உ
யோகிராம் சுரத்குமார்
பிரபஞ்ச சக்தி
[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …]
அவருக்குள் இருந்த வெளிச்சம் வெளியே பரவத் துவங்கியது. எல்லா உயிரின் அசைவும் வெளிச்சமாக தெரிந்தது. எல்லாம் வெளிச்சமும் சந்தோசமாக இருந்தது. எல்லா சந்தோஷமும் இறைவனுடைய சாயலாக இருந்தது.
எல்லா உயிர்களும் சந்தோசப் படுகின்றன. எல்லா உயிர்களும் இறைவனின் சாயல் இருக்கிறது.
எல்லா உயிரும் சந்தோசத்தை தேடுகின்றன. எல்லா சந்தோஷங்களும் இறை வடிவமாக இருக்கின்றன.
சந்தோசத்தை தேடுபவர்கள் எல்லோரும் இறைவனை தேடுபவர்கள்தான். இறைவனை தேடாத உயிரினமே இல்லை. இறைவனை நாடாத மனிதர்களே இல்லை.
பெண் சந்தோஷமென்று சிலர் சொல்கிறார்கள். பொருள் சந்தோஷமென்று சிலர் சொல்கிறார்கள். பெரிய பதவி சந்தோஷம் என்று சிலர் சொல்கிறார்கள். மதுவும் உணவும் சந்தோஷமென்று சிலர் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு விஷயமும் ஒரு கண்ணாடி சில்லு. சூரிய ஒளி பட்டு கண்ணாடி மின்னுகிறது. அந்த சூரிய ஒளிதான் கண்ணாடியை மின்ன வைக்கிறது, ஆர்வமாய் பார்க்க வைக்கிறது என்று நிறைய பேருக்கு தெரியவே இல்லை.
பெண் சந்தோசமல்ல. இயக்கினால் தான் சந்தோஷம். இயங்காத சவம் சந்தோஷம் இல்லை. சக்திதான் சந்தோசம்.
சக்தி இருந்தால்தான் சிவம். அந்த சக்தி பூரணமாக இருந்தால் தான் சந்தோஷம். சக்திதான் சகலமும். சக்தி தான் உலகம் முழுவதும். சக்தி தான் பிரபஞ்ச ஆட்சி.
சக்தியினுடைய ஒரு வடிவம்தான் பூமி. பூமியினுடைய இன்னொரு வடிவம் பெண்.
பிரபஞ்ச சக்தி, பூமி என்கிற சக்தியை தாங்கிக் கொண்டிருக்கிறது. பூமி உயிரினங்களை தாங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களில் பெண் உயிரினம் இந்தத் தாங்குதலை கர்ப்பாரூபமாக செய்துகொண்டிருக்கிறது.
எனவே பெண் சக்தி. பெண்ணே கடவுள். பெண்ணே தொழப்பட வேண்டியவள்.
எனவே கடவுளை தொழ வேண்டுமெனில், பெண்ணை தொழுங்கள். பெண்ணை தொழாது வேறு எதைத் தொழுதாலும் வீண்.
பெண்ணே ஆதி. பெண்ணே கடவுள். பெண்ணே எல்லாவற்றிற்கும் மூலம்.
சுப்பிரமணியம் உள்ளே தெளிந்தார்.
ஒரு ஊழித்தீயை சிறு விளக்காக பார்த்து அணைத்து விடலாம், அழித்துவிடலாம், என்று மனிதன் நினைப்பது பேதமை.
அகல்விளக்கு ஊழித்தீயின் ஒரு அம்சம். உன் மனைவி பிரபஞ்ச சக்தியின் ஒரு தோற்றம்.
விளக்கை ஊதி அணைத்து விடலாம். மனைவியை மிரட்டி அடக்கிவிடலாம். ஆனால் மரணத்திற்குப் பிறகு அங்குதான் போக வேண்டியிருக்கிறது. உன் உயிர் சக்தி மிகப்பெரிய சக்தியிடம் மண்டி போட வேண்டியிருக்கிறது. பெண்ணை கோபம் இல்லாமல் நடத்த தெரிந்து கொண்டுவிட்டால், வேறு எதிலும் கோபம் வராது. பெண்ணை புரிந்து நடந்துவிட்டால் புரியாத விஷயம் எதுவும் இருக்காது.
இங்கு இதுதான் விதி. இதுதான் வழி. மற்ற எல்லா வழியும் வீண். வெறும் விவகாரம்.
தனக்கு புரிந்ததை எவருக்கு சொல்வது, எப்படி சொல்வது, எப்போது சொல்வது?
சுப்பிரமணியம் தனக்கு உள்ளேயிருந்த சக்தியிடம் கை கூப்பினார். “என்னை நீ இயக்கு” என்று புன்னகை செய்தார்.
பதிலுக்கு அந்த சக்தியும் வெளிச்சமாய் சிரித்தது நானறிவேன் என்றது.