன்புள்ள ஆசிரியருக்கு, இந்த கதையை தயவுசெய்து பிரசுரிக்க வேண்டுகிறேன்.
முப்பத்து மூணு வயதில், மெல்ல நரைக்கத் துவங்கிவிட்ட, முப்பத்து மூணு வயதில் வேண்டுதலைத் தவிர, நான் வேறென்ன செய்ய முடியும்?
என் புருஷனே, சமுத்திர ராஜனே, நீ எங்கிருக்கிறாய் எங்கிருக்கிறாய்…. எங்கிருக்கிறாய்… எங்கிருக்கிறாய்…?
K.venkatachalapathy
எங்கள் ராஜா ராமனே
நமஸ்காரம்