பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

“எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள்.

ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜனங்கள் சீரான வரிசையில் நிற்க வைக்கப்பட்டார்கள். சிலர் பெரிய பெரிய பூக்கூடைகளை கொண்டு வந்து அங்கே வைத்தார்கள். ஜனங்கள் பூக்களை அள்ளிக் கொண்டார்கள். அவன் மீது தூவினார்கள். கை கூப்பினார்கள். பலபேர் அழுதார்கள். வயதான பெண்மணிகள் அவன் மீது மலர் தூவி என் மகனே என் மகனே என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.

அவன் மெல்ல உதடு கடித்தான். “வயதான எல்லா பெண்மணியும் தாய்தான் அல்லவா?” என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

“ஆமாம்”

இளைஞர்கள் பலர் அவனுக்கு அஞ்சலி செலுத்தும்போது ‘பழி வாங்குவோம்’ என்று கை உயர்த்தி சீறினார்கள்.

‌அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.

‌கோழைத்தனமும், வீரமும் ஜலதோஷத்தைப் போல. ஒட்டுவாரொட்டி. சட்டென்று தொற்றிக் கொள்ளும். இப்போது வீரம் தொற்றிக் கொண்டது. அவன் என்னைப் பார்த்து சிரித்தான்.‌ நானும் சிரித்தேன்.

‌இப்போது அந்தக் காட்சிப் பெட்டியில் ஒருவர், “உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகின்றேன்.” என்று உரத்த குரலில் சொன்னார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டார்கள். ஜனங்களின் மனம் அவரை நோக்கித் திரும்பியதால், இவன் மனமும் அவரை நோக்கித் திரும்பிற்று. என்ன என்று ஆவலோடு பார்த்தான்.

‌அவர், “இறந்தவரின் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு ஒரு அகல்விளக்கோ, ஒரு மெழுகுவர்த்தியோ அல்லது ஒரு தீப்பந்தமோ தயவுசெய்து ஏற்றி வையுங்கள். உங்கள் ஊர் கோவில் கோபுரங்களில் ஆலயங்களில் விளக்கேற்றி வையுங்கள். வாசனையான புகையை எழுப்புங்கள். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உறுதிபடச் சொன்னார்.

‌அங்கே பெரிய மாறுதல் நடந்தது.

-தொடரும்