பூஜை எதுக்கு. இந்த ஜபம் எதுக்கு.

சும்மாயிருக்கறதுக்குத்தான்.

வெறுமே எந்தச் செயலும் செய்யாத மனதிற்குள் இறைவன் வந்து அமர்கிறான். எண்ணங்களை ஏற்படுத்துவதுதான் மனதின் சக்தி. அந்த எண்ணங்கள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட மனதின் வேறொரு சக்தி வெளிப்படுகிறது.

எண்ணங்கள் ஏற்படுவதை எப்படி நிறுத்துவது. எண்ணங்களை உற்றுப் பார்க்கும்போது. இது யாருக்கு ஏற்படுகிறது என்று பார்க்கும்போது.

எங்கிருந்து இந்த எண்ணம் உதயமாகிறது, அந்த உதயத்தை, அந்த வேர்நுனியை கவனிக்கிறபோது மனம் வெட்கப்பட்டு சுருங்கத் துவங்குகிறது. மனம் சுருங்கி ஒன்றுமில்லாமல் போகிறது.

மனம் காணாமல் போன நேரத்தில் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. உங்களைச் சூழ்ந்து கொள்கிறது. அதை விவரிக்க முடியாது.

நீங்களற்று நடக்கின்ற அந்த மன அசைவில், உடல் அசைவில் வேறு விஷயங்கள் வெளியாகின்றன. உடம்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றன.

மனம் முற்றிலும் படுத்துக் கிடந்து காணாமல் போகிறபோது உங்களுடைய அவயங்கள் என்ன செய்வது என்று அறியாது நிலை குலைந்து முழு வேகத்தில் செயல்படத் துவங்குகின்றன.

அப்போது உடம்பின் மாற்றம் மிகப் பலமாய் இருக்கிறது. இதுவரை அனுபவித்திராத ஒரு வேகம் தோன்றுகிறது. அந்த வேகத்தை அனுபவிக்க அங்கு எவரும் இல்லை.

எனவே எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பானையிலிருந்து உடைந்த ஜலம் போல உங்களிடமிருந்து சக்தி பீறிடுகிறது.

அது பழக்கதோஷத்தினால் இதுவரை செய்து வந்த பழக்கம் போல பாட்டாகவோ, ஆட்டமாகவோ, பேச்சாகவோ இருக்கலாம்.

அல்லது இவை எதுவுமல்லாது வெறும் பிளிறலாய் அன்புச் சிரிப்பாய், ஆவேசமான கூக்குரலாயும் இருக்கலாம். பாட்டும், ஆவேசக் கூக்குரலும் ஒரு ஆட்டமும் ஒரு வெளிறச் சிரிப்பும் ஒன்றே. ஒரே விதமான வெளிப்பாடே.