அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில் ஒன்றுகூடி கடவுள் பெயரைச் சொன்னார்கள். அவன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.

அவன் கை கூப்பி நெகிழ்ந்து அவர்களை வணங்கினான். “நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லையே.எதற்காக இத்தனை..” என்று என்னை நோக்கி மெல்லக் கேட்டான்.
கீழே ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.

“நான் செத்திருப்பேன்பா. நான் செத்திருப்பேன். என்னை காப்பித்திட்டான். இவன் செத்துப்போய் என்னை காப்பாத்திட்டான். இவன் அங்க வரலைன்னா நாங்க எல்லோரும் செத்திருப்போம்.”

அந்தத் தங்கும் விடுதியில் வேலை செய்யும் பெண்மணி உரத்த குரலில் அழுதாள். கட்டுப்பாடுகளைத் தாண்டி அவனை நோக்கி ஓடினாள். அவன் முகத்தை தடவினாள்.”சகோதரனே சகோதரனே” என்று கதறினாள்.

இதெல்லாம் காட்சிப் பெட்டியில் காட்டப்பட்டது. அவன் மனைவியை நோக்கி அந்தப் பெண் ஓடினாள். கட்டிக் கொண்டாள். குழந்தைகளை இழுத்து அணைத்துக் கொண்டு அழுதாள்.

“நான் செத்துப் போயிருக்க வேண்டியது, என் தலைக்கு மேலே பல குண்டுகள் பாய்ந்தன. நான் என்ன செய்வது என்று ஒடுங்கிக் கிடந்தேன். இவர் வந்த பிறகுதான் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. இவர் செத்தது எங்களுக்காக. நான் சாகும் வரை இவரை மறக்க மாட்டேன். உங்களுக்கு நான் என்ன செய்யட்டும். உங்கள் வீட்டு வேலைக்காரியாக வரட்டுமா? உங்களுக்கு நான் பணிவிடை செய்கிறேன்” என்று அவள் கதறினாள்.

அவளை சமாதானப்படுத்தி மெல்ல அழைத்துப் போனார்கள்.

அவன் அழுவது போல என்னைப் பார்த்தான்.

நான் அவனை அணைத்துக் கொண்டேன்.

“ஜனங்கள் என் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார்கள். என்னை விட என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் பிரியமாக இருக்கிறார்கள். எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது. நான் உத்தமமான காரியம்தான் செய்திருக்கிறேன் இல்லையா?” என்று கேட்டான்.

ஞானி மறுபடி அவன் முதுகு தடவினார்.

வேறு இடம் சுட்டிக் காட்டினார்.

-தொடரும்